உள்ளங்கை நெல்லிக்கனி
பற்றியெல்லாம் தெரியாது
உன் உள்ளங்கை என் இதயக்கனி
என்பது மட்டும்
ஆணித்தரமாக அறிவேன்
*
கூப்பி வேண்டுவதை விட
உள்ளங்கை திறந்தே வேண்டு
பட்டாம்பூச்சியாய் வந்தமர
ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும்
கடவுளுக்கு
*
ஆதரவாய் பற்றிக் கொள்ளும்
உன் உள்ளங்கைக்கு
பழகிய
தோள்களில் தான்
நான் சிறகு முளைக்கிறேன்
*
சோறு பிசைந்து நீட்டுகையில்
உள்ளங்கை நிம்மதி
முகம் ஏந்தி காணும்
அருகாமையில்
உள்ளங்கை சன்னதி
*
இதழ் முத்தம்
இலகுவானது பிறகு
உள்ளங்கையில் உருண்டு
புரண்ட முதல் முத்தம்
இன்றும் கனம்
*
தட்டித் தருவதில் சிநேகம்
அன்பைக்
கொட்டி தருவதில் தியாகம்
கவனி
உள்ளங்கையில் இன்னொரு இதயம்
*
மூடி இருக்கும் உள்ளங்கையில்
மூச்சு விட தவிக்கும் உடல்
கொஞ்சம் திறந்து தான் வையேன்
தேகம் மலரட்டும்
தேம்பாவாய் தினம் ஒளிரட்டும்
*
நீரள்ளி முகத்தில் கொட்டுகையில்
பார்க்க வேண்டுமே
உள்ளங்கை அழகு
நிலத்தில் சொட்டுவதை
*
உள்ளங்கைகளை
முகத்தருகே வைத்து
உலகம் மூடி கொள்கிறாய்
எட்டி பார்க்க கிட்ட வருகிறேன்
சிரிப்படக்காதே
தட்டியும் பார்க்கும் என் மூச்சு
*
புள்ளிகளை ஆசீர்வதிக்க
கற்றிருக்கிறது உள்ளங்கை
ஜீ பூம்பாவென வாசலில் கோலம்
கண்கள் விரிகிறேன்
சீ போவென ஆசையில் நாணம்
- கவிஜி