நான் வந்தவனும் அல்ல
சென்றவனும் அல்ல
ஒற்றையடி

*
கவிதை கை வந்த பிறகு
காற்றில் கையெழுத்திடும்
பறவை றெக்கை கண்ணில் படும்

*
எது கொண்டும்
பெருமை கொள்வதில்லை
தனித்திருக்கையில் கொல்லும்
சிறுமை அது

*
எல்லா வரியிலும் இருந்து தொலை
கடைசி வரியை மட்டும்
கவிதைக்குத் தந்து விடு

*
துருவி முடித்த போது
தேங்காய் பூவாகி விட்டது
கையில் அழகிய திருவோடு

*
முதல் பாதி புலி
பின் பாதி மான்
என்ன வாழ்க்கை இது

*
உண்டாகத் தெரிந்த நதிக்கு
தனை துண்டாக்க
தெரிவதேயில்லை

*
பக்கம் பக்கமாய் எழுதுவேன்
பாட்டிக்கெனும் போது
'பாட்டி' மட்டும் தான் வருகிறது

*
வெறுப்பைக் குறைத்துக் கொண்டே வா
அப்படியே
விருப்பையும்

*
அதே தூரத்தில் இருந்தாலும்
அதே கிட்டத்திலும்
இந்த வானம்

*
தூதுப்புறாவையும் ஒற்றை நிலவாக்கி
தூக்கில் இட்டு விடும்
இந்தக் காதல்

*
அலையில் மதில் காண்கிறேன்
தாவும் மீன்
பூனையாகிறது

- கவிஜி