amirthaganesan book"வீரியத்தோடு வருகின்றன காரியப் படகுகள்" தலைப்பிலேயே ஒரு காரணத்தை வைத்திருக்கிறார் ஆசிரியர். காரணமின்றி காரியம் ஏது. எல்லா காரணத்துக்கும் ஒரு காரியமுண்டு. அதன் தொடர்பென நடந்து கொண்டிருப்பதை ஒரு கவிதை நூலாக்கித் தந்திருக்கும் அகன் ஐயாவுக்கு முதலில் நன்றிகளை சொல்லிக் கொள்ள வேண்டும். தமிழ் சமூகத்துக்கான ஜன்னல்களையும் கதவுகளையும் எப்போதும் திறந்து விட்டுக் கொண்டே இருப்பவன் தான் படைப்பாளி. அந்த படைப்பாளிக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அடிக்கடி சொல்லலாம். நோ கண்டிஷன்ஸ் அப்ளை.

கவிஞருக்கு இது 21 கவிதைகள் கொண்ட தொகுப்பு. நமக்கு 21லும் கவிதைகள் கண்ட திகைப்பு.

முதல் கவிதை "மகளதிகாரம்" என்று தலைப்பில்....

மகள் கொண்ட பேரெல்லாம் மானுடம் கொண்ட பேறல்லவா...!

போற்றி பாடும் மகள் இனத்தின் பெரும் இன்பம் யாதெனில்...... அது, மகள் ஒருநாள் தாயாகி அப்பன் தலை தடவும் நேரம். இதில் ஒரு வரி... "எங்கள் காகித கப்பலின் ராணியே..." என்று வருகிறது. நான் அங்கேயே நின்று விட்டேன். கவிழாத கப்பலுக்கும் கன்னத்தில் கை வைத்துக் காக்கலாம் போல. மிக நுட்பமான மெல்லிய கோடுகளால் ஆனது மகளுக்கும் தந்தைக்குமான உறவு. அதன் நேர்த்தி... அதன் கீர்த்தி...... மகளதிகாரத்தில்.... மினுங்குவதை மனதாரத்தான் படிக்க முடியும். மேய்ந்திடத் தோன்றும் நுனிப் புல் விவகாரமல்ல கவிதைகள். விழி நீர் தேங்க விதி மேல் தாங்க.....ஒளி கொண்ட உண்மையின் அசல் நகலென இந்நூலின் கவிதைகள்.

இன்னொரு வரி.......

"என் முண்டா பனியனுக்குள் முகிழும்
துண்டாகாத சூரியனே சுடர் ஒளியே..."

மனதுக்குள் தானாக கை கூப்பிக் கொண்டேன். வாழ்வில் சுடர் கொண்டோர் மட்டுமே....எழுத்தில் ஜுவாலையை கொண்டிருக்க முடியும். ஒரு கணம் ஆசிரியர்க்கு மகளாகி போனேன்.

அதே தலைப்பில் அடுத்துதடுத்து இரண்டு கவிதைகள்...

இரண்டாம் கவிதையில் ஒரு வரி...

"உப்பல் உடையாத பூரி....." ஹாஹ்... யதார்த்தத்தில் நிகழும் இயல்பானவைகளை அதே சொற்றொடர்களில் கவிதையாக்குவதில் உள்ள அந்த "அட..." அற்புதம் செய்து விடுகிறது. ஆசுவாச நுனியில் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும் தனித்த பறவையின் ஒற்றைச் சிரிப்பை உணர்கிறேன்.

"கால நிலத்தின் நதி நாள்கள்" இப்படி தலைப்பு வைக்கவே ஒரு பண்பட்ட பரந்துபட்ட மனம் வேண்டும். அது ஒரு வாழ்வில்.......தொன்று தொட்டு நிகழ்ந்த இலக்கிய வாழ்வின் வழியில் தான் உருவாகி இருக்க முடியும். இந்தக் கவிதையில் இருவரி என்னை இம்சித்தது.

பசிக்கு புசிக்காத
நட்சத்திர விடுதி மக்களுக்கு
எப்படி விளங்கும்..?

கரன்சி பெற்றோர்களுக்குப்
பிஞ்சுகளின் உட்தேடல்
எப்படி விளங்கும்...?

இங்கு விளங்கியவைகளை விட விளங்காதவைகள் தான் அதிகம். விலங்கின் தன்மை மிச்சமிருக்கும் மானுட பரிணாமத்தில் கலையும் இலக்கியமுமே மனித ஆழ்மன கோணல் மாணல்களை தலைதட்டி சரி செய்கின்றன.

"ஒரு கவிதையாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்" என்ற ஒரு கவிதையில் இந்த வாழ்வின் போதாமை பூடகமாக விளங்குகிறது. யாரோ எப்போதோ சொன்ன கவிதை ஒன்று.. "இந்த வாழ்நாளில் ஒரே ஒரு நல்ல கவிதை எழுதி விட்டால் போதும்.. வாழ்வு நிறைந்து விடும்" என்று அப்படி ஒரு கவிதையாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.... அது மொத்த வாழ்வின் அர்த்தமாக மாறி முதுமையில் உங்களையும்.....உங்களுள் இருக்கும் காதலையும் அது செம்மைப் படுத்தும் என்கிறார். மானுடக் கொடியவை முதுமை. அதன் கசப்பை நீங்கள் ஒரு நல்ல கவிதையைக் கொண்டு தான் கடக்க முடியும்.

"கருப்பனும் சுப்பனும் கைது..... தீவிர வாதம் நாட்டின் முடக்கு வாதம்" என்று முடியும் கவிதை இன்றைய காலத்தின் கண்ணாடி. எந்த உரிமை இப்போது மிச்சம் இருக்கிறது. அந்த உரிமையையும் பறித்து விட கொக்காகி நிற்கும் பாசிச அரசின் எதிர் கோட்டில் நீருமில்லை....நீதியுமில்லை. ஆகவே தான் தலைப்புக்குத் தகுந்த மாதிரி "தொலையும் முன் துலங்கு" என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

வாழ்வின் பெரும் பகுதி கேள்விகளால் ஆனதுதான். அதன் திரட்டில் "வினா தெளியும் முன் மரணம் எதற்கு" என்றொரு கவிதை. சிந்திக்காத சொற்களில் கலை இல்லை. சிந்திக்க வைக்காத சொற்களில் கலைஞன் இல்லை. ஒவ்வொரு மூன்று வரிக்குள்ளும் ஒரு கேள்வி இருக்கிறது. கேள்வி இருக்குமெனில் பதிலும் இருக்கும் தானே.

"ஓசையின்றி மலரும் பூக்கள்
சப்தம் எழுப்பும் ஈக்களைப்
பொறுத்துப் போவது எப்படி...?" இப்படி ஒரு கேள்வி.

"எல்லா வினாக்களுக்கும்
வாழ்க்கையே விடை எனில்
வினா தெளியும் முன் மரணம் எதற்கு...?" இப்படியும் ஒரு கேள்வி.... கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது தான் அதன் சுவாரஷ்யம். பதில்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுதான் வாழ்வின் பொருள். இரண்டையும் பொருத்திப் பார்க்க.......இடையே கவிதை ஆக்கி இருக்கிறார் ஆசிரியர். வளைந்த போதெல்லாம் உடைய வேண்டியதில்லை. உடையும் போதெல்லாம் வளைய வேண்டியதில்லை. ஆன்ம ஞானத்தின் பெரும் கொப்பளிப்புகளை கேள்வி செய்து கவிதை ஆக்கி இருப்பதை தேடலோடு தான் உணர முடியும்.

"சிலர் ஒன்று கூடி ஒரு கவிதை எழுதினார்கள்" என்ற கவிதையில் இறுதியில் வரும் அந்த சிறுவன் நானாகவும் இருக்கலாம். நீங்களாகவும் இருக்கலாம். இருப்பது பற்றி என்ன இருக்கிறது. இல்லாமல் இருப்பது தான் இங்கிருப்பது என்று தத்துவ சாரத்தின் ஜன்னல்கள் வழியே எந்த மொழியில் நீங்கள் கவிதை எழுதினீர்கள் என்ற கேள்விக்கு நாம் தான் பதில். நாமேதான் பதில்.

ஐயாவின் கவிதைகளில் இழையோடும் குறியீடுகள் பற்றி பத்தி பத்தியாக எழுதலாம். வரி வரியாக புரிந்து கொள்ளலாம். இவ்வாழ்வின் மேன்மைப்படுதலின் நலன் பற்றி....பண்படுதலின் தேவை பற்றி........ இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிறைய சொற்களில் சமூக அக்கறை.. நிறைய சொற்களில்...வாழ்வின் பொருள்..... என்று நீண்ட நெடும் சிந்தனையை விதைக்கும் நூலை இன்னொரு முறையும் வாசிக்கலாம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய எல்லாமும் இருக்கிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட சொற்களால் கனக்கச்சிதமாக செய்த வேலைப்பாடு பிரமாதம்.

" ஐயா ஈரோடு தமிழன்பன்" அவர்கள் ஒரு முறை சொன்னது போல...."கவிதை என்பது ஒரு தச்சு வேலை போல...." எத்தனை இழைக்கிறோமோ அத்தனை லட்சணம் அதற்கு.

"இரவு எனக்கு மிகவும் பிடித்த பொழுது" என்றொரு கவிதையில்....

"இரவு என்னோடு பேசும்
இரகசியங்களைக் காத்திட
பகலை நான் விரும்புவதில்லை"

என்னடா எப்படி சொல்லிட்டாரே என்று பகல் சிமிட்டும் வெளிச்சத்தின் இமை திறக்கிறேன்.

"இரவை அழைக்கும் மந்திரக்காரன் பகலென்பதால்
பகலை நான் வெறுப்பதில்லை"

என்று அடுத்த வரையில் அடித்தாடுகிறார்.

அதுதான் இரவின் அடர்த்தி. இரவென்பதை இரவோடு நிறுத்தி விடுவதில்லை கவிதை........உணர்கையில்..... இன்னும் கூடுதல் ஆழம் கொள்ளும் இக்கவிதை.

"மலைகளிடையே யுத்தம்"
"பார்வைகள் பலவிதம்"
"கண்ணாடி கொத்தும் காகங்கள்" என்று மனதின் மையம் நோக்கி குவியும் கவிதைகள் அற்புதங்கள் செய்வன.

அறையின் மூலைக்குள் அமர்ந்து கவிதை எழுதியது போதும். உன் வரியை என் வரியை ஆட்டையை போடும் அதிகார அரசியல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க.. அங்குலம் அங்குலமாகவேனும் வீட்டை விட்டு வெளியே வா.......அது செத்து மடிவதற்குள்ளாவது நடக்கட்டும் என்று கட்டளையிடுகிறார். சான்றோரின் கட்டளைகள் தான் பரிணாமத்தின் அடித்தளங்கள். நிஜம் சுடுவதை வரிகளில் நான் கண்டேன். கைமீறிய அரசியல் குற்றங்கள்... கைமீறிய அதிகார தோரணங்கள்......சாமானியனுக்கு இல்லாமலே போகும் வாழ்வை இனியும் எழுதிக் கொண்டே இருந்தால் எப்படி.. எழுந்து வந்து எதிர் நின்று கேள்....நண்பா என்கிறார். இனி கேட்போம்.

கோடரி என்றொரு கவிதை

கோடரி கொண்டு மனித சமூகத்தின் மண்டையில் அடித்து விதை நடுகிறது. மிக அற்புதமான இத்தொகுப்பில் ஆக சிறந்த கவிதை இது.

ஒரு விதை ஊன்றுங்கள்
ஆயிரம் புற்கள் நிழலாடும்
நூறு கிளிகள் பாடி மகிழும்
ஐம்பது வௌவால்கள் பசியாறும்
உடல்கள் உறங்கி கனாக்காணும்

ஊன்றியது பழப்பு நிறம் தான்
வண்ண விளைச்சலாய்
எத்தனை வானவில்

பசுமை விரிப்பாய் இலைப் போர்வை
சிவப்புக் கம்பளமாய் பூங்கொத்து
மஞ்சள் ருசியாய் பழக்கூடைகள்
பழுத்த பரப்பாய்ச் சருகு மெத்தை

எல்லாம் சொல்லி விட்டு இறுதியில் ஆழ்மன அரக்க சமூகத்தைப் பார்த்து சாட்டையால் விளாசியது போல ஒரே ஒரு கேள்வி......ஒற்றைக் கேள்வியில் உயிர் நெக்குருகும் அவ்வரிகள் இங்கே....

"மனிதன் கையில் மட்டும்
கருப்பு வண்ணத்தில் கோடாரி"

கோடரி எவ்வண்ணத்தில் இருப்பினும் அது அதை அழித்தொழிக்க வேண்டும்.. என்பது தான் உலக தத்துவம். யாதும் ஊரே யாவரும் கேளீர் சொன்ன வழியில் வந்தவர்கள் நாம். அதன் நீட்சியென ஒரு விதியின் வீரியத்தை கவிதைக்குள் போட்டு வளர்த்த அகன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் எப்படி சொல்ல. வணங்குகிறேன்.

- கவிஜி

Pin It