‘ஓ’வென்ற இரைச்சல்
கோடைச்சாரலின் சடசடப்பை மீறி.
குழந்தைகளோடு பெரியவர் சிலரும்
ஆட்டிக் கொண்டிருந்தார்கள்
கால்களையும் கைகளையும்.
மழையை வரவேற்கிறார்களாம்
மகிழ்ச்சி நடனமாம்
கோமாளிகள்!

இழுத்துச் சன்னலை மூடிட
வெளியே நீட்டிய கைகளில்
விழுந்தன பொட்டுப் பொட்டாக
தூறலின் துளிகள்.
மாறுகிறது தூரத்து இடியோசை
மத்தளத்தின் ஒலியாக.
வெட்டிய மின்னலின் கீற்று
வாசிக்கிறது வயலினை வானத்தில்.
வலுக்க ஆரம்பித்த
வருணனின் பொழியல்
பாய்கிறது மனதுள் இசையாக.

ஆட்டத் தொடங்கியிருந்தாள்
அவளையும் அறியாமல்
கால்களையும் கைகளையும்.

- ராமலக்ஷ்மி

Pin It