வழக்கம் போலவே
வந்துவிட்டுப் போகட்டும்
இந்த ஆண்டும்...
பெரும் மழை
புயல்
வறட்சி
போர்
அரசியல்வாதிகளின்
அண்டப்புளுகு
எதை
உங்களால்
தடு்த்துவிட முடியும்...?
பரிணாம வளர்ச்சியில்
தாங்கிக் கொள்ளவும்
தப்பிப் பிழைக்கவுமான
தகுதி படைத்த
உயிர்கள்
நாம்
அதனால்தான்
வாழ்கிறோம்
அப்படியே
நகரட்டும் வாழ்க்கை...
ட்ரம்ப் வாழ்ந்த காலத்தில்
ஜெகத்குருஜி வாழ்ந்த காலத்தில்
நாமெல்லாம்
உயிரோடு வாழ்ந்ததே
அவமானத்தின்
அடையாளம் என்றுதான்
வரலாறு
நம்மைப் பதிவு
செய்யப் போகிறது...
எருமையை விடவும்
நாம்
எந்த வகையிலும்
உயர்ந்தவர்கள் இல்லை
காலமாற்றத்தில்
கை கால்கள் முளைத்திருக்கின்றன
அவ்வளவுதான்...
அணுவைப் பகுத்த
எம்மால் தீண்டாமைத் தீட்டை
இன்னும்
உடைக்கவே முடியவில்லையே...
என்ன வளர்ச்சி
அடைந்திருக்கிறோம்
பழைய கற்காலத்திலிருந்து
புதிய கற்காலம்
குத்தீட்டிகளைக் கூர்தீட்டப் பழகியிருக்கிறோம்
விலங்கை வேட்டையாடிய நாம்
பசுவுக்காக
மனிதனை வேட்டையாடுகிறோம்...
எல்லா நோயிக்கும்
ஒரே மருந்து கோமியம்
எல்லா துயருக்கும்
ஒரே தீர்வு
ஜெய் ஸ்ரீராம்
எல்லா வீழ்ச்சிக்கும்
ஒருவரே காரணம்
நேரு
இந்த நூற்றாண்டின்
எளிய கண்டுபிடிப்பு
இவைகளாகத்தான்
இருக்க முடியும்...
சிக்கி முக்கிக் கல்லில்
வெளிப்பட்ட தீயைக்
கல் தூணில்தான்
ஏற்றுவோம் என்கிறோமே
இது என்ன
அறிவியல்...?
மது
வீட்டுக்கும்
நாட்டுக்கும் கேடு
அரசுக்கு இல்லை என்பதுதான்
இந்த நூற்றாண்டின் அயோக்கியத்தனம்...
சனநாயகத்தின்
உட்பட்சத் தகுதி்
வாக்களிப்பது
அதையே திருடி
அதிகாரம் பெறுவோம்
என்பதை
எந்தத் தொழிலில் அடக்குவது...?
மனிதம் சுவாசிப்பதற்கான
எல்லா
துவாரங்களையும்
மதம் அடைத்துவிட்டு
ஆகாயம் வழியாக அணுகுண்டு
தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது...
பூமியை
தண்ணீரை
காற்றை
கடலை மாசாக்கிவிட்டு
விண்வெளியில்
ஆராய்ச்சி நடத்துகிறோம்...
வளரவே கூடாதா?
தேசபக்தரின்
கொந்தளிப்பு புரிகிறது
மூளை வளர்ந்தால்
பரவாயில்லை
முடிவளர்ந்து எதற்காகப் போகிறது...?
ஏற்பது
விடுவது
கற்பது
புதிப்பிப்பது
முழங்குவது
முழக்குவது
என்ற புதிய உறுதிமொழிகள் எல்லாம்
ஒன்றுமே இல்லை
எல்லாமே இங்கே இருப்பதுதான்
குப்பை மேடுகள் கடந்து
மனிதனும்
மனிதமும் வாழ்வதற்கு
ஏதாவது செய்யுங்கள்...
வழக்கம் போலவே
வந்துவிட்டுப் போகட்டும்
இந்த ஆண்டும்...
- மகா.இராஜராஜசோழன்,
குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர்,
செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி