வாசல் தாண்டும் கோலத்தில்
செய்தி இருக்கிறது
வந்து விடு வெண்ணிலா தோட்டத்துக்கு

*
நல்ல தலைப்புக்கு தான்
காத்திருக்கிறேன் கவிதையே
உன் சேலை தலைப்பையே தந்து விடேன்

*
கதவுக்குப் பின்னா ஒளிந்திருக்கிறாய்
கள்ளி
நீ காதலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறாய்

*
உனக்குத் தான்
உன் துணி காய்கிறது
எனக்கு அந்தக் கொடி வாழ்கிறது

*
திருஷ்டிப் பொட்டென
கண்ணோரத்து மச்சம்
திக்கு முக்காடு என கீழுதடு மச்சம்

*
ஒற்றை மூக்குத்தி
உன் நாசிக்கு
மற்ற மூக்குத்தி உன் ஆசிக்கு

*
பூந்தோட்டத்தில் நிற்கிறாய்
பொறு நிலவும் வந்து விடட்டும்
பிறகு நீ தேவதை ஆவது உறுதி

*
கூட்டத்தில் பேச வராது என்கிறாய்
பரவாயில்லை வா
கூட்டம் பேசட்டும்

*
யுகம் கடந்த பிறகு
எவனாவது அகழ்ந்தெடுப்பான்
பாறை பூத்த நம் பெயரை

*
மொட்டை மாடியில் தலை உலர்த்துகிறாய்
மெட்டு போட்டுப் போகிறது
மேற்கே ஒரு பறவை

*
- கவிஜி

Pin It