பாலஸ்தீன நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து சியோனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனத்தை மட்டுமல்லாமல் ஈரானுடனும் பகைமை காட்டி வருகிறது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்புல்லா, அமாஸ் அமைப்புகள் இஸ்ரேல்மீது குறிப்பாக டெல்அவி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துகிறது. பதிலுக்கு இஸ்ரேலும் காசா, லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது.

அதே சமயம் மத்திய கிழக்கு நாடுகளிடையே தத்தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட இஸ்ரேலும், ஈரானும் முயல்கின்றன. அண்மையில் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான இஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா உயிரிழந்தார்.

இதனால் தன் பகைநாடான இஸ்ரேல்மீது ஏறத்தாழ 400 ஏவுகணைகளை அனுப்பிக் கடும்தாக்குதலை ஒரே இரவில் நடத்தியது ஈரான்.

உடனே இஸ்ரேலைக் காப்போம், அதற்கு ஆயுதங்கள் கொடுப்போம், அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகத் தயாராகட்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு கொடுக்கும் என்று தெரிகிறது. இனி ஈரானுக்கு ஆதரவாக எந்தெந்த நாடுகள் அணிவகுக்கும் என்பது தெரியவில்லை.

ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது, இதுகுறித்துப் பேச. அது பயன் தருமா என்று தெரியவில்லை. அதேசமயம் ஐ.நா பொதுச் செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது அந்நாடு. மொத்தத்தில் அமைதியற்ற போர்ச்சூழலில் மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன என்பது பெரும் கவலையைத் தருகிறது.

நவீன போர்க் கருவிகள் மூலம் தொலைதூரத் தாக்குதல்கள் நடத்தும் போது அங்கு முதியோர்,' பெண்கள், குழந்தைகள் என மக்கள் கொல்லப் படுவதும், ஊனம் உறுவதும், உறவுகளை இழப்பதும் எவ்வளவு கொடுமையானது. இது மனித உரிமை மீறலாகும்.

போரைத் தொடர விரும்பவில்லை என்கிறது ஈரான். விடமாட்டோம் ஈரானை என்கிறது இஸ்ரேல். உலக நாடுகள் இந்தப் போர்ப் பதற்றத்தைத் தடுத்து அமைதிகாண முயற்சிகளைச் செய்ய முன்வர வேண்டும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் சொல்கிறார், "கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்".

- கருஞ்சட்டைத் தமிழர்