நீ சென்ற பிறகும் இருக்கிறாய்
சாதாரண வரியென்றே படி
சற்று நேரத்தில் கவிதையாகும்...

lovers kiss 370எதுவும் செய்யத் தோன்றாத
ஏதாவதொன்றில் உன் கிசுகிசுத்தல்கள்
பூக்கின்றன...

கழுத்தோரம் சூடு தரும்
உளறல் நமது...
முதுகோரம் முத்தம் பிராண்டும்
முயல்கள் உனது....

அதே வழி அதே தூரம்
ஆகாயம் மட்டும் புத்தம் புதிது....

ஆலயமணியெங்கும் உன் மௌனம்
நெடுக்கே நானும் குறுக்கே நீயும்
இன்றைய சிலுவை...

யாருக்குத் தெரியும்
கர்த்தருக்கும் வேர்த்திருக்கும்
ஆதாம் ஏவாள் மீண்டுமா என்று...!

சில்லென்று விரல் கோர்க்க
சிலிர்த்த நல் வயிரம்
நட்சத்திர குழி சாலையில்...

கற்கண்டு பொடிபட சிரித்தாய்
மேற்கொண்டு முத்தம் தேடி
விழித்தேன்...

இரவை உன்னோடு அனுப்பி விட்டு
இறகாய் என்னோடு திரும்புகிறது
உன் முத்தம்...

இப்படித்தான் இப்படியே
முடிந்து விடுகிறது முத்தமிட்ட
சற்றுநேரத்தில் நீ
பத்தி விட்ட இக்கவிதை....

- கவிஜி

Pin It