thirumurthy manபுதினங்களை உரைநடைக் காப்பியங்கள் என மேலைத் திறனாய்வாளர்கள் கூறுவர். வீரயுகத்தின் இலக்கிய வகையாகக் காப்பியம் திகழ்ந்தது. மக்கள் யுகத்தின் இலக்கிய வகையாகப் புதினம் விளங்குகிறது. சாதாரண மனிதர்களின் சராசரி வாழ்வைப் படம்பிடிக்கும் புதினங்கள் மக்களின் மொழிக்கு முதன்மை தருவதோடு, மண் சார்ந்த வாழ்க்கை முறையையும் காட்டுகின்றன.

கரிசல் நிலம், கொங்குமண்டலத்தைக் களமாகக் கொண்ட சிறப்பான பல படைப்புகள் தமிழில் வந்துள்ளன. பேராசிரியர் பொன்னுசாமி; ‘படுகளத்தை’யடுத்து, ‘திருமூர்த்தி மண்’ என்று கொங்கு மண்டல புதினத்தைத் தமிழுக்குத் தந்துள்ளார்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பிரேமா நந்தகுமார், அசோகவனச் சீதை அனுமனைக் கண்டபோது பின் இராமன் வந்து தன்னை மீட்பான் என்று நம்பிக்கையோடு எண்ணியது போல், இராஜேஸ்வரி போன்றோரின் கிராமவாழ்வு காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். திருப்பூர் கிருஷ்ணன் கொங்குத் தமிழில் ஒரு சமூகத்தின் பல்வேறு தளங்கள் புதினத்தில் காட்டப்பட்டுள்ளதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

முதல் அத்தியாயத்தில், குருசாமியின் குதிரை வண்டி பயணத்தை வர்ணிக்கும் போதே ஆசிரியர் தனது இட உணர்வை (Sense of place) மிக நுணுக்கமாகக் காட்டுகிறார். அதை முந்திக் கொண்டு இன்னொரு வண்டி செல்கிறது. அதில் செல்லும் நல்லதம்பி, மாணிக்கம் ஆகிய கதையின் முக்கிய பாத்திரங்களின் அறிமுகமும் இயல்பாக உள்ளது.

குருசாமிக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உரையாடல், முதுமை & இளமை மோதலாகக் காட்டப்பட்டுள்ளது. குதிரை வண்டிச் சவாரி, கதை முழுதும் காலச் சுழற்சி, இட இணைப்புகளின் குறியீடாக வருகிறது.

இரண்டாம் அத்தியாயத்தில், இந்தப் பகுதியின் வாழ்வாதாரமாகச் செட்டி குளமும், திருமூர்த்தி அணையும், அதன் நீர் நிறைவதில் அக்கறைகாட்டும் கண்ணுசாமியும் பாலுசாமியும் அறிமுகப்படுத்தப் படுகின்றனர். இங்கே பத்து ஆண்டுகளுக்கு முன் கன்னியப்பனும் செல்லானும், பன்னீர்க் கவுண்டரையும் பொங்கியண்ணக் கவுண்டரையும் எதிரெதிராக நடக்க விட்டது நினைவு கூரப்படுகிறது.

பன்னீர்க் கவுண்டரின் தண்ணீர் பற்றிய அடாவடித்தனமும், அந்தப் பகுதி மக்கள் தண்ணீர் நிறைவதைப் பொருத்து விவசாயத்தில் மாறுதல்கள் செய்து வருவதும் பேசப்படுகிறது. மொத்தத்தில் செட்டிகுளம் ஒரு வகையில் ஊரின் ஒற்றுமைக்குக் குறியீடாகவும், அதுவே மக்களின் பகைக்குக் காரணமாகி விடுவதையும் உணர்த்துகிறார் ஆசிரியர்.

அடுத்து வரும் அத்தியாயங்களில் பகையும் காதலும் பள்ளிபுர வாழ்வில் ஊடும்பாவுமாகப் பின்னி வருகின்றன. பகை, நிலத்தையும் நீரையும் ஒட்டி வருகிறது. பொங்கியண்ணன், சென்னியப்பன் பகைக்கு இடையே கனகவேல்-வெங்கிட்டம்மாள் காதல் அரும்புகிறது.

அதை வீராசாமி மீசை முறுக்குவதோடு இணைத்துக் கூறுகிறார். வீராசாமியின் மீசை கதையில் திரும்பத் திரும்ப வரும் ஒரு இணைப்புப் படிமமாக உள்ளது. இதை motif என இசை பற்றிய சொல்லால் திறனாய்வாளர்கள் கூறுவர்.

வெங்கிட்டம்மாளை கனகவேலும் நல்லதம்பியும் கடத்த, திருமலை ஆலையில் ஏற்பட்ட கொந்தளிப்பால் கனகவேல் படுகாயப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போதும், வெங்கிட்டம்மாள் உறுதி குலையவில்லை. இன்னொரு முக்கியப் பெண்பாத்திரமான இராஜேஸ்வரி, பட்டம் பெற்ற பின்னும் நல்லதம்பியின்பால் உறுதியாக உள்ளாள். ஆனால், நல்லதம்பி அவ்வளவு உறுதியாக இல்லை. நல்லம்மாளுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது.

சென்னியப்பன் கிணறு வெட்டும்போது வெடிவிபத்தில் இரண்டு பேர் இறக்க யார் காரணம் என்பதைக் கடைசியில் வரதன் மனைவி பொன்னி வழியாகத்தான் தெரிகிறது. கடைசிவரை ஆசிரியர் வெளிப்படுத்தாது நல்ல கதை சொல்லும் உத்தியாக உள்ளது. இதுபோல் பல இடங்களில் சிக்கல்களை உடனே அவிழ்க்காமல் ஆசிரியர் விட்டு விடுகிறார். வீராசாமி தலைமைக் காவலரின் கைகளைக் குலுக்குவதன் பொருளும் புதிராகவே விடப்படுகிறது.

பொன்னி தவறு செய்த வேலையாள் வரதனை தன் கணவனையே போலீசில் காட்டிக் கொடுக்கிறாள். ஆணாதிக்கமுள்ள இந்தச் சமூகத்தில் ஆண்கள் பகை வளர்ப்பவர்களாகவும் காதலில் உறுதியில்லாதவர்களாகவும் உள்ளபோது இந்த மூன்று பெண்களிலும் பெண்மை திண்மையோடு விளங்குகிறது. வெங்கிட்டம்மாளுக்கு உதவும் கீர்த்தியும் குறிப்பிடத்தக்கவள்.

இராஜேஸ்வரி தன் கல்வியை வளர்க்க சென்னையில் பேராசிரியர் அரங்கனிடம் மருத்துவமனையில் இருந்தபோது அதே மருத்துவமனைக்கு நோயுற்ற வெங்கிட்டம்மாளும் கனகவேலும் வருகிறார்கள். கதையின் இரு கூறுகளும் இணைக்கும்போது பெண்களுக்கிடையே உளமார்ந்த இணைப்பையும் (Solidarity) ஆசிரியரின் கதைப் பின்னல் ஆற்றலையும் காணலாம்.

கண்ணுசாமியின் மறைவைக் குறிக்கும்போது ஆசிரியர் தொடக்கத்தில் அவரைப்பற்றிக் கூறியதை மறக்கவில்லை. கண்ணுசாமியின் கடைசி ஊர்வலம், அவர் தன் `சின்ன நிலம்’ வயலுக்குச் செல்லும் பாதை­யிலேயே போவதாகக் கூறுகிறார்.

`அப்போதெல்லாம் பல நேரங்களில் குளக்கரையில் ஏறியதும் கிழக்கே திரும்பிச் சற்று தூரத்தில் தன் அம்மாவையும் அருமைத் தம்பியையும் புதைத்த இடத்தைப் பார்ப்பார். அவர்கள்பற்றிய எண்ணம் அவர் நடையுடன் தொடரும். சிறிது தூரத்தில் வயலுக்குப் போகும் நீர்மடை வந்துவிடும். இப்போது அவரது உடல் அவர்களுக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டு மண்ணையும் காய்ந்து போன ஒரு மாலையையும் சுமந்து கொண்டிருக்கிறது.’

பள்ளிபுரத்தில் சாவும் வாழ்வும் இணைந்தே வருகின்றன. நல்லதம்பி மயிலம்மாள் திருமண ஏற்பாடும் தொடர்கின்றன. கிணற்று வழக்கின் தீர்ப்பும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

சென்னையில் ராஜியின் அறிவுரை வெங்கிக்குப் புதிய ஒளியைத் தருகிறது. அவள் அம்மாவும் திருந்தியதாக அறிந்து, ஊருக்குத் திரும்ப நினைக்கிறான். காதல் சுமையை இறக்கி வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட ராஜியின் மனத்தையும் மாணிக்கம் பக்கம் திருப்ப முயல்கிறாள். ராஜி மாணிக்கத்திடம் நட்புதான் என்று கூறும்போது, நட்பு காதலைவிடப் பெரியது என்றும், நட்பு காதலாக மாறலாம் என்றும் அவன் கூறுவது ராஜிக்கு வியப்பளித்தது.

படித்துக் காதலில் தோற்றவரும் படிக்காமல் காதலில் தோற்றவரும் இணைந்தாலும் அவர்களின் அணுகுமுறைகளிலும் வேறுபாடு இருந்தது. காதலுக்காக கனகவேலுவைக் கவனிப்பதையே கடமையாக வெங்கி கருதினான். ஆனால், அது மட்டுமே ஒரு இளம்பெண்ணின் முடிவாக இருக்கக் கூடாது என்பது ராஜியின் புதிய பார்வை என ஆசிரியர் காட்டுகிறார்.

வீராசாமி & வெங்கிட்டம்மாள் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது; அதற்கிணையாக, வீராசாமி சென்னியப்பன் மீசைச் சண்டையும் நடக்கிறது. மீசை மறுபடியும் கதையில் முக்கிய இடம் வகிக்கிறது. திருமணமும், பகையும், வாழ்வும் சாவும் போல கதையில் இணைந்தே வருகின்றன.

இறுதிக் கட்டத்தில் திருமூர்த்தி அணையும், அங்குள்ள பஞ்சலிங்க அருவியும் கதையின் களமாகின்றன. திருமூர்த்தி அணை பள்ளிபுரத்தின் வாழ்வாதாரமாகவும், சச்சரவுகளின் மூலாதாரமாகவும் இருக்கிறது. அதேபோல அணை நீர், கடந்த கால நிகழ்வுகளின் நினைவோடையாகவும், நிகழ்கால நிகழ்வுகளின் தளமாகவும் இருப்பதால் இங்கு கடந்த காலமும் நிகழ்காலமும் இணைகின்றன.

ராஜி, பஸ்ஸில் மாணிக்கத்துடன் வரும்போது, பஸ் பள்ளிபுரத்தைக் கடந்தபோது, நல்லதம்பியுடன் திருமூர்த்தி மலைக்கு வந்ததையும், நீரோடையில் குளித்து மகிழ்ந்ததையும், பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் வந்தபோது நல்லதம்பி தன்னை காப்பாற்றியதையும் நினைவுகொள்கிறான்.

அதேபோல் சோமுத்தேவரும் பத்து வருஷங்களுக்கு முன் அருவியில் ராஜேஸ்வரியும், கவுண்டர் சின்ன மகள் சிவந்தியும் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை நல்லதம்பி வெள்ளத்­திலிருந்து காப்பாற்றியதை நினைவுகூர்ந்து அங்கு மறுபடியும் வந்ததாகக் கூறுகிறார். காலம் காலமாக வீழும் அருவி, ஓடும் கனவு மற்றும் நினைவுகளைச் சுட்டும் குறியீடாக உள்ளது. காலங்களின் மூலமாகவும் முடிவாகவும் (ஓட்டமாகவும்) மலையும், குன்றும் காட்டப்படுகின்றன.

அதேபோல, அங்குள்ள திருமண மண்டபமும் கடந்த நிகழ்கால நிகழ்வுகளின் இணைப்பாக உள்ளது. வீராசாமி வெங்கிட்டம்மாள் திருமணம் அங்குதான் நிகழவுள்ளது. கண்ணுச்சாமி, சோமுத் தேவரிடம் ‘எங்கய்யனுக்கும், பெரியவங்க ரெண்டு பேருக்கும் இந்த மண்டபத்தில் தான் கல்யாணம் நடந்ததுங்க. முருகாத்தா, செவ்வந்திக்கும் இங்குதான் நடந்ததுங்க’ என்று கூறுகிறார்.

மண்டப அறைக்குள், மணப்பெண் வெங்கிக்கு அலங்காரம் செய்யும் ராஜி, விளையாட்டாக `எனக்குக் கூட இந்த மண்டபத்தில் கல்யாணம் நடந்திருக்கணும், நடக்கல’ என்று அவளிடம் கூறுகிறாள். இப்படி நடந்த, நடக்காத கல்யாணங்களின் மௌனச் சாட்சியாக மண்டபம் இருக்கிறது. `இனிமே நடக்கும்’ என்று வெங்கி கூறும்போது எதிர்கால நம்பிக்கையின் குறியீடாகவும் உள்ளது.

ஆனால் விடியும் பொழுதில், மண்டபத்திற்கு மணமகன் வீராசாமி வரும்போது, கல்தூணுக்குப் பின்னால் காத்திருந்த சென்னியன், வீராசாமியை வெட்டுகிறான். அவனது ரத்தத்தைப் பெருவிரலால் துடைத்து தன் மீசையில் தடவிக் கொள்கிறான். மீசை கதையின் முக்கியப் பாத்திரமாகக் கடைசிவரை காட்டப்பட்டுள்ளது.

கொலையையும் ஆசிரியர் கலை நயத்தோடு காட்டுகிறார். திருமணம் நின்று போய், அய்யாசாமி காவல் நிலையத்துக்குள் நுழையும்போது, பொன்னி காவல் அதிகாரியை வணங்கி வெளியே வருவதாக ஆசிரியர் சொல்வது, பள்ளிபுரத்தில் கொலையும், காவல் நிலையம் போவதும் ஒரு தொடர் கதை என்பதைக் குறிக்கவே.

கதை முடிகிறது; ஆனால் வாழ்க்கை முடியவில்லை, முடியாது. மாக்பத்தில் (Macbeth) டங்கனின் கொலைக்குப்பின் போர்டர் (Porter) கதவைத் தட்டுவதை, சாவின் கதவை வாழ்க்கை தட்டுவதாகக் கூறுவார்கள். தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதைத் தண்டக்காரர் அறிவிப்பது அது போன்றது. சில நாட்களாகவே, வெங்கி சிவன் பின்னலாடைக் கூடத்தில் வழக்கம்போல வேலைக்குப் போகத் தொடங்குவது, வாழ்க்கையின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.

வெங்கியின் திருமணம் நின்றது, கவிதா நீதிக்கு (Poetic justice) முரணானதோ எனச் சிலர் கருதலாம். ஆனால், ஒரு நல்ல படைப்பாளியின் நோக்கம் தன் பாத்திரங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதன்று. அப்படிச் செய்திருந்தால் வெங்கியின் அடிப்படைப் பண்புக்கு முரணானதாக இருக்கும்.

அவள் ஒரு சராசரி வாழ்வு நடத்தும் சராசரிப் பெண்ணாகவே இருந்திருப்பாள். கதையும் ஒரு சராசரி கதையாகவே முடிந்திருக்கும். ஷேக்ஸ்பியரின் `லியர் (lear) அரசன்’ என்ற நாடகத்தில் அரசனும் கார்டெலியாவும் (Cordelia) இறுதியில் இறந்திருக்கக் கூடாது என்று கருதுபவர்களும் உள்ளனர். ஆனால் லியர் நாடகம் வாழ்வின் பிரும்மாண்ட சோகத்தையும், அன்புக்குச் சாவைத் தடுக்க முடியாவிட்டாலும், `சாவு பொய், அன்புதான் நிரந்தர உண்மை’ என்பதையும் தான் காட்டுகிறது.

ஜார்ஜ் லூகாக்ஸ் (George Lukacs) என்ற மார்க்ஸீயத் திறனாய்வாளர், புதினங்களில் வாழ்வின் இயல்பான (Organic) தன்மைக்கும் கருத்துக்கும் (idea) இடையே உள்ள தன்மையில் காலம் கட்டமைக்கப்படுவதாகவும், நாவலின் அர்த்தமும் சாரமும் (essence) காலத்தன்மை­யிலிருந்து (temporal) பிரிக்கப்படுகிறது என்றும் நாவலின் உள் இயக்கம் காலத்திற்கெதிரான போராட்டம் என்றும் கூறுகிறார்.

பீட்டர் ஃப்ரூக்ஸ் (Peter Brooks) என்ற உளநூல் சார்ந்த திறனாய்வாளர், இந்தப் போராட்டத்தை புதினத்தில் நினைவலைகளால் பின்னோக்கியும், நிகழ்வுகளால் முன்னோக்கியும் மாற்றி மாற்றி கதை செல்வதாகக் காட்டப் படுவதாகக் கூறுகிறார். இப்படிப்பட்ட கால அமைப்பை ‘திருமூர்த்தி மண்’ ணிலும் காணலாம்.

காலங்களை கதாசிரியர் இணைப்பதில் montage தெரிகிறது. ஆனால் காலங்களின் இயக்கம் இடத்தில் இணைப்பதைக் காணலாம். சோமுத்தேவரும் கடந்த காலத் திருமணங்களைப் பற்றிப் பேசும்போது, மும்மூர்த்திகள், திருமூர்த்தி மலையில் கண்ணுச்சாமிக்குப் பக்கத்திலே குடியிருப்பதால், திருமணங்களை அங்கு சுலபமாக நடத்திவிடலாம் என்று கூற, `சோமுத் தேவரின் சதாபிஷேகத்தை அங்கு நடத்தலாம்’ எனக் கண்ணுச்சாமி கூறுகிறார்.

காலங்களின் சங்கிலியாகவும், அங்கமாகவும், திருமூர்த்தி ஆலயம் காட்டப்படுகிறது. அப்போது, திருமூர்த்திமலைக் கதையை கண்ணுச்சாமி கூறுகிறார். கலியுக மக்களின் அக்கிரமம் அதிகரித்ததற்குப் படைப்பின் கடவுளான பிரம்மா கவலைப்பட, சிவன் அதைப் பார்த்துச் சினம் கொண்டு உலகத்தை அங்குள்ள குண்டாகச் சுருக்கி உதைத்ததாகவும், விஷ்ணு உருண்டு வந்த அதே குண்டை தடுத்துக் காத்து அந்த இடத்திலே நிறுத்திவிட்டதாகவும் கண்ணுச்சாமி கூறுகிறார்.

கதை முடிவுக்குமுன் வரும் இக்கதையை ஒரு மக்கள் தொன்மத்துடன் இணைத்து, அதற்குத் தரும் பொதுவான விளக்கமாகக் கருதலாம். படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய மூன்றும் பிரபஞ்சத்தின் நிரந்தர நிகழ்வுகள், இந்தக் கதை நிகழ்வுகளும் அதன் ஒரு பகுதியில் திருமூர்த்தி மண்ணிலே திருமணம், பகை & சாவு, அதற்குப் பின்னும் தொடரும் வாழ்க்கையில் இக்கூறுகளைப் பார்க்கலாம். இது கதைக்கு ஒரு பொதுமை ((universal) பண்பைத் தருகிறது.

திரிமூர்த்தியின் திரிதல் தான் திருமூர்த்தி. அடுத்து வரும் மும்மூர்த்திகளும் கற்பின் செல்வியான முனிவரின் மனைவியால் குழந்தைகளாக மாற்றப்படும் கதையும், இந்தப் புதினத்துக்குப் பொருத்தமானதே. ஏனென்றால் இந்தக் கதையில் மேலெழுந்த வாயிலாக ஆணாதிக்கம் இருப்பதாகத் தோன்றினாலும் பெண்மையே வாழ்வின் அடிநாதமாகக் காட்டப்படுகிறது. வெங்கி, ராஜி, பொன்னியை, லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

மண்ணின் மணம் கமழும் இப்புதினத்தில் மொழி, நடைபற்றி, திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக எழுதியுள்ளார். பக்தீன் (Bakhtin) என்ற பிரபல ரஷ்யத் திறனாய்வாளரின் புதின மொழி பற்றிய கருத்துக்களையட்டி இப்புதினம் பற்றிச் சிலவற்றைக் கூறுவது பொருத்தமாகும்.

அவர், `சமுதாயத்தின் பேச்சுவகைகளின் பன்மைப் பண்பைப் புதினத்தில்தான் காணமுடியும்’ என்றும், `காப்பியம் போன்ற பழைய இலக்கிய வகைகளில் மொழியின் மையம் நோக்கிய தன்மையிருப்பதாகவும், புதினத்தில் தான் சமூகத்தில் பலதளங்களில் வழங்கும் மொழி வகைகளின் வேறுபட்ட தன்மைகள் (heteroglossia) பதிவு செய்வதாக’வும் கூறுகின்றார்.

திருமூர்த்தி மண்ணில், மண்ணோடு ஒன்றிணைந்த பலவகை மக்களின் மொழிவகைகளை நாம் காணலாம். இங்கே சாதிகள் குறிப்பிடப் பட்டாலும் சாதிகளின் மோதல்கள் காட்டப்படாததைக் குறிப்பிட வேண்டும். ஆலையில் அரசியல் குறுக்கிடுகிறது.

ஆனால் அடிப்படையில், நிலம், நீர் சம்பந்த பிரச்சினைகளும், தனிப்பட்ட பொறாமை, பகைமைகளும் தான் கதையின் அடித்தளமாக உள்ளது. இந்தச் சின்ன உலகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சந்தங்களைப் பாத்திரங்களின் இயல்பான உரையாடல்களில் கேட்கலாம்.

இந்தப் புதினத்தின் ஒரு சிறந்த அம்சம், கதையைப் பாத்திரங்களின் வழியாக, அவர்களது உரையாடல்கள் வழியாகவே காட்டுவதே. ஆசிரியரின் குறுக்கீடும், இணைப்பும் மிகக் குறைவே. உரையாடல்களில் பாத்திரங்களின் மோதல், மொழிவகைகளின் மோதலாக உள்ளது. பக்தீனின் இலக்கணத்துக்கு இது எடுத்துக்காட்டு. இதனால் கதையின் நாடகப் பண்பும், கதை சொல்வதில் புறவயப் (objective) பண்பும் மிகுதியாகிறது.

மொத்தத்தில் ‘திருமூர்த்தி மண்’ ஒரு கிராமத்தின் கதையாக, அதன் மக்களின், ஏன் அனைத்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அழகான கலையோவியமாக, ஓர் உரைநடைக் காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி மண், வெறும் சமூக ஆவணம் இல்லை; ஒரு இலக்கிய ஓவியம் (Not a social document, but a literary monument).

- கா.செல்லப்பன்