பார்வையை மெல்ல மெல்லக்
குருடாக்கும் இருட்டு

காலாற வந்தவர்கள்
காலோயத் திரும்பியிருந்தனர்

குதிரையேற்றம் குத்தாட்டம்
சுட்ட சோளம் வறுத்த மீன்
என ஓய்ந்திருந்தது குரல்கள்

வயதான கிழவனும் வயிற்றில்
பொத்தல் விழுந்த படகும்
ஏக்கமாய்ப் பார்த்திருந்தது
பரந்த நீர்நிலையை

கரை மீதிருந்த காதலை
நொடிக்கொருமுறை
சொல்லிச் செல்கிறதலை – சத்தமாய்

சில்லரையை எண்ணிக் கொண்டே
மீதமிருந்த கட்டு சுண்டலுக்கு
ஆள் பார்த்திருந்தான்
சிறுவன் - கடற்கரையில்..,

- முத்துசாமி பழனியப்பன்

Pin It