என்னால் சாக முடியாது
நான் எதற்கு சாக வேண்டும்
ஆட்சி அதிகார
egoist attitude-க்கு எங்கள் வீடுகளை
எதற்கு காவு தர வேண்டும்
பதுங்கு குழி பாதி உயிர்
பசித்த வயிறு
மீண்டும் குருதி தோய்ந்த
அதே ரொட்டித்துண்டு
மருந்து மாத்திரை வெறுப்பு
குரோதம் வஞ்சம் வெஞ்சினம்
எல்லாம் எல்லாம் stupid அணுகுமுறை
பேசிப் புடுங்க முடியாத ஒன்றை
குண்டு வீசி புடுங்கப் போவதில்லை
புடினோ புண்ணாக்கோ
புத்தியோடு நடந்து கொள்தல்
அவசியம்
எந்தப் போராவது நல்லதொரு
முடிவைத் தந்திருக்கிறதா
எந்த சண்டையாவது சாந்தம்
பேசியிருக்கிறதா
சண்டை என்பது சாத்தான்
அது கழுத்தறுக்கவே காத்திருக்கும்
மனிதன் மகத்தான சல்லிப்பயல்
என்று மூன்றாம் முறையும்
நிரூபிக்க வேண்டுமா
இரண்டு முறை நிரூபித்து
பல்லிளித்துக் கொண்டது
பக்கோடா செய்யக் கூட உதவாது
புரிகிறதா
உங்கள் முட்டாள்தனங்களுக்கு
உங்கள் அதிகாரத் திமிருக்கு
உங்கள் superiority complex-க்கு
இனியும் எங்களால்
சாக முடியாது

தோளில் தம்பியை சுமந்து
சுடுகாட்டில்
தீ மூட்ட நிற்கும் சிறுவன் தான்
கத்துகிறேன்

செத்துப் போவது சுலபம்
சாவு சுமப்பது கடினம்

- கவிஜி

Pin It