தாவிச் செல்லும் பார்வையைத் தூண்டிலாய் இழுப்பது, என்ன சொல்ல வருகிறது இப் புத்தகம் என இழுப்பது புத்தகத்தின் தலைப்பே...
அப்படி சமீபத்தில் இழுத்த ஒரு தூண்டில் "வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்". தலைப்பே பல யோசனைகளைத் தூண்டி விடுகிறது... வல்லவர்களுக்கு மட்டுமானதா இவ்வுலகு... மீதமுள்ளவர்களுக்கு? வாயுள்ள பிள்ளை பிழைக்கும், அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்றெல்லாம் அடுத்தடுத்த யோசனைப் பின்னல்கள்...
நமது யோசனைகளை பின் தள்ளி முற்றிலும் புதிய கற்பனைகளை, அனுபவங்களைத் தருகிறது இப்புத்தகம்.
"அடையாளங்களுக்கு ஆசைப்படாத மலர்களின் வாழ்வுதான் எவ்வளவு அற்புதமானது?" என வினவும் கவிதாயினி மிக இயல்பாக, ஒரு பக்கத்து வீட்டுத் தோழி நம்முடன் உரையாடுவது போல மிகவும் சாதாரணமான சொல்லாடல்கள் மூலம் நமது மனம் திறக்க வைக்கிறார்.
"எதிர்பார்ப்பு" கவிதை சொல்லிச் செல்கிறது பரிணாம வளர்ச்சியை, தீரா ஆசைகளை ஒரு முரண்நகையாக....
பெருங்காற்று வீசும் வரை, ஊசலாடுவது இலைகள் மட்டுமா? உறவுகள் கூடத்தானே, இலைகள் மரத்தில் இருப்பதே அழகு, மண்ணில் வீழ்ந்து மக்குதலில் அல்ல, காற்றே வீசாமல் இரு... என மனசை மன்றாட வைப்பதில் இருக்கிறது இவரின் வெற்றி.
பெருநகரத்தின் அவசர வாழ்க்கையை ரப்பர் சக்கரங்களில் நிறுத்திச் செல்கிறார்.
ஞெகிழியில் தொலைந்த காட்டின் வெம்மையில் பொசுங்குவது புறாவின் நெஞ்சம் மட்டுமல்ல நமது மனிதத் தன்மை பற்றிய கேள்வியும்...
நடைபாதை சிறுவன், குழந்தை மற்றும் பார்ட்டி சிறுமி என எல்லோருக்கும் பெய்யும் மழையில் நமக்கான மழை எது எனத் தேட, யோசிக்க வைக்கிறார்.
"இப்போதெல்லாம் கூடடைவதில் எந்த குதூகலமும் இருப்பதில்லை" என்ற ஒற்றை வரி.... தைத்துச் செல்கிறது இயந்திரத்தனமாகி விட்ட இன்றைய வாழ்க்கையை...
இதன் நீட்சிதானோ "சிதறும் கூட்டில்" சிறகுகளை விரிக்கும் பறவைகளுமோ என்றும் தோன்றுகிறது.
"கதவுகளும் சாவிகளும்" நிறை உலகு, திறந்து கொண்டே இருக்கின்றன புதிய கதவுகளை, எங்கோ சில கதவுகளை சாத்தியும் தான்...
கதவில் ஏறி விளையாடும் பால்ய நினைவுகள் இன்னும் இவருக்குள் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றன போலும்...
"நாலுபேர்" கவிதை சொல்கிறது நாலா புறமும் சுழன்று பேசும் நாவை... எதுவும் தெரியாமலே கூட...
மறந்து வந்த தொலைபேசியால் இவ்வளவு இன்பமா? அப்படி எனில் எவ்வளவு தொல்லை? எவ்வளவு சிறை? இந்தத் தொல்லைபேசியால்... நானும் இனி மறந்தது போலவே வைத்துச் செல்வேன்... சிறிது நேரமேனும்...
"வேண்டியதெல்லாம் வேறொருவர் உடமையாகின்றன" வரிகள் நினைவூட்டுகின்றன "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" என்ற காவிய வரிகளை...
மௌனங்கள் இரு கவிதைகளும் அடுத்தடுத்து வருவதைத் தவிர்த்து இருக்கலாம் என்பது எனது கருத்து.
"விலை" தெரிந்து கொள்வதற்கு எதை விலையாக்கினோம் வாழ்க்கையையா?
"தூண்டில்" சொல்கிறது வேண்டாவெறுப்பாய் வளர்த்துக் கொண்ட வெறுப்பு போல ஒன்றை...
நிறமற்ற குடைகளால் நிறையட்டும் நீங்களும், உங்களின் அவரும், மட்டும் நீரும் என மனதிற்குள் மழை பொழிய வைக்கிறார்..
"மறக்கவே நினைத்தும்" மறக்க முடியாத, சொல்ல முடியாத காதலை உணர்த்துகிறது "நாம் ரசித்த பாடல்களில் ஒன்று ஒலிக்கும் நொடியில்"..
"உன்மேல் கொண்ட பிரியத்தாலே
பிரிதலும் புரிய பிரியப்படுகிறேன்" எவ்வளவு பிரியம் இருந்தால் இவ்வாறு புரிந்து எழுத முடியும்?
"உறவுகள்" கன்னத்தில் அறைந்து சொல்கிறது உறவு என நினைத்த கொடூர முகத்தை...
"இரு தலையணிகளின் ஈரம்" சொல்லுவதோ... சொல்லொண்ணா ஒரு வலியை...
இவ்வாறு எழுதிக் கொண்டே போகலாம்... இன்னும்.. இன்னும்... என்றாலும், இன்னும் பல அழகியல் கவிதைகளை இவர் படைத்திருக்கலாமோ அல்லது வேண்டுமென்றே வேண்டாம் என முடிவு எடுத்து விட்டாரோ? என்பது இவர் சொல்வது போல "உபரிக்கவிதை" அல்ல உபரிக் கேள்வி..
அடுத்த தொகுப்பில் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...
உடைந்த பேனா முனையும், குறைவான பக்கங்களுமே... இவ்வளவு எழுதினால்? நிறைய பக்கங்கள் உள்ள ஏடு ஒன்றும் பேனாக்கள் நிரப்பப்பட்ட பெட்டி ஒன்றும் பரிசளிக்க விரும்புகிறேன்..
உருப்பெறட்டும் பெருங்காவியம்...
தொடரட்டும் உங்களது கவிதை யாகம்...
வாழ்த்துக்கள்
- பாலமுருகன் வரதராஜன், தஞ்சாவூர்
புத்தகம் கிடைக்கும் இடம்:
New Century Book House (P) Ltd - Chennai
Head Office
41-B, SIDCO Industrial Estate,
Ambattur, Chennai – 600 098.
Ph: 044-26258410, 26251968
e-mail :