மானுட வரலாற்றில் சமுதாயம் நாடு போன்ற அமைப்புகளில் அரசியல் தலைமை தோன்றியவுடன் போர்களும் முகிழ்த்தன. மன்னராட்சி முறை வலிமைப் பெற்றவுடன் போர்களும் பெருகின. தொன்மைகால போர்கள் வீரத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டன. மாவீரன் அலெக்சாண்டர் இன்றைய பஞ்சாப் பகுதிகளில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு போரிட்ட போது மக்களுக்குப் பெரும் உயிரிழப்பில்லை என்று கூறப்படுகிறது. போர்வாள், வேல், கேடயம் போன்ற ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன. யானைப் படை, குதிரைப்படை, காலாட்படை என்ற பிரிவுகளும் மெல்ல மெல்ல போரில் படைக்கலன்களாகச் செயல்பட்டன. மாமன்னர் அசோகர் நடத்திய போர்களில் பல ஆயிரக்கணக்கான படை வீரர்கள் மாண்டனர் என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் சான்று பகர்கின்றன. பௌத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மன்னர் அசோகர் இதற்கு பின்பு போர்களைத் தவிர்த்தார். பௌத்த நெறிகளை உலகெங்கும் எடுத்துச் சென்றார்.

உலகில் முதன்முதலில் சீனாவில்தான் 10ஆம் நூற்றாண்டில் நெருப்பை உமிழும் கைகளால் இயக்கப்படும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் போர் களில் பயன்படுத்தப்பட்டன.

13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி வடிவில் சிதறி வெடிக்கும் வகையில் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. மன்னராட்சி முறை ஐரோப்பாவில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் இந்த ஆயுதங்கள் மென்மேலும் புதிய வடிவில் வடிவ மைக்கப்பட்டன. இருப்பினும் படைவீரர்களைத் தவிர்த்துப் பொதுமக்களுடைய உயிரிழப்பு குறைவாகவே இருந்தது.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி முறைகள் பல வடிவங்களில் ஏற்பட்டாலும் உயிர்க்கொல்லி ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முறையும் கைவிடப்படவில்லை. நெப்போலியன் ஐரோப்பிய நாடுகளில் போர் புரிந்து பல நாடுகளை அடிமைப்படுத்தினார். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரசியாவின் மீதும் போர் தொடுத்தார். பல ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரினால் பெருமளவில் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தன.

பல ஆய்வாளர்கள் 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்ற போர்களால் சில இலட்சம் கோடி ரூபாய் இழப்பும் பல இலட்சம் இராணுவ வீரர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டன என்று குறிப்பிடுகின்றனர். 18ஆம் நூற்றாண்டில் பொருளியல் அறிஞர் ஆதம் சுமித் “சுயாட்சியுடைய சமுதாய அமைப்புகளை ஆயுதங்களைப் பெருக்கி வன்முறை களையும் சீரழிவுகளையும் ஏற்படுத்துவதுதான் அரசினுடைய முதன்மையான பணியாக வளரத் தொடங்கியது” எனக் குறிப்பிட்டுள்ளார். அறவழிகளை முற்றிலும் புறந்தள்ளிப் போர் வழியாக பிற நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றுவதே ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் முதன்மையான பணியாகப் போற்றப்பட்டது. பொதுச் செலவு என்பதே போர்ச்செலவு என வளரத் தொடங்கியது. இதைக் கண்டனம் செய்யும் வகையில் 18ஆம் நூற்றாண்டில் லியான் சே (Leon Say (1786)) என்ற பிரெஞ்சு நாட்டுப் பொருளாதார அறிஞர் பொதுச் செலவு என்பதே உலகம் தழுவிய தீமைகளில் ஒன்றானது என்றார். மேலும் பொதுச் செலவு என்ற நிதியியலில் சுட்டப்படும் அமைப்பு தேவையற்றது எனவும் கூறினார்.

வட்டார அளவில் இவ்வாறு பல போர்கள் நடந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த போர்கள்தான் உலகப் போராக முதன்முதலில் வெடித்தது (1914-1918). ஐரோப்பிய நாடுகளுக்குள் நடந்த இந்தப் போரில் 3 கோடியே 74 இலட்சம் படைவீரர்கள் ஒரு கோடியே 30 இலட்சம் பொது மக்களும் உயிரிழந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பல இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதால் போரைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1920இல் 42 நாடுகள் இணைந்து நாடுகளின் மன்றம் (League of Nations) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவான பின்பு பல பன்னாட்டு வர்த்தக வணிகச் சட்டங்கள் உருவாயின என்றாலும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கப் போர் வெறியைத் தடுக்க முடிய வில்லை.

பல வியப்பான நிகழ்வுகளுக்கும் பற்றாக்குறை யில்லை. பெர்ட்ரண்டு ரசல் போன்ற அறிஞர்கள்  போர்களுக்கு எதிராகக் களம் கண்டனர்; சிறை பிடிக்கப்பட்டனர். ஆனால் முதல் உலகப் போரின் போது இங்கிலாந்தில் இருந்த காந்தியார் அந்நாட்டிற்கு ஆதரவாக இந்தியர்கள் போர்ப்படையில் சேர வேண்டும் என வலியுறுத்தினார். போரில் பங்கு பெறுவது வீரம் என வர்ணித்தார். முதல் உலகப் போரில் இங்கிலாந்து படையில் பங்குபெற்று 43 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்தனர். போர் முடிந்த சில மாதங்களிலேயே இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசுத் தனது இராணுவ அடக்குமுறைகளை இந்திய மக்களின் மீது ஏவி ஜாலியன் வாலாபாக் (1919) படுகொலையை நிகழ்த்தியது. காந்தியாரின் நெருங்கிய நண்பர் சார்லே ஆண்டுருஸ் நான் தனிப்பட்ட முறையில் அவரின் இந்தச் செயலுக்கு ஒரு போதும் உடன்பட முடியவில்லை. மனவருத்தத்தோடு இந்தக் கருத்தில் அவரோடு வேறுபடுகிறேன் என்றார். காந்தியின் தனிச்செயலராகப் பணியாற்றிய மகாதேவ் தேசாய் காந்தியின் பிரித்தானியப் போர்ப்படை ஆதரவு தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது உண்மை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரினால் (1939-1945) உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் உட்படப் பல நாடுகளில் இப்போர் மூண்டது. 2 கோடியே 50 இலட்சம் படைவீரர்கள் உயிரிழந்தனர் 2 கோடி மக்கள் பல நாடுகளில் ஏதிலிகளாகத் தள்ளப்பட்டு சொத்துகளையும் வீடுகளையும் இழந்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவடையும் காலக் கட்டத்தில்தான் ஐக்கிய நாடுகள் மன்றம் 1945இல் உருவானது. போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், உயிரழிவுகள், வள அழிவுகள், வாழ்வாதார அழிவுகள் மீண்டும் ஒரு போரினால் ஏற்படக் கூடாது என்ற உயரிய கொள்கை அடிப்படையில் தான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை பிரகடனம் 1948ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. போர் முடியும் தருவாயில் மின்சாரத் துண்டிப்பு இருந்த காலக்கட்டத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ரூஸ்வெல்ட்டின் துணைவியார் எலினார் ரூஸ்வெல்ட்டும் பிரான்சு நாட்டின் சட்ட இயல் அறிஞருமான ரெனே காசின் அவர்களும் பல வல்லுநர்களோடு கலந்தாலோசித்து இந்த அறிக்கையை எழுதினர். இரவிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இவ்வறிக்கையை எழுத வேண்டுமா என்ற கேள்வியை பலர் கேட்டனர். சட்ட இயல் அறிஞர் ரெனே காசின் மனிதனுடைய இயல்பு மாறக்கூடியது; ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் தன்மையைப் பெற்றது. எனவே இந்த அறிக்கையை விரைந்து எழுதி மானுட உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க முற்படுகிறோம் என்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வட்டார அளவில் நடந்த பல போர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உயரிய நெறியைச் சிதைத்துவிட்டன. பல ஐரோப்பிய நாடுகள் தங்களின் ஆயுத வலிமையால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை அடக்கி காலனிகளாக மாற்றிப் பெரும் பொருளாதாரச் சுரண்டலை 18, 19ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தின. வடிவங்களாக மாறின. ஆதிக்கப் போக்கும் ஆணவப் போக்கும் இன்றும் தொடர்கின்றன. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கூட்டுப்பொறுப்பை முழு அளவிற்குச் சிதைத்து இம்மன்றத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் சில நாடுகள் வைத்தன. கட்டுப்படுத்தியுள்ளன என்பதே உண்மை.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பல்வேறு பொருளாதார, மருத்துவ, சமூக, குழந்தைகள் நலம், தொழிலாளர் நலன் போற்றுகிற அமைப்புகள் வெளியிடும் பல்வேறு அறிக்கைகளாலும் பல்வேறு துயர் துடைப்பு நடவடிக்கைகளாலும் இன்றளவும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தேவை இன்றியமையாததாக அமைந்துள்ளது. போருக்குப்பின் துயர்துடைக்கும் பணிகளையே இந்த அமைப்புகள் செய்து வருகின்றன.

சான்றாக 1950களில் வியட்நாம் மீது பிரான்சு நடத்திய போர்; 1960களில் அமெரிக்கா வியட்நாம் மீது நடத்திய போர்; 1980களில் நடந்த இரான்-ஈராக் போர்; லெபனான் போருக்கு இணையான பல உள்நாட்டுப் போர்களும் இந்த ஆதிக்க நாடுகளால் தூண்டப்பட்டு நடைபெற்றன.

1962இல் இந்திய சீன எல்லையில் நடைபெற்ற சண்டை, 1965, 1971, 1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போர்கள் 1990ஆம் ஆண்டுகளில் வளைகுடா போர்; 2009ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போர்; ஆப்கானிஸ்தான் போர் போன்ற பல போர்களினால் உலகளவில் பொருளாதார சரிவுகள் மக்களின் வாழ்விடங்களில் ஏற்பட்ட இழப்புகள் உயிரிழப்புகள் எண்ணிலடங்கா.

சான்றாக 2003இல் அமெரிக்கா ஈராக் மீது நடத்திய போரின் ஓராண்டுச் செலவை கணக்கிட்ட அறிஞர்கள் ஜோசப் ஸ்டிக்லி` லிண்டா ஜே.பிலிமசு ஆகியோர் ஓராண்டில் மட்டும் 150 இலட்சம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவிட்டுள்ளது என்று தங்களது நூலில் (The Three Trillion Dollor War) கூறியுள்ளனர். “அமெரிக்காவின் உயர் அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் அளித்த தவறான தகவல்களின் அடிப்படையில் இந்தப் போர் தொடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையின் ஒப்புதலைப் பெறாமல் பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டபோர். பள்ளி இறுதித் தேர்வு எழுதக்கூடிய நிலை யில் உள்ள 18 வயதான இளைஞர்கள் ஈடுபடுத்தப் பட்டார்கள். ஹாலிபர்ட்டன் பிளாக் வாட்டர் செக்யுரிட்டி (Halliburton, Black Water Security) என்ற இரண்டு தனியார் ஒப்பந்தக்காரர்கள் அதிக அளவில் போர்ச் செலவை உயர்த்திப் பயன் பெற்றுள்ளார்கள். நாற்பதாயிரம் அடி உயரத்தில் இருந்து மக்கள் மீது விமானங்கள் வழியாக எறி குண்டுகள் வீசப்பட்டன. உலக அளவில் இராணுவச் செலவிற்காகச் செய்யப்படுகின்ற செலவில் 47 விழுக்காட்டினை அமெரிக்கா மட்டுமே செய்தது” என்று இந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போர் என்பது ஆண்களையும் பெண்களையும் கொன்று குவிப்பதாகும். அவர்களை முடமாக்கிச் செயலிழக்கச் செய்யும் கொடுஞ்செயலாகும் இதற்கான செலவுகள் துப்பாக்கியின் கடைசிக்குண்டு வெடித்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்கும். (War is about men and women brutally killing and maidming other men and women. The costs live on long after the last shot has been fired - Three Trillion Dollor War : The True Cost of the Iraq Con­flict, Jopeph Striglitz and Linda Bilmes, 2008. Penguin Publication, P.206) என்ற கருத்து இன்றும் உண்மையாகி விட்டதல்லவா?

இந்த நூல் வெளிவந்த பின்தான் அமெரிக்கா கொடுமையான முறையில் ஆப்கானிஸ்தானைத் தாக்கியது. இத்தகையப் போர்களால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்து ஏற்றத்தாழ்வுகள் பெருகி பொதுக்கடன் நாட்டினுடைய ஒட்டு மொத்த உற்பத்தியைவிடப் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அதனுடைய அழிவுகளை அன்றாடம் தொலைக்காட்சியின் வழியாகக் காண முடிகிறது. நடை பெற்று வரும் இப்போரால் பொருளாதாரச் சீரழிவை உலகளவில் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு உட்பட பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. 1990களில் உலகமயமாதல் என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்தி உலகளவில் முற்றுரிமை முதலாளித்துவத்தை (Monoply Capitalism) வளர்த்து விட்டது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் என்பதுதான் உண்மை.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்செயலாளராக இருக்கின்ற அன்டோனியோ கெட்டரஸ் (Antonio Guterres) 2020இல் நெல்சன் மண்டேலா ஆண்டு கருத்தரங்க உரையில் குறிப்பிட்ட கருத்து உற்று நோக்கத்தக்க தாகும். வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது காலனி ஆதிக்கம்தான். உலகின் வடக்குப் பகுதியில் உள்ள நாடுகள் குறிப்பாக நான் சார்ந்த கண்டமான ஐரோப்பா அடக்குமுறையைக் கையாண்டு வன்முறை வழியாகத் தெற்கு நாடுகளின் மீது காலனி ஆதிக்கத்தைப் பல நூற்றாண்டுகளாகத் திணித்தது... உலகின் 50 விழுக்காட்டு மக்களின் மொத்த செல்வத்தை 26 பெரும் பணக்காரர்கள் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டதனால் அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நிலையற்றத்தன்மை ஊழல் நிதிச்சிக்கல் கள் பெருகிவரும் குற்றச்செயல்கள் உடல் நலிவுகள் மன உளைச்சல்கள் ஆகியன இந்த ஏற்றத்தாழ்வு களால் ஏற்படுகிறது” என்றும் அன்டோனியோ குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் கொரானா பெருந்தொற்று உலகளவில் பரவி பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடுமையான மோசமான பொருளாதார நெருக்கடியிலும் பல நாடுகள் போர்ச் செலவினைக் குறைக்கவில்லை. உலக மக்கள் தொகை ஆய்வறிக்கையில் (2022) உலகில் அதிகமாக இராணுவத்திற்குச் செலவிடும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. வரிசைப் பட்டியலில் அமெரிக்கா சீனா இந்தியா ரஷ்யா இங்கிலாந்து சவுதி அரேபியா ஜெர்மனி பிரான்சு ஜப்பான் தென் கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. இதில் கொடுமை என்னவென்றால் மற்ற 9 நாடுகள் இராணுவத்திற்குச் செய்யும் செலவுத் தொகையை மொத்தமாகக் கூட்டிக் கணக்கீடு செய்யும் போது அமெரிக்காவின் செலவுத் தொகை 77800 கோடி டாலர் ஆகும். இது மற்ற 9 நாடுகளின் கூட்டுத் தொகையான 73000 கோடி டாலரைவிட அதிகமாக உள்ளது. உலகில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இடம் பெற்றுள்ள 193 நாடுகளில் இந்தப் பத்து நாடுகள்தான் இராணுவத்திற்காக அதிகம் செலவு செய்கின்றன. போர்ச் செலவை செய்யும் 10 நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா மற்ற வளர்ச்சிக் குறியீடுகளில் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆய்வது அவசியமாகிறது.

ஐக்கிய நாடுகள் முன்னேற்ற அமைப்பு ஆண்டு தோறும் வெளியிடும் மானுட மேம்பாட்டு அறிக்கையின்படி (2020) இந்தியா 189 உலக நாடுகளின் வரிசைப்பட்டியலில் 131ஆம் இடத்தில் உள்ளது.

உலகில் பட்டினி பசியால்வாடும் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட 116 நாடுகளின் வரிசைப் பட்டியலில் (2021) இந்தியா 101ஆம் இடத்தில் உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழும் 146 நாடுகளின் வரிசைப் பட்டியலில் (2022) இந்தியா 136ஆம் இடத்தில் உள்ளது. உலகில் வருமான செல்வ ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நாடுகளின் பட்டியலிலும் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. இவ்வறிக்கையின்படி இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மக்கள் 22 விழுக்காடு செல்வத்தை யும் சொத்துகளையும் அடுத்ததாக 10 விழுக்காடு மக்கள் 57 விழுக்காடு செல்வத்தையும் சொத்து களையும் பெற்றுள்ளனர். 50 விழுக்காட்டு மக்கள் 13 விழுக்காடு அளவிற்கே செல்வத்தையும் சொத்தையும் பெற்று மிக மோசமான பொருளாதாரச் சூழலில் தவிக்கின்றனர்.

எனவே போர்களைத் தவிர்ப்பதும் போர்ச் செலவைக் குறைப்பதும்தான் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

2350 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தின் பஞ்சாபின் பகுதிகளை அலெக்சாண்டர் போர் தொடுத்துக் கைப்பற்றினார். அந்தப் போரின் போது சில சமணத் துறவிகள் மரத்தடியின் கீழ் அமர்ந்து தங்களது சீடர்களுக்குப் பாடம் கற்பிப்பதைப் பார்த்தார். சமணத் துறவியான டண்டமிஸைத் தன்னிடம் அழைத்து வரும்படி கட்டளையிட்டார். அப்படிச் சமணத் துறவி வரவில்லை என்றால் அவரது கழுத்து வெட்டப்படும் என்ற எச்சரிக்கையையும் அனுப்பினார். டண்டமிஸ் அலெக்சாண்டரைச் சந்திக்க முடியாது என மறுத்து விட்டார்.

“தங்கம், செல்வம் போன்றவற்றில் பேராசை கொண்டவர்கள்தான், விரும்புபவர்கள் தான் அலெக்சாண்டரின் மிரட்டல்களுக்கு அஞ்சுவார்கள்” என துறவி கூறிவிட்டார். அலெக்சாண்டர் ஏதாவது கூற வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும் என டண்டமிஸ் குறிப்பிட்டார். இந்தச் சமணத் துறவியின் கருத்துகள் அலெக்சாண்டரைப் பெரிதும் வியக்கச் செய்தது. இதற்குப் பிறகுதான் சமணக் கருத்துகள் கிரேக்கத்திற்குச் சென்றன என்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தூதர் ஒரு சமணத் துறவியின் சீடர் என்பதையும் ‘இந்தியர்கள் : ஒரு நாகரிகத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ (Indians : A Breif Histroy of a Civilization)  என்ற நூலில் ஆசிரியர் நமித் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வை நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர் அமர்தியா சென் நீதியின் கருத்து (The Idea of Justice)  என்ற நூலில் உலகத்தை வென்ற அலெக்சாண்டர் சமணத் துறவிகளிடம் ‘ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு அலெக்சாண்டர் பெற்ற விடை நம்மை மலைக்க வைக்கிறது. நாங்கள் நிற்கின்ற இடத்தில் உள்ள நிலப்பகுதியைத்தான் பெற்றிருக்கிறோம். நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்தான். ஆனால் நீங்கள் உங்கள் இல்லத்தைத் துறந்து, பல ஆயிரம் மைல்களைக் கடந்து எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். இதனால் யாருக்கும் நன்மை இல்லை. உங்களுக்கும் தொல்லை; மற்றவர்களுக்கும் தொல்லை. வெகு விரைவில் நீங்கள் இறந்து விடுவீர்கள். அப்போது உங்களைப் புதைக்கத் தேவையான இடம் மட்டுமே போதுமானதாகும் என்று சமணத் துறவிகள் சுட்டினர். இந்த நிகழ்வின் வழியாக அலெக்சாண்டர் சமணத் துறவிகளின் மீது பெரும் மரியாதையையும் தனக்கு எதிராகக் குறிப்பிட்ட கருத்தையும் ஏற்பதாகவும் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அரியனிடம் குறிப்பிட்டதாக அமெர்தியா சென் சுட்டியுள்ளார்.

“அலெக்சாண்டர் காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைவிட இவ்வித உரையாடல்கள் வழியாகவும் தொடர்புகள் வழியாகவும் ஆழமான மாற்றங்கள் இந்தியப் பண்பாட்டுத் தளங்களில் நிகழ்ந்துள்ளன என அறிஞர் அமெர்தியா சென் குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியம், நாடகம், கணிதம், வானியல், சிற்பக்கலை போன்ற பல துறைகளில் கிரேக்கத்தின் செல்வாக்கு ஏற்பட்டது என்பதையும் சென் குறிப்பிட்டுள்ளார்.

தொன்மை காலத்தில் அலெக்சாண்டர் என்ற மாபெரும் போர் வீரன் பின்பற்றிய உயர்ந்த பண்பாட்டு நெறிகளை வெளிப்படுத்துகிறது. உலக நாடுகளின் பலவற்றை கைப்பற்றிய அலெக்சாண்டர் கிரேக்கத்தின் மாபெரும் மெய்யியல் அறிஞரான அரிஸ்டாடிலிடம் மாணவராகப் பயின்றதால் மனித உயிரையும் மற்ற அழிவுகளையும் ஏற்படுத்தும் போர்களைவிட உயர்ந்த நெறிகள் மானுடத்தை வாழ்விக்கும் என்ற கருத்தையும் ஏற்றார். ஆனால் இதற்கு நேர்மாறாக இன்றையப் போர்கள் மானுடத்தை அழிவின் உச்சத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நுணுக்கங்கள் போர் முனையில் மக்களைக் கொல்வதற்கு துணை போகின்றன. சுயநலத்திற்காகவும் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தனியார் முதலாளிகளின் நலன்களுக்காகவும் போர்கள் நடைபெறுகின்றன.

மக்களின் அழிவில் ஆயுத வணிகர்கள் செழிக்கின்றனர். பெரும்பான்மையான மக்களின் நலத் திட்டங்களைப் புறக்கணித்து இராணுவச் செலவினை முன்னிறுத்துகின்றனர். நாடுகளின் அமைதியைச் சீர்குலைக்கின்றனர். “என்று தணியும் இந்தப் போர் வெறி? எப்போது மக்களுக்கு விடுதலை கிடைக்கும்?” இதற்கு விடைகாணாமல் உலகில் மானுட வளர்ச்சியையும் அமைதியையும் காண முடியாது.

- பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It