தன் இருப்பை பறைசாற்றும்
அடர்கானகத்தின் இருள் ராஜ்ஜியத்தில்
அசந்தர்ப்பத்தில் உன்னை
எதிர்கொள்ளும் போது
உன் கண்கள் என் மீது
பச்சையத்தை வாரி உமிழ்கின்றன
திரவ அலையாக எனக்குள் பாயும் அது
வன்ம மரமாய் கிளை பரப்பி முளைத்தெழுகிறது

திசை தப்பிய மானை கவ்விப்போகும்
சிறுத்தையாக என்னை கவ்விப்போகிறது
உன் பார்வை
இனி இந்த அடர்ந்த கானகம் உனதாகிறது
உன் பற்களில் தோன்றும் சிவப்புத் தீற்றல்
சற்றைக்கெல்லாம் உன் நாவில்
வெதுவெதுப்பான குருதியாக ஓடுகிறது
தாகம் தீராத மனது ஒரு மிடறும்
மீதம் வைக்கப் போவதில்லை இனி

காலத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கும்
உடலை வெறித்தபடி
இரையாகிக் கொண்டிருக்கும் நான்
முழு விழிப்புடன் இருப்பது ஒன்றே
தாங்கொண்ணாத் துயரத்தை
தந்து கொண்டிருக்கிறது

உன் அண்மையில் நான் மட்டும் ஏன்
விலங்காக முடிவதில்லையென்பது
கண்களில் தீராத ஆச்சரியமாக
விரிந்து கொண்டே செல்கிறது

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.