கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம்.

சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வொரு நாடகத்திற்கான நடிகர்களும் குழுவாகக் கூடிய பிறகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் புறப்படுவார்கள்.

ஸ்பெஷல் நாடக அமைப்பு என்றால் என்ன என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பாத்திரமேற்கும் நடிகர், அதுவரை தான் சந்தித்தேயிராத நடிகருடன் இணைந்து நடிக்க முடிவது இந்த ஸ்பெஷல் நாடக அமைப்பில்தான். நடிகர் சங்கத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நோட்டுப்புத்தகம் இருக்கும். நாடகத்திற்கு புக் பண்ண வருபவர்கள் நடிகர் சங்கப் பணியாளருடைய உதவியோடு, தான் விரும்பும் நடிகர் நடிகைகளுடைய குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்வார்கள். இன்ன நடிகருக்கு இன்ன நடிகையை ஜோடியாகப் போட்டால்தான் நாடகம் நன்றாக இருக்குமென்பது நாடகம் புக் பண்ண வருபவரின் மனக்கணக்காக இருக்கும். பபூனுக்கு பொன்னமராவதி ஆறுமுகம்; டான்ஸ்க்கு திண்டுக்கல் பத்மா; முருகனுக்கு புதுக்கோட்டை ஸ்ரீராம்; வள்ளிக்கு புதுக்கோட்டை சித்ரா; நாரதருக்கு வரிச்சியூர் பழனியப்பன்; அரிச்சந்திரனுக்கு இடைச்சியூரணி முருகேசன்; சந்திரமதிக்கு திண்டுக்கல் சோலைவள்ளி... இப்படி கேட்டுக் கேட்டு பதிவு செய்தல் உண்டு. ஊராரே இவ்வாறு குறிப்பாகக் கேட்டு ஒப்பந்தம் செய்யும் நடிகர் தன்னை “குறிப்பு” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு. இது தவிர நாடக ஏஜெண்டுகள் தாமே தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் செய்வதும் நடைமுறை வழக்கில் இருக்கிறது. இவர்களுடைய நாடகத் தேதி, இடம் முதலானவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் நடிகர் சங்கத்திற்கு இருக்கிறது. ஒப்பந்தம் செய்த பிறகு அதை மறுக்க நடிகர்களுக்கு அதிகாரம் கிடையாது.

ஒப்பந்தம் செய்த நாளில் ஒப்பந்தம் செய்த நடிகர்களோடு சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடவேண்டும். தவறுகிற நடிகர்களின் மீது சங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. தேதி ஊர் முதலான தகவல்களை நடிகர் நடிகைகளும் தங்களிடமுள்ள குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்கின்றனர்.

நாடக மேடையில் நடிகர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகள், ஏஜெண்டுகளுக்கும் நடிகர்களுக்குமிடையே ஏற்படும் பணத்தகராறுகள் முதலானவற்றில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் பொறுப்பினைச் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரச்சினைகளோ ஒவ்வொன்றும் ஒருவிதம்.

வள்ளிதிருமணம் நாடகம். ராஜபார்ட் மிகவும் இளவயது நடிகர்; கத்துக்குட்டி. ஸ்திரீபார்ட் மூத்த நடிகை. இளவயது நடிகர் மூத்த நடிகையை அக்கா என்றுதான் அழைப்பார். மேடையில் இருவரும் முருகனும் வள்ளியுமாக வந்து காதல் புரிய வேண்டும். மானைத் தேடிவரும் முருகனோடு வள்ளி முரண்படுவாள்; கோபிப்பாள்; சண்டையிடுவாள். இறுதியில் மோதல் காதலாகித் திருமணத்தில் முடியவேண்டும்.

இப்போது மோதல் கட்டம். வேடனாக வந்திருக்கும் முருகன் தன்னுடைய குலப்பெருமை பேசுவான். வள்ளியோ சளைக்காது தன் குறக்குலப் பெருமை பேசுவாள். வசனங்கள் அவரவர் பேசிக் கொள்வதுதானே... பேசுகிறார்கள். பேச்சிடையே முருகன் சொல்கிறான்: என் தந்தை யார் தெரியுமா? என் தந்தை அக்காளை ஏறியவன். இதைச் சொல்லும் முறைமையில் மறைபொருளாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறான். என் தந்தை - சிவன் -காளை வாகனத்திலே அமர்ந்து காட்சி தருபவன் என்பது அது. ஆனாலும் நகைச்சுவைக்காக இருபொருள் தொனிக்கும்படி இதை அழுத்திச் சொல்கிறான். முகத்திலே கட்டுக்கொள்ளாத சிரிப்பு. பார்வையாளர்களும் சிரிக்கின்றனர். முதுபெரும் நடிகையான ஸ்தரீபார்ட்டுக்கு முகம் சிவக்கிறது. ‘யாரிடம் என்ன வார்த்தை பேசுகிறான் இந்த கத்துக்குட்டி நடிகன்? கொஞ்சங்கூட மரியாதையில்லாமல். ஆபாசமான வார்த்தையை என்னிடம் எப்படிப் பேசலாம்?’ முகத்துத் தசைகள் துடிக்க ஆவேசத்துடன் பார்க்கிறார் முருகனாக நடிக்கும் கத்துக்குட்டி நடிகரை. வசைமாரி பொழியத் தொடங்குகிறது. ‘யாரு கிட்ட அக்காளை ஏறுனவன்னு சொல்ற... நீ உன் ஆத்தாளை ஏறு... அம்மாவை ஏறு... அதையெல்லாம் ஏங்கிட்ட வந்து ஏண்டா பேசுற... த்தூ... எச்சிப் பொறுக்கி நாயே... மரியாதை தந்து மரியாதை வாங்கு... சபை நாகரீகம் தெரிஞ்சு பேசு... இல்லன்னா அறுத்துத் தொங்கப் போட்டுருவேன் நாக்கை... செருப்பால அடிப்பேன்...’

திகைத்துப்போகிறார் கத்துக்குட்டி நடிகர். பாராட்டுக் கிடைக்குமென்று எதிர்பார்த்துப் பேசியவார்த்தை வசவுக்கு வழிவகுத்துவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. எந்த முருகப் பெருமானும் வள்ளியிடம் இவ்வளவு மோசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்திருக்கமாட்டார். மூத்த நடிகையின் வசவுகள் நின்றபாடில்லை. ஊர்ப் பெரியவர்கள் பிரச்னையில் தலையிட்டுச் சமாதானம் செய்கின்றனர்.

‘சரி விடும்மா... ஏதோ சின்னப்பையன் தெரியாமப் பேசிட்டான்... அனுபவமுள்ள நடிகை நீதான் அவனை மன்னிக்கணும்... சரி விடு...விடு...” ஊரார் சொல்வதால் சம்மதிக்கிறார் நடிகை. நாடகம் மீண்டும் தொடருகிறது. மீண்டும் மோதல்; காதல். காதல் காட்சிகளில் கத்துக்குட்டி ராஜபார்ட் நடிகரிடம் உற்சாகம் இல்லை; சோபை இழந்து காட்சி தருகிறார்.

நாடகம் முடிவுற்றது. சங்கத்திற்கு திரும்பிய ஸ்திரீபார்ட் நடிகை. சங்கத்திலிருக்கும் தன் குறிப்பேட்டை எடுத்து முகப்பில் எழுதுகிறார் ‘குறிப்பிட்ட அந்த நடிகருடன் யாரும் எனக்கு நாடக ஒப்பந்தம் செய்யவேண்டாம்’. பல நடிகர்களுடைய குறிப்பேட்டில் இதுபோன்ற வாசகங்களைப் பார்க்கலாம். இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டுச் சங்கம் சமாதானம் செய்துவைக்கும்.

இசைநாடக உலகம் புனைவுகளால் ஜீவித்துக் கிடக்கும் உலகம். இசை நாடக நடிகர்கள் புனைவில் வாழும் மனிதர்கள். இவர்களது புனைவின் வசீகரம் நாடகம் பார்க்கும் சாதாரண எளிய மக்களையும் தொற்றிக் கொள்கிறது. புனைவுவெளி மனிதர்களான இசை நாடகக் கலைஞர்களின் இயல்பு வாழ்க்கையும்கூட புனைவு மயக்கத்திற்குள் புதைந்து கிடக்கிறது.

காரைக்குடி நாடக நடிகர்-அமைப்பாளர் சங்கம் ஒரு குறுகிய இடுகலான தெருவில் அமைந்திருந்தது. அதை நாடகத்தில் பபூன் காமிக்குகள் ‘மூத்திர சந்து’ என்று கிண்டலாக குறிப்பது உண்டு. நடிகர் சங்கத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் நாலைந்துபேர் சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தரிசிக்க நேரிட்டுவிடும். மூத்திர வாசனையைக் கடந்து நடிகர் சங்கத்திற்குள் நுழைந்துவிட்டால்போதும், பவுடர் வாசனைகள் மூக்கைத் துளைக்கும். சங்கத்திற்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் உண்டு. சங்க வேலைகளைக் கவனித்துக் கொள்ள முழுநேர பணியாளர் ஒருவரும் உண்டு. சங்கத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு ஸ்திரீபார்ட் நடிகை, தன் உறவுக்காரப் பெண்ணுடனும் வயதான தாயுடனும் வசித்து வந்தார். உறவுக்காரப் பெண் டான்ஸ்காமிக் பாத்திரமேற்று நடிக்கும் பெண் நடிகை.

காரைக்குடி நாடக நடிகர் அமைப்பாளர் சங்கம் நாடக ஆய்வை மேற்கொள்ளச் சென்ற ஆய்வாளனாகிய எனக்குப் பல உதவிகளைச் செய்தது. ஒவ்வொரு நாளும் நடிகர் கூடுகிற மாலைப்பொழுதில் சங்கத்திற்குப் போய்விடுவேன். சங்கப் பணியாளரின் உதவியோடு ஒவ்வொரு இரவும் ஒரு குழுவோடு பயணப்படுவேன். அன்றைய இரவு எந்த நாடகத்திற்குப் போவது என்பதைப் பல விதங்களில் முடிவு செய்வேன். நாடகத்தின் அடிப்படையில், ராஜபார்ட்டின் அடிப்படையில், ஸ்திரீபார்ட் அல்லது பபூன்காமிக் அடிப்படையில் என பல அடிப்படைகளில், ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் ஏதாவது ஒரு நாடகத்திலாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம். சங்கப்பணியாளர் பலமுறை இதில் எனக்கு உதவியிருக்கிறார். ‘நீங்க இளையராஜா நாடகம் பாத்துட்டீங்களா?’ என்பார். ‘ரொம்ப நாளைக்கு அப்புறம் இளையராஜா இந்தப் பகுதிக்கு நடிக்க வர்றார். நீங்க அவசியம் பார்க்கணும்’ என்று அனுப்பிவைப்பார்.

நடிகர் சங்கத்தில் பல நடிகர்-நடிகைகளைச் சந்தித்து விரிவாகப் பேசுவேன். அவர்களுடைய தொழில், நடிப்பு, அனுபவம், சொந்த வாழ்க்கை எனப் பேச்சு நீளும். சங்கத்திலேயே தங்கியிருந்த டான்ஸ் காமிக் நடிகை அவ்வப்போது வந்து பேசுவார். திருமணமான ஒருசில ஆண்டுகளிலேயே கணவரைப் பிரிந்து வாழ்பவர். கைக்குழந்தையுடன் தன் பெரியம்மாவாகிய ஸ்திரீபார்ட் நடிகையுடன் நடிகர் சங்கக் கட்டிடத்திலேயே வசிக்கிறார். அவருக்கு வரும் வாய்ப்புகள் மற்ற டான்ஸ் காமிக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. எனவே மிகுதியான நேரம் நடிகர் சங்கத்திலேயே இருப்பார். அவரும் சங்க உதவியாளரும்தான் நாடக குழூஉக் குறிகளைத் தொகுக்க எனக்கு உதவியவர்கள். நான் தொடர்ந்து ஒருமாத காலம் நடிகர் சங்கத்திற்குச் சென்று வந்த பிறகு - ஒரு நாளில் அவருக்கு நாடக வாய்ப்பு வந்தது.

‘நாளைக்கு இவங்க நடிக்கிற நாடகம் ஒன்னு இருக்கு சார்... நீங்க போய்ப் பார்த்துட்டு வந்திடுங்க...’ என்றார் உதவியாளர். சரி என்றேன். நடிகையோ அவருடைய நாடகம் பார்க்க என்னை வரவேண்டாம் என்றார். ‘எதற்கு வேண்டாம் என்கிறீர்கள்?’ என்றேன். ‘சார்...நீங்க என்கிட்ட ரொம்ப மரியாதையா பேசுறீங்க... எங்க கலைவாழ்க்கையை மதிக்கிறீங்க... நீங்க நான் நடிக்கிறத பாத்தா எங்க மேல நீங்க வச்சிருக்கிற மரியாதை போயிடும்... பபூன் காமிக்கோட நடிக்கிறப்போ ரெட்டை அர்த்தத்தில் பேச வேண்டியிருக்கும்; பாட வேண்டியிருக்கும்... அதனால அதை நீங்க பார்க்க வேண்டாம்...’ என்றார். நான் பல நாடகங்களை ஏற்கனவே பார்த்திருந்தேன். எனவே அது இக்கலை வடிவத்தின் ஒரு பகுதி என்ற அளவில் நான் புரிந்து கொண்டிருந்தேன். எனவே நாடகத்தில் அவர்களின் பங்கேற்பை அவர்களின் தனிப்பட்ட குணநலன்களோடு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்ற தெளிவுடன் இருந்தேன். இதை அந்நடிகையிடம் தெரிவித்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுபோன்ற பல நாடக நிகழ்வுகளைப் பார்த்து வருகிறேன்; அது எனது ஆய்வுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

மறுநாள் மாலை நாடகங்களுக்குரிய ஊர்களுக்குச் செல்ல எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட டான்ஸ்காமிக் நடிகை மறைந்து மறைந்து சென்று அவருக்குரிய வாகனத்தில் அமர்ந்துவிட்டார். ‘சார்... வண்டி புறப்படட்டும். டூவீலர்ல போய்... கூட்டத்துல உட்கார்ந்து நாடகம் பாத்துட்டு வந்துடுவோம் நாம... ரொம்பத்தான் திமிர் புடிக்கிறா அந்தப் பொண்ணு...’ என்றார் சங்க உதவியாளர். மறுத்துவிட்டேன் நான். இயல்பு வாழ்க்கையும் நாடக வாழ்க்கையும் ஒன்றே என்று நினைக்கிற மரியாதைக்குரிய அந்நடிகையின் காலடி மண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறேன். வேறொரு குழுவோடு வேறொரு நாடகம் பார்க்க வேறொரு ஊருக்குப் பயணப்படுகிறேன்.

விநாயகர் திருமணம்:

இசைநாடக உலகம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைவுற்று வருகிறது என்பது ஒரு ஆண்டில் நிகழ்த்தப்படும் நாடக நிகழ்வுகளின் எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்து அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் வீரியமிழந்து வருகிறது என்னும் பொருளில் சொல்லப்படுகிறது. இசை நாடகம் தன் கலைத்தன்மையில் காலூன்றி நவீனத்தை எதிர்கொள்ளவில்லை. அது நவீன மாறுதலுக்கேற்பத் தன்னை புனருத்தாரணம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு சினிமாவின் தொங்குசதையாக மாறி வருகிறது. எனவே இசைநாடகம் ‘பாட்டுக் கச்சேரியாக - அதுவும் சினிமாப் பாட்டுக் கச்சேரியாக’ மாறி வருவதனைப் பற்றிய கவலையுணர்வு அக்கலைஞர்களுக்கே இருக்கிறது. அது மட்டுமல்ல... ஒரு சில நாடகங்களைத் தவிர பிற நாடகங்களை நிகழ்த்தக்கூடிய கலைஞர்கள் குறைந்து வருகின்றனர். தவத்திரு சங்கரதாச சுவாமிகள் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வள்ளிதிருமணம், அரிச்சந்திர மயான காண்டம் இரண்டையும் விட்டால் வேறு நாடகங்கள் நிகழ்த்தப்படுவது அரிதாகிவிட்டது. பாமாவிஜயம், தூக்குத்தூக்கி, கோவிலன் கதை, வீரபாண்டியக் கட்டபொம்மன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்ற நாடகங்களை நடிப்பதற்கான நடிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

சென்னையில் தமிழகக் கலைகளின் சங்கம விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கத்தி தெருக்கூத்து, தெற்கத்தி தெருக்கூத்து, இசை நாடகம் முதலானவற்றை நிகழ்த்துவதாக ஏற்பாடு. இசை நாடகத்திற்கு ஏற்பாடு செய்ய மதுரை புறப்பட்டார் நண்பர் ஒருவர். நந்தன் கதை நாடகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் நாடக நடிகர் சங்கத்தின் முகவரியைப் பெற்றுக் கொண்டார். “நந்தனார் கதை தெரிந்த ஒருசில பழைய நடிகர்கள் இருக்கலாம். ஆனால் நாடகத்தை நிகழ்த்துவதற்குத் தேவையான அனைத்துக் கலைஞர்களும் கிடைப்பது அரிதே” என்றேன். நண்பர் நம்பிக்கையோடு புறப்பட்டுப்போனார்.

நந்தனார் கதை நாடகத்திற்கு புக் செய்துவிட்டேன் என்று நண்பர் சொன்னபோது ஆச்சரியமாகிவிட்டது நமக்கு. நடிகர்கள் இருக்கிறார்கள்; நாம்தான் ஒழுங்காகத் தேடிப்பார்க்கவில்லை என்று வெட்கமாகிப் போய்விட்டது. நந்தனார் கதையைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருந்தோம்.

நாடகத்தன்று நடிகர்கள் வந்திறங்கிய பிறகு நாடக ஏஜெண்ட்டோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். ‘நந்தனாருக்கு ஆள் கிடைக்கல சார்... இப்போ சீஸன் வேற... யாருமே கெடைக்கல வள்ளிதிருமணம் ஏற்பாடு பண்றதே பெரிய பாடாப் போயிருச்சி...’ என்றார் ஏஜெண்ட். வேற வழி? நடக்கட்டும் நாடகம் என்றார் நண்பர்.

ஒப்பனை அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கலைஞர்கள் ஒப்பனையில் மும்முரமாய் இருந்தார்கள். உடல் பருமனான ஒருவர் ஒப்பனையிட்டுக் கொண்டிருந்தார்; பபூன் காமிக்காக இருக்கலாம். மதுரையில் குண்டுசேகர் என்று ஒரு பபூன் காமிக் உண்டு. வயிறைக் குலுக்கியபடி அவர் ஆடும் ஆட்டத்தைக் கண்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அப்படி இவரும் ஒரு பபூனாக இருக்கலாம் என்று தோன்றியது. பருத்த நடிகர் இடும் ஒப்பனையோ என் கருத்தை மறுத்தது. ராஜபார்ட்டுக்கான ஒப்பனை அவரில் படருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுகாசல முருக ஒப்பனையோடு எழுந்து நின்றார் நடிகர். அவருடைய உடல்வாகுக்கு வெகுநேரம் மேடையில் நிற்பதே சிரமம் என்பதனை, எழுந்து நிற்பதற்கான அவரது முஸ்தீபுகளே உணர்த்திவிட்டது. நாடக சீஸனில் ஆள் கிடைக்காததால் ஒரு பழம் ‘பெரும்’ நடிகரை அழைத்து வந்து விட்டார்கள் போலிருக்கிறது ராஜபார்ட் நடிகரை அணுகிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த விழா தமிழகக் கலை வடிவங்களைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா என்பதனை எடுத்துச் சொன்னேன். எனவே சினிமாப் பாடல்களைத் தவிர்த்து விடுங்கள். முழுக்க முழுக்க தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் நாடகப் பாடல்களை மட்டுமே பாடுங்கள்; அப்பொழுதுதான் இசை நாடக வடிவத்தின் உயரிய தன்மை-செவ்வியல் தன்மை-வெளிப்படும் என்றேன். ராஜபார்ட் தலையாட்டினார்.

நாடகம் தொடங்கிவிட்டது. ராஜபார்ட் அரங்கில் பிரவேசிக்க வேண்டிய தருணம். நடிகரும் தயார். எல்லோரையும் வணங்கியபடி அசைந்தாடி குறுநடை நடந்து மெல்ல அரங்கில் பிரவேசித்தார் நடிகர். அவரைக் கண்டதுமே அரங்கில் குபீர் சிரிப்பு. ராஜபார்ட்டுக்கோ வெட்கமாகிப் போய்விட்டது. தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஒலி வாங்கி முன்னால் வந்து நின்றார். ‘மறைந்த திரையுலக இசை மாமேதை... என் குருநாதர்... டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கி... ஆரம்பிக்கின்றேன் என் பணியை. என் குருநாதரின் பாடலைப் பாடுகிறேன்...’ என்றார். என் முகத்தில் ஈயாடவில்லை. ராஜபார்ட் தொடங்கினார் தன்பணியை. ஆறு பாட்டு... டி.ஆர். மகாலிங்கம் பாட்டு.

ஒரு வழியாய் நாடகம் முடிந்தது. நண்பர் ஒருவரிடம் நாடகம் எப்படி இருந்தது என்று கேட்டேன். ‘விநாயகர் திருமணம்’ நன்றாகவே இருந்தது என்றார். ‘அட என்னப்பா... விடிய விடியக் கதை கேட்டு... சீதைக்கு ராமன் சித்தப்பன்றியே... நடந்தது வள்ளி திருமணம் நாடகமப்பா...’ என்றேன். நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘நடந்தது வள்ளி திருமணம்தான். ஆனால் வள்ளியை நடக்க முடியாத விநாயகரல்லவா வந்து திருமணம் செஞ்சுக்கிட்டார்?’ என்றார்.