கனத்த எதிர்பார்ப்போடு
புலர்ந்தது அதிகாலை
எப்போதை விடவும்
அழகாயிருந்தது செவ்வானம்
வாடைக்காற்றின் குளிர்மையில்
மெல்ல நடந்தன வெண்நாரைகள்;
காட்டுப் பூக்கள் தலைகோத
சிணுங்கி பறந்தன
வண்ணத்துப்பூச்சிகள்
தனியே இரசித்தபடி
தனக்குத் தானே
பேசிக் கொண்டிருக்கிறேன்
என்ன ஆயிற்று எனக்கு
உறைபனியில் இலைகளற்று
நிற்கும் மரங்களென
நெகிழவிடும் நேசத்தில்
ஆகச் சிறந்த மிளிர்வோடு
அமர்ந்திருக்கிறேன்
தனிமைத் தனலேந்தி
கைப்பிடியளவு இதயத்திற்குள்
நுழைந்த நீ
கரையான் புற்றென
தழும்பித் ததும்புகிறாய்
ஒரு ஊமையின் கனவுபோல
மௌனப் பேழைக்குள்
இடைவெளியின்றி
இட்டு நிரப்புகிறேன் உன்னை
உதறவும் முடியாமல்
விட்டு விலகவும் முடியாமல்
கள்ள மௌனத்தில்
விரிகிறதென் ஆலாபனை
இடைவெளியின்றி கனவை மீட்டுகிறது
காதல் நோவு
- வழக்கறிஞர் நீதிமலர்