நாடகக் கலைஞர் தோழர் பிரளயன் அவர்களின் பேட்டி (திறப்பு) மிகவும் முக்கியமான -அவசியமான ஒன்று. அதை சிரத்தையுடன் பிரசுரித்த புதுவிசை பாராட்டுக்குரியது. மிகவும் விரிவான, பல்வேறு அம்சங்களில் - விஷயங்கள் குறித்து பேசிய அப்பேட்டி மூலம் அவரது பல்துறை சார்ந்த ஈடுபாடு, அறிவு தெரிய வந்தது. ஒரு நாடகக்காரரை நாடகத்தோடு மட்டுமே குறுக்காமல் அதைத்தாண்டிய ஒருநிலையில் பார்ப்பதாகவும் இருந்தது. அதற்கேற்ப பிரளயனின் அனுபவமும் பார்வையும் விரிந்த ஒன்றுதான்.
கடந்த இருபதாண்டுகளாக பிரளயனின் நாடகச் செயல்பாடுகளை கவனித்து வருபவன் என்ற முறையில், அவரது நாடகப் பயணம் சவாலான ஒன்று என்பேன். பெரிய ஆதரவு இடம் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்த செயல்பாடுகளை, தனிநபர் தாண்டிய ஒன்றாகவே பார்க்க வைக்கிறது. அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்துவரும் சென்னை கலைக்குழுவின் செயல்பாடுகள் வழி பல குழுக்கள் உற்சாகம் பெற்று கலைச் செயல்பாடுகள் விரிந்ததும் நிகழ்ந்துள்ளது. சென்னை கலைக்குழுவின் நாடகங்களை பலர் கண்டு கொள்ளாத நிலையில் அவை பிற நாடகங்கள் பங்கேற்ற நாடக விழாக்களில் கலந்து கொண்டபோது, பலரும் நாடகத்தோடு நெருங்க முடிந்தது. முறையான பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டிருந்தால் சென்னை கலைக்குழு இன்னும் பாதிப்பு - வீச்சை கூட்டியிருக்கும்.
பிரச்னை சார்ந்த ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போதும் தற்போது சரியான நாடக உத்தியை கண்டெடுத்து அதை ஆடல்-பாடல்வழி அழுத்தமாய் முருகியல் தன்மையோடு வழங்குவதை கவனித்து வருகிறேன். செ.க. குழுவின் செயல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை தொடர்ந்து கலைத்துறையில் நுட்பமாய் கவனிப்பவர்கள் கூடுதலாய் அறியமுடியும்.
பேட்டியில் அவர் சொல்லும் ‘பறைநிலை’ ‘பார்ப்பன நிலை’ என்று பிரிவு சாத்தியமா என்பது தெரியவில்லை. அதேபோல் Oral tradition தலித்தாகவும் Texual tradition அக்ரஹாரமாகவும் சொல்லமுடியுமா? சாதி இந்துக்களின் ஆதிக்கம், பார்ப்பனியம் பல தளங்களில் விரிந்து கிடக்கும்போது, ஒடுக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட தலித்துகளின் கலை-சொல்லாடல்கள் முழுதாய் வெளிவராத நிலையில் அப்படியான பிரிவின் பார்வையை விரிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த வகையில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்னையை எப்படிப் பார்ப்பது? அதை எந்த நிலையில் சேர்க்கமுடியும்?
“நவீன நாடகத்திற்கு பார்வையாளர்கள் இல்லை 100, 200 பேருக்குமேல் தமிழ் நாட்டில், சென்னையில் 60, 70 பேர்தான் உள்ளதாகச் சொல்வது சரியானதல்ல. சமீபத்தில் மதுரையில் நடந்த நாடக விழாவிற்கு ஆயிரம் பேர் வந்துள்ளனர். ஞாநி தனது ‘வட்டம்’ நாடகத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் மேடை யேற்றியபோது முன்னூருக்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். பாண்டிச்சேரி, கம்பன் கலையரங்கில் பெரும்பாலும் நானூறு ஐநூறு பார்வையாளர்களுடன் தான் நான் நாடகம் பார்த்துள்ளேன். சுபமங்களா, நிஜநாடக இயக்கம், சங்கீத நாடக அகாதமி விழாக்களில் பார்வையாளர்களை பெருமளவில் பார்க்க முடிந்தது. ஏன் சமீபத்தில் சென்னை கலைக்குழுவின் ‘பவுன்குஞ்சு’, அலயான்ஸ் பிரான்ஸேஸ் திறந்த வெளியரங்கில் மேடையேறியபோது மிகுந்த உற்சாகத்தோடு சுமார் இருநூறு பேர் பார்த்தனர். உண்மையில் பார்வையாளர்களை நாடகம் பக்கம் கூடுதலாய் திரும்பாமல் செய்தது நாடகக்காரர்கள் அதிலும் குறிப்பாக நவீன நாடகக்காரர்கள் தான். ஆனாலும் நல்ல நாடகம் பார்க்கத் துடிக்கும் பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இனியாவது விரட்டும் வேலையை நிறுத்த வேண்டியுள்ளது. “பேரா.சே.இராமானுஜம் நாடக இயக்கம் பார்வையாளனை நிற்க வைக்கும் மத்தவங்க அந்த மாதிரி சவாலை எடுக்கறதேயில்லை” என்கிறார் பிரளயன். உண்மையில் நாடகப்புரிதல் பலருக்கு (இயக்குனர்கள்) இல்லையென்றே சொல்லலாம். பலமுறை ஏன் இவர்கள் நாடகம் செய்கிறார்கள் என்று, நாடகத்தைப் பார்த்து குழம்பியதை விட நாடகக்காரர்களைப் பார்த்து குழம்பியது உண்டு. விமர்சனத்தை நட்பாக வைத்தாலும் எழுத்தில் பதிவு செய்தாலும் அதை நிராகரிப்பதில்-தங்களை நியாயப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்களே தவிர விமர்சனத்தை சினேகமாய் கேட்பது - உள்வாங்குவது கூட பலரிடம் இல்லை என்பதை பலரின் மொண்ணையான - குழம்பிய நாடகத் தயாரிப்புகளின் வழியே பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
பார்வையாளர்களை நிற்க வைக்கிற பட்டியலில் நான் பிரளயனையும், வேலுசரவணனையும் சேர்க்க நினைக்கிறேன். சவாலை ஏற்கும் வகைக்கு அதிக கற்பனை - உழைப்பை செலுத்தும் வகைக்கு முருகபூபதியை அழுத்தமாய் சொல்லமுடியும். இங்கு ஐக்யா குழுவினரும், ஆடுகளம் குழுவினரும் சிரத்தையான - அர்த்தப் பூர்வமான நாடகச் செயல்பாடுகள் செய்யப் புறப்பட்டவர்கள் என்பதை பதிவு செய்கிறேன். அவ்வாறான குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் இன்றைய நாடகச் சூழல் வேறுமாதிரி இருக்க வாய்ப்பிருப்பதாகப்படுகிறது.
“ஞாநி, மங்கை, பிரவின், மு.ராமசாமி, ராஜீ, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலு. சரவணன், முருகபூபதி - ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பாணி” என்பதை சிறப்பாகச் சொல்லுகிற அதேநேரம், இப்படியான ‘பன்முகத்தன்மை’ சாதித்தது என்ன? என்று பார்க்கும்போது, அவை பலரிடம் பெருத்தத் தன்முனைப்பின் அடையாளங்களாகவும் தெரிகின்றன.
பிரளயனின் நாடக உருவாக்கம், பயிற்சிமுறை, அவர் சந்தித்த நாடகச் சவால்கள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் விடுபட்டுள்ளன.
பதிவுகள் - சிவக்குமார் முத்தய்யா
தமிழில் காலாண்டிதழ்களாக சில இயங்கியபொழுது இருந்த அடர்த்தி மாத இதழாக மாறும்பொழுது வெகுசன தன்மையை பெற்று விளம்பரங்களை பக்கங்களில் நிறைத்துக்கொண்டு வாசகனுக்கு ஏமாற்றத்தை தரும் சூழல் சமீபத்திய நிகழ்வுகள். ஆனால் புதுவிசை தொடர்ந்து வரவில்லை என்றாலும் அது தன்னுடைய ஆளுமையை சில இதழ்களிலேயே பதித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதழ் 10ல் வேறு எந்த இதழிலும் காணாத அளவிற்கு முப்பத்தாறு பக்கங்களைக் கொண்ட ஒரே நேர்காணல் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அமைப்பு சார்ந்து இயங்குதல் மற்றும் நாடகம் சார்ந்த திறந்த விமர்சனங்கள், இலக்கியம் சார்ந்த கதையாடல்கள், நாடகாசிரியனுக்கு இருக்கக்கூடிய கூர்மையான நுட்பங்கள் என்று பன்முகமான ஒழுங்குப்படுத்தப்பட்ட பார்வை கொண்டவராக அமைப்புச் சார்ந்து இயங்கும் கலைஞர்களில் முக்கியமானவராக பிரளயனை அறியமுடிகிறது.
நா. முத்துமோகன் புதிய தளத்தில் அம்பேத்கரை விவாதிக்க முயன்றிருக்கிறார். ஏற்கனவே சிலர் இதுபோன்ற கருத்தாடல்களை நிகழ்த்தி இருந்தாலும் இன்னும் கூடுதலான தீவிரத்தை அடையவேண்டும். என்.எஸ் மாதவனின் இரை சிறுகதை யதார்த்தவாத கதை போன்றுதான் அமைந்துள்ளது. ஆண்-பெண் பற்றிய லேசான சித்திரம் எந்த முரண்நகையோ, தீவிரத்தையோ எழுப்பாது சிறு அசைவோடு முடிவுற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. முஜிபுர் ரஹ்மான் மிகு கற்பனை கொண்ட மாய யதார்த்த வகை எழுத்தை உருவாக்குகிறார். கனமான அதிர்வுகளை கொண்ட நல்ல கதையை வாசித்த அனுபவத்தை தருகிறது. “ஆனாலும் இது கதையல்ல” புனைவின் தீவிரமான இழையால் பின்னப்பட்டாலும், ஒரு சமூகத்தின் தீவிரமான கூர்மையான விமர்சனத்தை கொண்டதாக அமைகிறது. பொதுவான கதைகூறல் முறையை மீறுவது என்பது ‘பொது புத்தியின்’ மீதான எதிரான அம்சம்தான். சமகால அரசியலை மிக சரியாக மையப்படுத்தி சமீபத்தில் இதுபோன்ற கதை வரவில்லை என்று நினைக்கிறேன்.
கவிதைகள் அவ்வளவு அழுத்தம் பெறவில்லை என்று நினைக்கிறேன். தொடர்கள், அட்டைப்பட வடிவமைப்பு, ஓவியம், ஓவியன் கஸ்டவ் கிளிம்ட் குறிப்புகள் மிகுந்த மன சலனத்தை ஏற்படுத்தின.