கை கழுவுங்கள்
என்று சொன்ன அரசாங்கம்
மக்களை
கை கழுவி விட்டது.

மருத்துவ உலகம்
போராடிக் கொண்டே
மக்களை கைவிட்டு விட்டது.

எதிர்பாராமல் இறந்துவிட்ட இளம்மருத்துவரை
மயானமும் கைவிட்டு விட்டது.

கொஞ்சம் கொஞ்சமாய்
பூமி நழுவிக் கொண்டிருக்கிறது

உதவும் கைகள் ஒன்றும் இல்லாமல் போனதால்
பூமி தலைசுற்றி வீழ்கிறது.

புள்ளி விவரங்களை அள்ளித் தரும்
அரசு எந்திரத்தில்
அன்றாடம்
அடிபட்டு சாகிறார்கள் அடித்தட்டு மக்கள்

மந்திரங்கள்
ஜெபிப்பவர்களிடம் கூட
மரண பயமே மண்டிக் கிடக்கிறது

அறிவியலும் ஆண்டவனும்
ஒருசேர கைவிட்டதால்
ஆலய மணிகள்
தூக்கிட்டுக் கொண்டவன்
நாவைப்போல தொங்குகின்றன

கால நதி
உறைந்து விட்டது
படகுகள் எல்லாம்
பாடைகளாகி விட்டன

எல்லா திசைகளும்
மீட்பரின் வருகைக்காக காத்திருக்கின்றன

காலமே
எங்களைக் கைவிட்டு விடாதே
என்கிற அபயக்குரல்
எங்கும் கேட்கிறது.

ஓர் நுண்ணுயிரின்
அரூப வாசலில்
உயிர்ப்பிச்சை கேட்கின்றன
ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் வல்லரசுகள்.

- அமீர் அப்பாஸ்

Pin It