காவல்காரர்கள் திருடர்கள் ஆக வேண்டுமென்றால்
திருடர்கள்
காவல்காரர்களாக ஆக வேண்டும்
என்பதுதான் முதல் விதி

காவல்காரர்களின் மரணத்திலிருந்துதான்
தொடங்குகிறது
திருடர்களின் சுவாரசியமான காலம்.

இறந்தவர்களின் உடைகளை அணிகிறபோதே
காவல்காரரகளின் சாயல்கள்
திருடர்களைத்
தொற்றிக் கொள்கின்றன.

இறந்துபோன காவல்காரர்களின் சவக் குழிகளைத்
தோண்ட ஆரம்பிக்கிறார்கள் திருடர்கள்
இது இரண்டாம் விதி.

காவல்காரர்களின் எலும்புக் கூடுகளை
வரிசையாகக்
காட்சிக்கு வைக்க வேண்டும்.

எலும்புக் கூடுகளின் புராதனத் தன்மையில்
சந்தேகம் எழுப்ப வேண்டும்.

காவல்காரர்கள் தான் திருடர்கள் என்று
ஸ்தாபிக்கும்போது
ஐந்தாம் விதி நிரூபணமாகிறது.

இப்போது
திருடர்கள் காவல்காரர்களாகிறார்கள்.

இந்த அளவிலேயே
திருடர்கள்
மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகிறார்கள்.

அடுத்து அவர்கள்
செய்ய வேண்டியதெல்லாம்
துப்பாக்கிகளைக் கன்னக் கோல்களாக்கித்
தோளில்
மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

இனி-
திருடர்கள் நடத்தும்
ஒவ்வொரு துப்பாக்கிச் சூடும்
காவலின் நிமித்தம்தான் என்று
மக்கள் நம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்போது
திருடர்கள்தான்
சிறந்த காவல்காரர்கள் என்று
தேசம் தெரிந்து கொள்கிறது.
ஆனால்
திருடர்கள்
எதற்குமே
கவலைப்படுவதாகத் தெரியவேயில்லை!

 ***

விலங்கின் முகத்தில் கவலை ரேகைகள் 

அது ஒரு விநோத விலங்கு
உடல் முழுதும் அடர்ந்திருந்த
கறுப்புப் புற்கள்
குரங்கு மனிதனை
நினைவுபடுத்துவதாக இருந்தன.
அதன் இருள் கக்கும் வாய்
கற்காலத்துக் குகையை
ஞாபகப்படுத்துவதாக இருந்தது.
அதன் பற்களில்
சக விலங்குகளின் குருதி நெடி அடித்தது 

அது ஒரு விநோத விலங்கு
அதன் குளம்புகள்
காட்டில் திரிந்த பழைய விலங்கொன்றின்
காட்சியாய்க் கண்முன் விரிந்தது.
அதன் ஒற்றைக் கொம்பில்
ஒட்டிக் கிடந்தன
நிணம் ஒழுகிய சதைத் துணுக்குகள்.

அது ஒரு விநோத விலங்கு
அதன் மினுமினுக்கும் றெக்கைகளைப் பார்க்கையில்
பிணந்தின்னிக் கழுகுகள்
காவி நிற வானத்தில் வலம் வந்தன
அதன் செக்கச் சிவந்த அலகு
வளைந்த ஆங்கிலேய பீரங்கியாக
வார்த்தைகளைக் கக்கிக் கொண்டேயிருந்தது.

அது ஒரு விநோத விலங்கு
அடிக்கடி
விலையுயர்ந்த கோட்டுகளை மாற்றிக் கொள்ளும்
நடிகனைப்போல
தனது தோலினை
நிறம் மாற்றி உரித்துக் கொண்டேயிருந்தது.
அது
தன்னை விடவும் கொடுமையான
விலங்கு நண்பர்களின் காடுகளில்
விடுதலையின் வேடங்களில்
திரிந்து கொண்டிருந்தது.

அது ஒரு விநோத விலங்கு
காட்டின் விதிமுறைகளைப் பற்றிக்
கவலைப்படாமல்
மதம் பிடித்த யானையைப் போல
பல மரங்களைப் பிடுங்கி எறிந்தது.
அது காவி நிற நெருப்பை
ஒரு டிராகனைப் போல கக்கிக் கொண்டேயிருந்தது.

அது ஒரு விநோத விலங்கு
அதன் எந்திரங்களாலான எலும்புகளில்
கரன்சி மஜ்ஜைகள்
இதயமற்ற ஜீவராசிகளின் ஜீன்களில் உருவான
ஒரு ரோபோவைப்போல
வியப்புக்குரிய விரைவான அசைவுகள்.
அது ஒரு தேசத்தின் வரைபடத்தை
சாரம் கட்டிய கழிகளைப் பிரித்துப் போடுவதைப் போல
எல்லாவற்றையும் பிரித்து
எறிந்து கொண்டேயிருக்கிறது.

அது ஒரு விநோத விலங்குதான்
ஆனால்
அதனை
இரண்டு சர்க்கஸ்காரர்கள்
தங்களின் டிஜிட்டல் மின்சாரச் சாட்டைகளால்
இயக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம்
பம்மிப் பணிந்தது.
அவர்களின் பாத ரட்சைகளில்
கரப்பான் பூச்சியைப் போல
ஒளிந்து ஒளிந்து
உயிர் பிழைத்துக் கிடந்தது.

மிகப் பெரிய வாலைத்
தூக்க முடியாமல்
அசைந்து அசைந்து
கடைசியில்
இயற்கை விதிகளை எதிர்கொள்ள முடியாமல்
அழிந்து போன டைனோசரைப்போல
தன் இறுதி முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

– நா.வே.அருள்

Pin It