எனக்கு நீ
என்னவாக இருக்கிறாய்
என்பது எப்போதும்
புரியாத புதிராய்த் தானிருக்கிறது.

ஒரு மூன்றாம் பிறையாக
ஒரு முற்றத்து கிணற்று நிலவாக
சிறுமி மடிநிறைந்த சிப்பியாக
நடுநிசியில் பதறியழும்
குழந்தையின் குரலாக
பூவாது நெடுமரமாய் நிற்கும்
கோயில் கொடிமரமாக
யாருமற்ற சாலையில்
மணம் வீசும்
பவள மல்லியாக
இப்படி ஏதாவது ஒன்றாக இரு
எப்போதும் என்னோடிரு.

எல்லை மீறாது
நின்ற இடத்திலே
ஆற்றுவாருக்கும்
தேற்றுவாருக்குமாய்
காத்திருத்தலென்பது
அயர்ச்சியாயிருக்கிறது.

துயர் தருணங்களில்
தோள் தரவும்
மகிழ்வின் போது
மடி சாய்த்திடவும்
நீ இல்லாதிருப்பதுவும்
வாழ்வில் வேகமாக
நகர்த்திட விரும்பும்
நரக நாட்களல்லவா?

உடனிருக்கையில்
உனை மறந்து
இல்லாதிருக்கையில்
தேடித் தீராதிருப்பதே
இப்போதைய காலத்து
இயல்பாகிப் போனது

தனிமை
காலத்து தவிப்பிற்கு
வெறுமையைக் கையளித்து
செல்கிறாய்.

உன் நினைவுண்டு
வாழ்பவளுக்கு
வெறுமை என்பதும்
நினைவுகளின் தேக்கமே.

- இசைமலர்

Pin It