என்ன பண்ற என
கேட்கும் உனது குரல்
அத்துனை
வசீகரமானது...

நிமிடத்தில்
தோன்றி மறையும்
மின்னல் கணத்தின்
மகிழ்ச்சி நிரம்பியவையவை..

காய்ந்த
வயிற்றோடு
அலைந்தவளுக்கு
கையகப்பட்ட
முதல் குழந்தையின்
மென் ஸ்பரிசத்தைப் போன்றது...

விலகும் கணத்திலே
நிறைந்து ததும்புகிற
நினைவு நீ!

விடியலில்
விலகிப் போகிற
கனவும் நீ!

எப்போதாவது
எனக்கென பெய்கிற
மழையானவன் நீ!

எப்போது
சந்தித்துக் கொண்டோம்
என்பதை நினைவாழத்தில்
தேடுகிறேன்...
அதுவோ
பசித்தவன் கையகப்படா
நெல்மணி போல்
சிதறியேக் கிடக்கிறது...

எப்போது
பார்த்தோம்?
என்ன
பேசினோம்?
யார் நம்மை
அறிமுகஞ்செய்தார்கள்?
கண்
பார்த்துக் கொண்டோமா?
பிரிவுறு நேரத்தில்
பேசிப் பிரிந்தோமா?
எதுவும்
நினைவுறாது
தூர்ந்த கிணற்றைப்
போலிருக்கிறது...

ஆட்களின்
மத்தியிலும்
நிராதரவாய்
நின்று போகும் என்னை
உன் நினைவைப் போல்
தேற்றுபவர் வேறில்லை..

காரணமற்று
கலங்கிப் போகுமென்
இம்மனதை
தோள் தந்து
தேற்றும் கரங்கள்
வாய்த்த நீயெனக்கு
வரமா?சாபமா?

ஊருறங்கும்
யாமத்தில்
கசிகிற ஆழ்ந்த
மௌனம் கிளர்த்துகிறது
உன் அணைப்பின்
கதகதப்பை...

விடைபெறும் போது
உடன் வரும் நினைவை
உன் பெயரிட்டே
அழைக்கிறேன்...

அன்பின் பொருட்டு
கைகளை இறுகப்
பற்றிக் கொள்வதே
இப்பெருவாழ்வை நகர்த்திட
போதுமெனயிருக்கிறது..

- இசைமலர்

Pin It