தமிழ்நாட்டின் ‘இலக்கியக் களஞ்சியம்’ திருநெல்வேலி மண்ணிலிருந்து புறப்பட்ட தமிழறிஞர் இரா. பி. சேதுப்பிள்ளை, இரசிகமணி டி.கே. சிதம்பரநாதன், பாஸ்கரத் தொண்டைமான், சு. சமுத்திரம், ஜோ டி குரூஸ், கு. அழகிரிசாமி, தொ. பரமசிவம், தேவதச்சன், பூமணி, கி. இராஜ் நாராயணன், தி.க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன், வண்ணதாசன், வண்ண நிலவன், கலாப்பிரியா போன்றோர்கள் பலரும் தங்களது கலை இலக்கியப் படைப்புகளுக்காக ‘சாகித்ய அகாடமி’ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்று தமிழ் இலக்கிய உலகிற்கு அணி சேர்த்துள்ளனர்.

mu ramasamyஇயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் மூன்றாம் தமிழாக விளங்கக்கூடிய நாடகத் தமிழுக்கும் செழுமை ஊட்டியிருக்கிறது நெல்லை மண். பாளையங் கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் முனைவர் மு. இராமசாமி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் தமிழ் நாடகத் துறைக்கு ஆற்றியிருக்கின்ற பணி குறிப்பிடத்தகுந்தது.

கடந்த 1973-ஆம் ஆண்டில், ‘தமிழகத்தில் தோற்பாவை நிழற் கூத்து’ எனும் தலைப்பில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு, 78இல் முனைவர் பட்டம் (பி.எச்.டி.) பெற்றவர்.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் ‘நாட்டுப்புறவியல்’ துறை விரிவுரையாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறைத் தலைவர், உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல் காப்பியர் பேரவை இயக்குநர் எனப் பல பொறுப்புகளைத் திறம்பட அலங்கரித்துப் பெருமை பெற்றவர்.

‘கலகக்காரர் தோழர் பெரியார்’ எனும் நாடகத்தை உருவாக்கி, பெரியாருக்குச் சிவப்புச் சட்டையை அணிவித்து பல தரப்பினருக்கும் அதிர் வலைகளை ஏற்படுத்தி, நாடகத்தை இயக்கியும், பெரியா ராகவே நடித்தும் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இவர். ‘திராவிட இயக்கமும் கலைத் துறையும்’ என்ற ஆய்வு நூலை எழுதியவர்.

தேசிய அளவில் இவரது நாடகங்கள், பல விழாக்களில் பங்கு பெற்றுப் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று, தன் நடிப்பால் அவற்றுக்கு மெருகூட்டியவர்.

பொதுவுடைமைப் பேராசான் காரல் மார்க்ஸ், சமூக விஞ்ஞானிகளான தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரைத் தனது வழிகாட்டிகளாகக் கொண்டு பாடாற்றி வரும் இவர், நடித்து அண்மையில் வெளி வந்துள்ள ‘கே.டி. (எ) கருப்புதுரை’ எனும் திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்று, திரையுலகில் கடந்தாண்டு வெளி வந்த சிறந்த படங்களில் ஒன்றாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன உணர்வாளரான இந்த ‘முதுபெரும் இளைஞர்’ பேராசிரியர், முனைவர் மு. இராமசாமி அவர்களை, ‘நிமிர்வோம்’ இதழுக்காகப் பேட்டி கண்டோம். பேட்டி கண்டவர் தோழர் ‘தடா’ ஒ. சுந்தரம்.

கேள்வி : பொதுவுடைமை இயக்கப் பற்றாளராக எவ்வாறு உருவானீர்கள்?

பதில் : நான் தொடக்கத்தில் திராவிடரியக்கப் பற்றாளர். அதுதான் என்னை பொது உடைமை இயக்கச் சிந்தனைத் தளம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

1965இல், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான் போராட்ட ஊர்வலங்களில் பங்கேற்று, முதல் வரிசையில் முழக்கம் இட்டுச் செல்வேன். எனக்கு நல்ல குரல்வளம் என்பதால் என்னை முன்னிறுத்தி விடு வார்கள்.

பாளையங்கோட்டையில் எங்கள் வீட்டிற்கருகில் ‘கண்ணன் யாதவ வாசக சாலை’ என்பது இருந்தது. அங்கு, நம்நாடு, முரசொலி, காஞ்சி, மாலைமணி, மன்றம் போன்ற இதழ்களைப் படிக்க வாய்ப்பு இருந்தது. அவை எனக்குள் தமிழ்மொழிப் பற்று, இந்தி எதிர்ப்பு உணர்வுகளை ஆழமாக வேரூன்றச் செய்தன.

பாரதிதாசன், முடியரசன் போன்றோரின் கவிதைகள் இளைஞனான எனக்குள், கவிதைகள் எழுத வேண்டும் எனத் தூண்டியது. இவர்களது கவிதைகளில் ‘விருத்தம்’ என்பது பரவலாக அமைந் திருக்கும். அந்த வகையிலேயே கவிதைகள் எழுதத் தொடங் கினேன்.

பிறகு 1968-71 காலகட்டத்தில் நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயற்பியல் - இள அறிவியல் மாணவனாகப் பயின்றபோது, கார்லோஸ் என்பவர் எனக்குத் தமிழ் விரிவுரையாளராக இருந்தார். இவரது புனைப் பெயர் தமிழவன் என்பதாகும். அன்றைக்கு வெளி வந்த பல இதழ்களில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதி வந்தார்.

ஒரு முறை தமிழ்த் தேர்வு எழுதியபோது, நானாகவே சொந்தக் கவிதை ஒன்றை எழுதி, ‘ஒரு கவிஞர் எழுதியதுபோல’ என்று தேர்விலே எழுதியிருந்தேன். அதனை மிகவும் இரசித்த தமிழவன் (கார்லோஸ்), ‘யார் அந்தக் கவிஞர்?’ எனக் கேள்விக் குறி போட்டு விட்டார். பிறகு என்னை அழைத்துக் கேட்டு, உண்மை அறிந்ததும் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

அப்போது எங்கள் பகுதியில் நா. வானமாமலையின் ‘ஆராய்ச்சி வட்டம்’ செயல்பட்டு வந்தது. அதனோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, பல புதிய தோழர்களின் அறிமுகம் கிடைத்தது.

இந்தச் சூழலில் எனது நோட்டுப் புத்தகங்களில், ‘காமராசருக்குப் பதில்’, ‘காங்கிரசுக்குப் பதில்’ என்றெல்லாம் பல கட்டுரைகளையும், திராவிடர் இயக்கச் சிந்தனை கொண்ட கவிதைகளையும் நிறைய எழுதி வைத்து, அதனை நான் நண்பர்களிடத்தில் படித்துக் காண்பிப்பேன்.

இதையெல்லாம் கூர்ந்து கவனித்த ஆசிரியர் தமிழவன் என்னை அழைத்துப் பாராட்டி விட்டு, ‘எல்லாம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நீ இருக்கும் இடம் தான் சரியில்லை’ என்று கூறிவிட்டு, கையில் இருந்த ‘தாமரை’ இதழையும், ‘நடை’ என்ற இலக்கிய இதழையும் கொடுத்து, ‘இவற்றைப் படித்துப் பார்’ என்று கொடுத்தார்.

ஏற்கனவே திராவிடரியக்க முற்போக்குச் சிந்தனைத் தளத்தோடு இருந்த எனக்கு, இந்த இதழ்களைப் படித்ததும் புதிதாக வேறு ஓர் உலகம் அறிமுகமானது. அது புதுமையாக இருந்தது.

அதற்கு முன்பாக கல்கி, நா. பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு, ஜெயகாந்தனின் எதார்த்தமான படைப்புகள், கருத்துகள், காரல்மார்க்சின் பொது உடைமைச் சித்தாந்தம், இயங்கியல் பொருள் முதல் வாதக் கருத்துகள் எல்லாம் அறிமுகமாகி ஒரு புத்துணர்வை அளித்தன. இந்த நிலையில் தான் தமிழவன் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டி, சிவசங்கரன் மூலமாக அறிமுகப் படுத்தி, ‘தாமரை’ இதழில் எனது கவிதைகள், கட்டுரைகள் வெளிவரக் காரணமாக அமைந்தார். இப்படித்தான் நான் திராவிடரியக்கச் சிந்தனை வழியாக, பொது உடைமைக் கொள்கை நோக்கிப் பயணமானேன்.

கேள்வி : கல்லூரி நாட்களில் உங்கள் செயல்பாடுகள் பற்றி...!

பதில் : நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயற்பியல் - இள அறிவியல் முடித்திருந்தும், முதுகலையில் தமிழ் கற்க வேண்டும் எனும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்குக் காரணம், அந்த கால கட்டங்களில், நாகர்கோயில் இந்துக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ் அறிஞர் இலக்குவனாரின் தமிழ் மொழி உணர்வுக் கட்டுரைகள், இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள், எழுத்துகள் எல்லாம் இதழ்களிலே வெளிவந்து படிக்கக் கிடைத்ததால் எனக்குள் ஏற்பட்ட தாய் மொழிப் பற்றுதான்.

அப்போது கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை இராஜ மாணிக்கம் என்பவராவார். நான் தமிழ் - முதுகலை வகுப்பிற்கு விண்ணப்பித்ததும் நேர்காணலுக்கு அவர் அழைத்தார். அவரிடம் நான் நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்திருந்த கவிதைகள், அவ்வப்போது சிற்றிதழ்களில் வெளிவந்த என் கவிதைகள், அறிஞர் அண்ணா அவர்களின் மறைவின்போது அவருக்கு நான் எழுதி, அன்றைய ‘மாலை முரசு’ ஏட்டில் வெளி வந்திருந்த இரங்கற் கவிதை, ‘கவியமுது’ இதழில் வெளியானவை, வெண்பாப் போட்டிகளில் பரிசு பெற்ற கவிதைகள், சான்றிதழ்கள் எல்லாம் காட்டியதும் தான், இயற்பியல் படித்த எனக்கு, முதுகலை - தமிழ் படிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

கலை இலக்கியத் துறையில் புதிய சிந்தனைகளுடன் பல நூல்கள் வெளி வந்த நேரமது. இலக்கியவாதிகள், ‘கலை உபாசகர்கள்’ என்ற பெயரில் உள்ளவர்களின் எழுத்துகள், சி.சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ எனும் இதழ் சார்பாக வெளி வந்த ‘புதுக் குரல்கள்’, நா. காமராசனின் ‘கருப்பு மலர்கள்’, கசடதபற குழு வினரின் கவிதைத் தொகுப்புகள், வானம்பாடி இதழ்கள் எல்லாம் வெளிவரத் தொடங்கியிருந்தன.

இந்நிலையிலே, ‘ஆக்டோ பசும் நீர்ப் பூவும்’ என்ற தலைப்பிலே, நூல் ஒன்றினை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த நூல் தமிழவன், எங்கள் கல்லூரி ஆசிரியர் சிவ. சுப்ரமணியம், தெய்வ சுந்தரம், மாரியப்பன், நான், மற்றும் இன்னொரு மாணவர் என ஆறு பேர் எழுதிய தீவிரமான சிந்தனை கொண்ட கவிதைகளின் தொகுப்பாகும். கிறித்துவ மத நிறுவனத்தின் கட்டுப் பாட்டில் செயல்பட்டு வந்த கல்லூரியில், அதனையெல்லாம் மீறி, புரட்சிகர சிந்தனையோடு கவிதைகள் படைக்கப்பட்ட தோடு, ‘இந்த நூலினை ஸ்பெயின் மண்ணில் இரத்தமாக உறைந்த இரண்டு வெள்ளைக்கார வாலிபர்களின் நினைவுக்குச் சமர்ப்பணம்’எனப் போட்டிருந்தோம். அது மிகப் பெரிய பிரச்சினையாக எங்களுக்கு ஆகி விட்டது.

கேள்வி : யார் அந்த வெள்ளைக்கார இளைஞர்கள்? எதனால் உங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது?

பதில் : அந்த இரண்டு இளைஞர்களும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புரட்சி யாளர்கள். ஒருவர் ரால்ஃபாக்ஸ், மற்றொருவர் கார்டுவெல். 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயினில் நடைபெற்ற புரட்சியில் பங்கேற்று, கிறித்துவ சர்ச்சுகளின் மீது வெடி குண்டுகளை வீசித் தகர்த்த புரட்சிக்காரர்கள். அதுமட்டுமல்ல; சிறந்த சிந்தனை யாளர்கள். இவர்களில் கார்டுவெல் எழுதிய ‘Illusion and Reality’ அதாவது ‘தோற்றமும் மயக்கமும்’ என்ற நூல் 19-ஆம் நூற்றாண்டில், இலக்கிய விமர்சகர்களின் சிந்தனைகளைத் தூண்டிவிட்ட புகழ் பெற்ற நூலாகும்.

கிறித்துவக் கல்லூரியில் பயின்று கொண்டு, கிறித்துவ மதத்தை எதிர்த்தவர்களுக்கு - புரட்சிக்காரர்களுக்கு ‘சமர்ப்பணம்’ என நூல் வெளியிட்டால் சும்மா விடுவார்களா? நூலில் இருந்த கருத்துகள் எல்லாம் மதத்திற்கு, முதலாளித்துவத்திற்கு, சுரண்ட லுக்கு எதிரானவை.

நூலைப் படித்துவிட்டு, மாணவர்களாகிய எங்களைத் தூண்டி விட்டதாகவும், நடவடிக்கை எடுத்து வேலை நீக்கம் செய்யுங்கள் என்றும் தமிழவன் மீது குற்றஞ்சாட்டி, பெங்களூரு கிறிஸ்ட் கல்லூரி நிர்வாகத்திற்கு, தமிழ்த் துறைத் தலைவர், அருட்தந்தை இராஜ மாணிக்கம் கடிதம் எழுதி விட்டார். தமிழவன், இந்த நூல் வெளியிடும் முன் தான் பெங்களூரு கல்லூரிக்கு மாற்றலாகிப் போய் இருந்தார். இந்தச் சூழலில், எங்களுக்கும், தமிழ்த் துறைத் தலைவருக்கும் இடையே பகை முரண்பாடு முற்றிப் போய் விட்டது. இந்த நிலையிலே கல்லூரிக்குப் புதிய முதல்வராக அருட்தந்தை அந்தோணிசாமி வந்துவிட்டார். இவர் பொறுப்பேற்றதும், கல்லூரியில் உருவாகியுள்ள புதிய சூழலை உணர்ந்து, மாண வர்களை அனுசரித்து எங்களுக்கு இணக்கமாகி விட்டார்.

எனினும், துறைத் தலைவரான ராஜமாணிக்கம், எங்கள் குழு மாணவர்களுக்கு உள் மதிப்பீட்டு மதிப் பெண்களை மிகவும் குறைவாகப் போட்டு மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி, தேர்விலே தோல்வி அடைய வழிவகை செய்து விட்டார்.

தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில் நல்ல வெள்ளி (Good Friday) வந்தது. அன்று, அருட் தந்தை ராஜமாணிக்கத்திற்கு, ‘சிறுவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்தருளும். பாவிகளை ரட்சியும்’ என்ற ஏசுநாதர் சொன்ன வாக்கியங்கள் நினைவிற்கு வரவும், ‘அடடே... நாம் தவறு செய்து விட்டோம்; மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விட்டோமே’ என வருந்தி, உடனடியாக மீண்டும் ஒரு உள் மதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலைத் (Internal Marksheet) தயாரித்துக் கூடுதலாக மதிப் பெண்களை எங்களுக்குப் போட்டு பல்கலைக்கழகத்திற்கு, கல்லூரி முதல்வர் கையொப்பம் பெறாமலேயே அவசரமாக அனுப்பி வைத்து விட்டார்.

இதனால் ஏற்பட்ட குழப்பம், எங்களுக்கு மேல் முறையீடு செய்ய ஒரு வாய்ப்பை அளித்தது. நிலைமையை உணர்ந்த கல்லூரி முதல்வர் அந்தோணிசாமி எங்களுக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்து, மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரைச் சந்தித்து முறையிடுமாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக, நான் உள்ளிட்ட 6 மாணவர்கள் மதுரைக்குப் போனோம். அப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் மு. வரதராசனார் இருந்தார். அவரைச் சந்தித்து முறையிட்டதும், அவர் முன்பு வந்த மதிப்பெண் பட்டியல், அடுத்து வந்த பட்டியல் இரண்டையும் ஆய்வு செய்து விட்டு, இரண்டு பட்டியல்களையும் இரத்து செய்துவிட்டு, மூன்றாவதாக உள் மதிப்பீட்டுப் பட்டியல் ஒன்றை அனுப்பிடச் சொல்லி, உத்திரவு போட்டுவிட்டார். இதனால், எங்கள் எதிர்காலம் காப்பாற்றப்பட்டுத் தப்பித்தோம்.

இப்படி, ஒரே ஒரு நூல் - மதவாதம், முதலாளித்துவம், சுரண்டலை எதிர்த்து நாங்கள் எழுதியதால் சந்தித்த துன்பங்கள், இந்தக் கொள்கைகள் மீது இன்னும் ஆழமாகப் பற்றுக் கொள்ளச் செய்யும் விளைவினை ஏற்படுத்தியது.

கேள்வி : கலகம் செய்து தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறீர்கள். பிறகு முனைவர் பட்டம் எப்போது பெற்றீர்கள்? நாடகங்கள் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

பதில் : தூய சவேரியார் கல்லூரியில் தமிழ் முதுகலை முடித்துவிட்டு, மதுரைப் பல்கலைக் கழகத்தில் 1973இலே, ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். அப்போது எனக்குத் தமிழ்த் துறைத் தலைவராக வாய்த்தவர் பேராசிரியர் முத்து சண்முகம் அவர்கள். எனது ஆய்வுப் படிப்பிற்கு இவர்தான் வழி காட்டியாகும்.

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பென்சில்வேனியா பல்கலைக் கழகத்திற்குப் போய் பணி யாற்றி, மதுரைப் பல்கலைக் கழகம் வந்தவர். ஆற்றல் மிக்க தமிழ் ஆய்வறிஞர்.

அப்போது அமெரிக்காவில் இருந்து தமிழ்மொழி, பண்பாடு பற்றிக் கற்றுத் தெரிந்து கொள்ள மாணவர் குழு ஒன்று மதுரைக்கு வந்திருந்தது. மதுரை அருகில் பெருங்குடி எனும் கிராமத்தில் தோற்பாவை நிழற் கூத்துக் கலைஞர்கள் முகாமிட்டிருக்கும் செய்தி அறிந்து, அதனை எனது பேராசிரியரிடம் தெரிவித்தேன். உடனே அவர், அமெரிக்க மாணவர்களை அங்கே அழைத்துச் சென்று காண்பிக்கச் சொல்லிவிட்டு, அவரும் உடன் வந்தார்.

இந்தத் தோற்பாவைக் கூத்துக் கலைஞர்கள் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள். இந்தக் கலை அவர்களுக்கு உரியது. தோற்பாவை என்பது, மெல்லிய, ஒளி ஊடுருவக் கூடிய விலங்குகளின் சவ்வினால் வெட்டப்பட்ட உருவங்களை, மூங்கில் குச்சிகளில் ஒட்ட வைத்து, திரைச்சீலை கட்டி, மண்ணெண்ணெய் காடா விளக்குகள் மூலம் வெளிச்சம் பாய்ச்சி, பொம்மைகளின் நிழலைக் கைவிரல்களால் அசைத்து நடத்தப்படும் நிழற் காட்சிக் கலையாகும். இதனைக் காண்பதற்கு மாணவர்களை அழைத்துக் கொண்டு, பேராசிரியரோடு சென்றோம்.

அந்த நிகழ்ச்சி நடைபெற்ற களத்திலேதான் எனது ஆய்வுக்கான தலைப்பினை பேராசிரியர் இறுதி செய்து, வரைமுறைப்படுத்தினார். அதற்கு முன்பு, ‘தமிழக நாட்டார் கூத்துகள்’ (Folk Theaters of TamilNadu) எனும் தலைப்பினைக் கொடுத்தவர், இந்தத் தோற்பாவை நிகழ்ச்சியைக் கண்டதும், ‘தமிழக தோற்பாவை நிழற் கூத்து’ எனும் தலைப்பினைத் தேர்வு செய்து வழிகாட்டினார். இதுவே என் முனைவர் பட்ட ஆய்வாக அமைந்தது.

முனைவர் பட்ட ஆய்விற்கு இடையிலேயே 1975-இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில், ‘நாட்டுப்புறவியல் விரிவுரையாளர் (Lecturer in Folklore) பணியிலே சேர்ந்து விட்டேன். ஆய்வினை முடித்து 1978-லே முனைவர் பட்டமும் பெற்று விட்டேன்.

நாடகங்களில் ஆர்வம் என்பது எனது பள்ளிக்கூட நாட்களிலேயே ஏற்பட்டது. வீடுகளில் சக பிள்ளைகளோடு சேர்ந்து ஏதாவது வேடம் கட்டிக் கொண்டு ஆடுவதும், பள்ளி நாடகங்கள், தெரு நாடகங்களில் பங்கேற்பது, கூத்துக் கட்டி ஆடுவது என இளமையிலிருந்தே நாடகம் தொடர்பான ஆர்வம், ஈடுபாடு எனக்குள் உருவாகிவிட்டது என்றே கருதுகிறேன்.

எனது நாடக ஆர்வத்திற்கு உரமிடும் வகையில் எனது பணியும் அமைந்து விட்டது. மாணவர்களுக்குக் கற்பித்தல் தொடர்பாக காந்தி கிராமத் திற்கு அவ்வப்போது செல்லும் போது நாடக ஆய்வாளர் பேராசிரியர் இராமானுஜம் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இவர் டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் (National School of Drama) படித்துத் தேர்ந்தவர் ஆவார்.

அந்த நேரத்தில் ஜெயகாந்தன் நடத்திக் கொண்டிருந்த ‘ஞான ரதம்’ இதழ் தேவ சித்ர பாரதி என்பவர் கைக்கு மாறியிருந்தது. அந்த இதழிலே நாடகம் தொடர்பான கட்டுரைகளை இராமானுஜம் எழுதுவார். நானும் அவற்றைப் படித்து அவரோடு கலந்துரையாடி வருவதுமாக இருந்து வந்தேன்.

ஒரு முறை, கேரள மாநிலம், கள்ளிக்கோட்டைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி. சங்கரப்பிள்ளை காந்தி கிராமத்திற்கு வருகை தந்து, ‘அர்த்தமுள்ள நாடகம்’ எனும் தலைப்பில் ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார்.

அந்த உரையை தோழர்களோடு இணைந்து நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழிலே வெளியிட்டிருந்தேன். அதனைப் படித்துப் பாராட்டியவர், நாடகம் தொடர்பாக, காந்தி கிராமத்தில் தான் நடத்தவுள்ள ஒரு வார கால பயிற்சிப் பட்டறைக்கு வந்து கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

நான் கலந்து கொண்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு, பேராசிரியர் இராமானுஜம், ‘புறஞ்சேரி’ என்ற நாடகத்தைப் பின்னர் உருவாக்கினார்.

சிலப்பதிகாரத்தில், கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் புறஞ்சேரி மக்கள் திரண்டு வராமல், வெறும் பார்வையாளர்களாகவே இருந்தார்கள் என்ற ‘கரு’வை மையமாகக் கொண்டு இந்த நாடகத்தை எழுதியிருந்தார். கேரள சங்கீத அகாடமி விழாவில் போட்டி நாடகமாகவும் இது அரங்கேற்றம் செய்யப்பட்டது.

சிறப்பான கதையம்சம் கொண்டிருந்தும், இதில் பங்கேற்று நடித்தவர்களின் திறமையின்மை காரணமாகப் பார்வையாளர்களிடம் எடுபடாமல், தோல்வியடைந்து விட்டது. இதனால், பேராசிரியர் இராமானுஜம் கவலை யடைந்து, சோர்ந்து போய் விட்டார். இந்த நிலையிலே அவரை ஆற்றுப்படுத்தி ‘உங்கள் நாடகம் ஒன்றை எங்களுக்குக் கொடுங்கள். நாங்கள் நடத்துகிறோம்’ எனக் கேட்டேன். அப்போது அவர் கொடுத்த நாடகம், ‘பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்’ என்பதாகும். அதனைப் பெற்று வந்து, மதுரைப் பல்கலைக் கழகத்தில், எங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, நடிக்க வைத்து, அரங்கேற்றம் செய்தேன். இதுதான் எனது முதல் நாடக இயக்கமாகும். இதில் நானும் ஒரு பாத்திரம் ஏற்று நடித்தேன்.

கேள்வி : இந்த நாடகம் பற்றி சொல்லுங்களேன்!

பதில் : இந்த நாடகத்தை மலையாள மொழியில், சங்கரப் பிள்ளை எழுதியிருந்தார். இதனைத் தமிழ்படுத்தித் தந்தவர் பேராசிரியர் இராமானுஜம். இந்த நாடகக் ‘கரு’ என்ன வென்றால், அநீதிக்கு எதிராக மக்கள் திரண்டெழ வேண்டும் என்பதாகும். மூன்று பண்டிதர்கள், காட்டில் எரிந்து சிதைந்து கிடக்கும் சிங்கம் ஒன்றிற்கு ஒருவர் உடல் கொடுப்பார், ஒருவர் உறுப்பு, ஒருவர் உயிர் எனக் கொடுத் ததும், உயிர்ப்புற்று எழுகின்ற சிங்கம், கர்ஜித்துக் கொண்டே அந்த மூன்று பண்டிதர்களையும் அடித்துக் கொன்று தின்றுவிடும். இந்தக் காட்சியில், அனைத்து விதமான அடக்குமுறைகளின் வடிவமாக சிங்கத்தையும், அதற்கு வலிமை அளிக்கும் அப்பாவி மக்களாகப் பண்டிதர்களையும் உருவகப் படுத்தியிருக்கும். நிறைவுக் காட்சியில், அந்தச் சிங்கத்தை விரட்டுவதற்கு மக்கள் திரண்டிட வேண்டும் என்பதை உணர்த்த பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எல்லோரும் எழுந்து முழக்கமிடுவார்கள். அப்படி உணர்ச்சிபூர்வமான நாடகம் அது. வெற்றி பெற்ற நாடகம்.

காந்தி கிராம பயிற்சிப் பட்டறைக்குப் பின் ஏற்பட்ட உற்சாகத்தோடு தொடர்ந்து நாடகங்களை நடத்துவது என முடிவெடுத்து, ‘Real Theatre Movement’ என எங்கள் குழுவிற்கு பெயர் வைத்தோம். தமிழிலும் ‘ரியல் தியேட்டர் மூவ்மென்ட்’ என்றே எழுதினோம். பிறகு இதிலே இணைந்தவர்கள் பல இடங்களில் இருந்தவர்கள் என்பதால், கூடி செயல்பட முடியவில்லை. அதனால், நான், ‘நிஜ நாடக இயக்கம்’ எனத் தமிழ்படுத்திக் கொண்டு, எங்கள் குழு தனியாகச் செயல்பட்டது. இந்த ‘நிஜ நாடக இயக்கம்’ சார்பாகத்தான், மதுரை நாகமலை அடிவாரத்தில் எங்களது முதல் நாடகமான ‘பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்’ அரங்கேற்றம் செய்யப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வகையில் தான் எனது முதல் நாடகப் பயணம் தொடங்கியது.

(தொடரும்)