எழுத்தாளர் ஞாநி ஒருங்கிணைத்து நடத்தும் பரீக்ஷா நாடகக் குழு சார்பாக ‘பலூன்’ நாடகம் கடந்த 25-அக்டோபர் 2009 அன்று சென்னை அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெற்றது. நாடகத்தை ஞாநி எழுதி இயக்கியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னரே அரங்கேறியிருந்த பலூன், பல புதுமுகங்களுடன் மீண்டும் அரங்கேற்றப்பட்டிருந்தது.
கதை மாந்தர்கள் சமூகக் கோபமும், அக்கறையுமுள்ள 6 பிரஜைகள். ஒரு இளம் கவிஞன் சத்யன், ஒரு வேலையில்லாப் பட்டதாரி - ஆனந்தன், சக மக்களுக்காக தொடர்ந்து அரசாங்கத்துடன் போரடிக்கொண்டிருக்கும் நடுத்தர வயது இஸ்லாமியன் இப்ராஹிம், சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தம் மக்களை மீட்கப் போராடும் ஒரு தலித் இளைஞன் சிங்காரம், பாலின ஒடுக்குமுறைகளுக்கெதிரான குரலுடன் ஒரு இளம் பெண் உஷா, அதிகாரச் சுரண்டல்களுக்கெதிரான ஒரு தொழிலாளி-தொழிற்சங்கவாதி இரகுநாதன்.
அரசின் சமீபத்திய பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டமொன்றை நடத்தும் புள்ளியில் இந்த அறுவரும் இணைகிறார்கள். தொடர்ந்து இவ்வாறே பேருந்துக் கட்டணம் உயருமானால் மக்கள் பலூனைப் பிடித்துப் பறந்துதான் காற்றின் திசையில் இலவசமாகப் பயணிக்க முடியும் என்பதாக பலூன் பிடித்தவாறு அரசைக் கண்டித்து ஊர்வலமும், கூட்டமும் நடத்துகிறார்கள். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஊர்வலத்தில் ஆண்கள் மேலாடை மட்டும் அணிந்தும், பெண் முகமுடி அணிந்தும் பங்கேற்கிறார்கள்.
அரசின் ஏற்பாட்டில் சிறு சலசலப்புடன் கண்டனக் கூட்டம் சிதறடிக்கப்பட்டு, அறுவரும் வன்முறையைத் தூண்டியதாகவும், பொது இடத்தில் ஆபாசாமாக நடந்து கொண்டதாகவும் வழக்கு தொடரப்பட்டு கைதாகிறார்கள். இவர்களின் மீதான இந்த பலூன் சதி வழக்கின் நீதிமன்ற விசாரணையில் நாடகம் முன் நகர்ந்து செல்கிறது.
மிக இயல்பான பாத்திரப் படைப்பும், அவற்றில் பொருந்திய நடிகர்களும் நாடத்தின் பலம். குறிப்பாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து நரைத்த நடுத்தர வயது இஸ்லாமியன் இப்ராஹிமின் பாத்திரமும், கச்சிதமாக பாத்திரத்தில் பொருந்தி நடித்த பாலாஜியையும் குறிப்பிடலாம். தன் இந்துத்துவ முகத்தை மறைக்க, கரம்சந்த் லாலா எனும் இந்துப் பாத்திரத்தை ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் ஒட்டவைக்க முயன்று தோற்ற கமல்ஹாசனைப் போல் அல்லாமல் நாடக ஆசிரியர் மிக நேர்மையாகவே பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு இஸ்லாமியனுக்கும், ஒரு தலித்துக்கும், ஒரு பெண்ணுக்கும் பாத்திரங்களை இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தினாலன்றி, சமூகப் போரட்டங்களில், அக்கறையில் இவர்களின் இடம் அல்லது பங்கு இயற்கையானது அல்லது நிதர்சனமானது என்பதாகவே பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற விசாரணைக் காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் விஜயன் பாத்திரத்தை படு நேர்த்தியாக உடல் மொழியின் துணைக்கொண்டு செய்திருந்தார் பாலா. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாத்திரத்தில் விபூதி வைத்த அம்பி கிருஷ்ணமூர்த்தியாக ஒரு புதுமுகம். அரசுத் தரப்பு அம்பி கிருஷ்ணமூர்த்திக்கு சாதகமான, வாழ்வில் ஒரே ஒருமுறை பேருந்துப் பயணம் செய்த ஃபில்டர் காபி நீதிபதி பாத்திரத்தில் அசத்தியிருந்தார் ராம்ஜி.
குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவரான தலித் இளைஞர் சிங்காரம், தன் சார்பாக டாக்டர் அம்பேத்கர்தான் வாதாட வேண்டும் அல்லது தந்தைப் பெரியார் வாதாட வேண்டும் எனும் கோரிக்கையில் உள்ள வேதனையான உண்மை, அந்த இரு தலைவர்களுக்குப் பின் ஒடுக்கப்படுவோர்க்கான சரியான தலைமைகளோ, பிரதிநிதிகளோ உருவாகவில்லை என்பதே. பின் சிங்காரம் தனக்காக தன்னையே வாதாட அனுமதிக்குமாறு கோரும்போது, சமகால நீதிமன்றங்களில் தலித் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விகளோடு, ஒரு தலித்தின் ஞாயங்களையும், பிரச்சனைகளையும் ஒரு தலித் அல்லாதவரால் எந்த அளவுக்கு புரிந்துக்கொள்ளமுடியுமென்பதையும் சேர்த்தே எழுப்புகிறது.
சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் அங்கிங்கெனாதபடி பரந்து விரிந்துள்ள சாதியின் இறுக்கமான பிடியிலிருந்துதான் நீதிமன்றம் என்றழைக்கப்படும் ஒன்றும் சௌகர்யமாக இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்திய பலூன் சதி வழக்கு, பார்வையாளர்களின் மனசாட்சிக் கூண்டுகளில் நம் நீதிமன்றங்கள் மீதான ஒரு புதிய விசாரணையை ஆரம்பித்து வைக்கிறது.
சாமான்யர்களின் மீதான ஒரு வழக்கின் போக்கு, சாமான்யர்கள் என்பதாலேயே வழக்கை அரசு கையாளும் விதம் மற்றும் இந்திய நீதி அமைப்பின் மீதான மதிப்பீடுகள் குறித்த தாக்கங்களை பார்வையாளன் மீது ஏற்படுத்த இயக்குநர் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு வசன தர்க்கங்கள் ஓரளவுக்கு மட்டுமே உதவ முடியும். நம் நீதி அமைப்பின் கிழிசல்களோடு நின்றுவிடாமல், பார்வையாளன் முன் அதை நிர்வாணப்படுத்துவதில்தான் ஒரு தேர்ந்த நாடகக் கலைஞனின் நுணுக்க வேலைப்பாடுகள் தேவைப்படுகின்றன. அம்மாதிரியான ஒரு மௌனக் காட்சியமைப்பில் பார்வையாளனை உறையச் செய்து, சமூக நிஜங்களை அவனில் transplant செய்யும் வேலையை நாடகம் செய்ய வேண்டியிருக்கிறது. இறுக்கமான காட்சியமைப்புகளால் மட்டுமல்லாமல் இதைச் சாதிக்கும் கருவியாக ‘பகடிகளை’ பல நேரங்களில் நாடகங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நம் போதனா முறைகள் மற்றும் பள்ளிச் செயல்பாடுகள் குறித்த பல ஆழமான கேள்விகளை பகடிகள் மூலம் பார்வையளனில் transplant செய்த நாடகமாக தமிழில் ‘பவுன்குஞ்சு’ நாடகத்தைச் நினைவுகூறலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆண்களுக்கு தலா ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரே பெண்ணான உஷாவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. பாலின பேதங்களில் பெண்ணை சிறுமைப் படுத்தாமல் தனக்கும் ஆண்களைப்போலவே ஆறாண்டுகள் சிறைத் தண்டனையைக் கேட்கும் உஷா பாத்திரத்தை நிறைவாக செய்திருந்தார் ஐஸ்வர்யா. பலூன் ஊர்வலத்தில் மேலாடை மட்டும் அணிந்து வரும் ஆண்களின் ஏற்பாட்டையும் சேர்த்தே உஷா கேள்வி கேட்டிருக்கலாம். பெண்களை கணக்கில் கொள்ளாமல், போராட்டக்களங்களை ஆண்கள் சார்ந்த ஒன்றாக நிறுவும் அரை நிர்வாணப்போராட்டத்தை பார்வையாளனிடம் முன்னிறுத்தாமல், பெண்களையும் சமமாக உள்ளடக்கும் வேறொரு நூதனபோராட்ட வடிவத்தை இயக்குநர் கையிலெடுக்கலாம்.
பலூன் சதி வழக்கை நாடகமாக எழுதும் எழுத்தாளர் ஜீவானந்தம் பாத்திரத்தில் ஞாநி நடித்திருந்தார். வழக்கு முடிந்த பல ஆண்டுகளுக்குப்பின், பலூன் நாடக ஆசிரியர் ஞாநியிடம் ஒரு பேட்டியின்போது, பலூன் சதி வழக்கின் நிஜப் பாத்திரங்கள் யார் யார்? இப்போது என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. சமூகக் கோபங்களோடு புறப்பட்ட ஆறு இளைஞர்களை காலம் என்னவாக மாற்றியிருக்கிறது என்பதற்கான பதிலை வறுமை மற்றும் நோயின் பிடியில் சிக்கியிருக்கும் பலூன் எழுத்தாளர் அவிழ்க்கிறார். ஒவ்வொருவரின் இன்றைய நிலையும் திரையில் காட்டப்படுகிறது.
காலமென்னும் பெரிய பலூன் ஒவ்வொருவரையும் புதிய திசைகளில் இறக்கிவிட்டிருக்கிறது. கவிஞன் சத்யன் ஒரு மசாலாப் பாடலாசிரியராகவும், தொழிற்சங்கவாதி ரகுநாதன், அரசுத்துறைகளை தனியார்க்கு விற்கும் Industrial Minister ஆகவும், தலித் இளைஞன் சிங்காரம் கூட்டணி பேரம் பேசும் ஒரு தலித் கட்சித் தலைவராகவும் மாறியிருக்கிறார்கள். சுரண்டல் சமூகத்தால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டவர்களான இவர்களைத் தவிர மேலும் மூவரில் இப்ராஹிம் அலுத்துப் போய் காலமாகியிருக்கிறார், வேலையில்லாப் பட்டதாரியான ஆனந்தன் ஒரு நக்ஸலைட் குழுத் தலைவனாகிறான், உஷா பலூன் வழக்கை நாடகமாக எழுதிய நோயாளி ஞாநியின் உடல்நிலை கவனித்துக்கொண்டு நாட்களை கடத்துகிறாள்.
மற்றவர்களில் வழக்கறிஞர் விஜயன் ஒரு NGO நடத்துபவராகவும், நீதிபதி நடராஜா சுந்தரம் ஒரு மாநில கவர்னராகவும் மாறியிருக்கிறார்கள். அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்னவாகியிருப்பார் என்பதை திரையிடவில்லை. கிருஷ்ணமூர்த்தி நீதிபதி இருக்கையில் அமர்ந்து ஒரு அசட்டுச் சிரிப்புடன் ‘Objection Sustained’ என்று நாமம் போட்ட ஒரு வழக்கறிஞரைப் பார்த்து சொல்வதாக திரையிட்டிருந்தால் அது ரியலிசத்தின் உச்சமாகவும், தற்போதைய நீதிபதி நியமன முறையை அம்பலப்படுத்தும் காட்சியாகவும் அமைந்து நாடகத்தை வேறொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கும்.
பயன்படுத்தப்பட்ட செட் மற்றும் இசையில் இருந்த ஜனரஞ்சகத்தன்மை, நாடகத்தின் உள்ளடக்கம் குறித்த படிமங்களையும் குலைக்க நேரிடும் அபாயத்தை இயக்குநர் உணர்ந்தேயிருப்பார். மற்றபடி, பலூன், அவசியம் பார்க்கவேண்டிய ஒரு நாடகம்.
- பாஸ்கர்