வாலிப வசந்தம் வருடிப்போடும்
ஒற்றை நாளில்,
இனம்புரியா இன்பச் சிறகுகள்
வண்ண வண்ணமாய்
முளைக்கும் வேளையில்,
அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்
அடிவயிற்றில் அக்னிப் பொறி,
அணை கட்டமுடியாமல்.

தழை(லை) தொங்கி நின்றிருந்த
தெருவோர மரங்கள்
பூத்த பூக்கள்
உதிர்ந்த கணத்தில் - புனிதமானது
சாக்கடையும் பூக்களும்.

கொசுக்களும் ஈக்களும்
மொய்த்துத் தொலைக்கிறது
விவஸ்தையில்லாமல்
போகிற பொது இடங்களிலெல்லாம்
வெறித்த கண்களாய்.

மனிதனாய்ப் பிறந்ததாலேயே – “காதல்”
என்ற சொல் மாற்றி - இனி
மேலும் பிறப்பில்லை என்றே
‘காதல் செய்’
கைகள் பிரியாமலும் கழண்டு விழாமலும்.

விருப்பும் வெறுப்பும் விவாதிக்கும்
’காதலர் தினம்’
பிப்ரவரி-14 அல்ல
என்ற போதும்
வற்றிப்போகும் வாழ்நாளில்
வந்து போகட்டும்
கடைசி நொடியிலேனும்
காதல்.

- வே.சங்கர்

Pin It