இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் வாழ்வியலைப் புரட்டிப் போட்டுள்ள முக்கிய நிகழ்வு என்றால், அது கொரோனா நோய்த் தொற்று தான். இந்த கொரோனா நோய்த் தொற்று, சமூகப் பரவல் என்னும் நிலையை அடைவதைத் தடுக்கவும், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் அரசுகளுக்கு மிகவும் சவாலாக இருப்பது, நோய்த் தொற்று பரவியவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிவது தான். இதனை சமாளிக்க, தொழில் நுட்பப் புரட்சியின் உச்சத்தில் இருக்கும் இக்காலகட்டத்தில், அரசுகள் நம்பியது இந்த தொழில் நுட்பங்களைத் தான்.
இதற்கு முன்னர் ஏற்பட்ட சார்ஸ், மெர்ஸ், எபோலா, நிப்பா போன்ற வைரஸ் தொற்றுகள், கொரோனா அளவிற்கு உலகம் முழுவதும் வீரியமாகப் பரவவில்லை. ஆகையால், நோய்த் தொற்றைக் கண்டறிதலும், தொடர்பறிதலும் பெரிய சிக்கலாக இருக்கவில்லை. தற்போது உலக வல்லரசுகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான கண்காணிப்பு முன்னெடுப்புகள் தோன்றியுள்ளன. அவை, என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்தப் பட்டால் பிரச்சனையில்லை. ஆனால், ஏகாதிபத்திய அரசுகளின் கையில் இந்த கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் சிக்கும் போது, அவை மக்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக மாற்றப்படுகின்றன.
நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கு அரசுகள் அதிகளவில் நாடியது திறன்பேசி செயலிகளைத் (Smarphone Apps) தான். அரசு உருவாக்கிய அல்லது பரிந்துரைக்கும் செயலியை ஒருவர் தனது அலைபேசியில் நிறுவி வைத்திருக்கும்போது, அதன் புவிசார் இருப்பிடத்தைக் கொண்டு, அவர் வீட்டிலிருக்கும் போதும், வேலைக்குச் செல்லும் போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும், அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, இருப்பிடத் தகவலைச் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அதனோடு, அந்நபரின் உடல்நிலை குறித்த தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
சில செயலிகள் அந்நபரைச் சுற்றி இதே செயலியை நிறுவியிருக்கும் மற்றவர்களுக்கு அந்நபரது உடல்நிலை குறித்த தகவலைக் காட்டுகிறது. இப்படி அருகிலுள்ள மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதால், நோய்த் தொற்று குறித்த எச்சரிக்கையோடு அணுகுகின்றனர். இதனால் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களோடு உடலளவிலான இடைவெளி கடைப்பிடிக்கப் படுவதொடு, ஒருவேளை, நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது பின்னர் கண்டறியப் பட்டால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப் படுத்துவது எளிமையான செயலாக இருக்கும்.
முக்கிய நாடுகள் அனைத்தும் ஏறக்குறைய இதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயலியைத் தனது குடிமக்களுக்கு வழங்குகிறது. கொரோனாவை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இவை மக்களை மேலும் நவீன வடிவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகளுக்கு வழியைத் திறந்துவிடும் அபாயத்தில் உள்ளது..
இந்த செயலிகள் தனியுரிமைகளை மதித்து செயல்படுவதில்லை என்பது தொழில்நுட்ப ரீதியாக உள்ள குறைபாடு. அதற்குக் காரணம் பெரும்பாலான செயலிகளை அரசின் உதவி கொண்டு உருவாக்குவது தனியார் பெருநிறுவனங்கள் தான். அரசுகள் ஏனைய துறைகளைப் போல சிறந்த கட்டமைப்பை தகவல் தொழில்நுட்பத் துறையில் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு காரணம். மேலும், ஏகாதிபத்திய அரசுகளின் அதிகார வர்க்கம் பெருநிறுவன முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாலும் தனியார் நிறுவனங்கள் நாடப்படுகின்றன.
செயலிகளின் தனியுரிமை மீறலை அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், குடிமக்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கவும், மக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் இதனை ஒரு கருவியாக மாற்றத் துடிக்கின்றன. இதன் மூலம், மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்து மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவதற்கும், கட்டுப்பாடுகள் மூலம் மக்கள் ஒன்றிணைதலைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. புதிய இயல்புநிலை என்று இவையே நிரந்தரமாக்கப்பட்டால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு மன்னர்கள் காலம் போன்று ஏகாதிபத்தியமே கோலோச்சக் கூடும் நிலை ஏற்படலாம்!
கொரோனா வைரஸ் அதிதீவிரத்தை முதன்முதலில் எதிர்கொண்ட சீனா, அலிபாபா நிறுவனத்தின் அலிபே ஹெல்த் கோட் (Alipay Health Code) என்னும் செயலியை முதலில் ஹாங்சௌவ் (Hangzhou) நகரத்தில் அறிமுகப்படுத்தி, அடுத்த ஒரு வாரத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. தற்போது இந்த செயலிக்கு ஏறக்குறைய 100 கோடி பயனாளர்கள் உள்ளனர். இந்த செயலி, பயனாளர் ஒவ்வொருவருக்கும் அவர் அளிக்கும் மருத்துவ தரவுகளைப் பொருத்து, பச்சை, மஞ்சள், சிவப்பு இவற்றில் ஒரு நிறக் குறியீட்டை (Color Code) அளிக்கும். ஹெல்த் கோட் (Health Code) என அறியப்படும் இது, பயனாளரின் உடல் நிலையைக் குறிக்கும். அதாவது, பச்சை நிறமென்றால் நோய்த்தொற்று இல்லாதவர் என்றும், சிவப்பு என்றால் நோய்த் தொற்றுடையவர் என்றும் பொருள்படும். பயனாளரின் உடல்நிலை குறித்த பல்வேறு தரவுகள் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படும் மதிப்பெண்ணைப் பொருத்து இந்த நிறக்குறியீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிபில் எண் (CIBIL Score) எப்படி ஒருவரது பொருளாதார நிலையைக் குறிப்பிடுகிறதோ, அதே போல் சீனாவில் இந்த நிறக் குறியீட்டிற்கான மதிப்பெண் ஒருவரது உடல் நலன் நிலையைக் குறிப்பிடுகிறது.
பொது இடங்களுக்கு அல்லது வேலைக்குச் செல்லும் போதும், வணிக சேவைகளை பெறும்போதும் இந்த செயலி கொண்ட அலைபேசியைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரது நிறக்குறியீட்டையும் சோதித்த பின்னரே அவர் தொடர்ந்து செல்லவோ, சேவைகளைப் பெறவோ அனுமதிக்கப் படுவார். பச்சை நிறக்குறியீடைக் கொண்டிருக்கும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்படுவார். மஞ்சள் அல்லது சிவப்பு நிறக்குறியீட்டைப் பெற்றவர்கள் அனைத்து மட்டங்களிலும் தடுக்கப் படுவார்கள். அதாவது, இது குடிமக்களை இரண்டு வகையாகப் பிரித்து அதற்கேற்றார் போல் அவர்களை நடத்துகிறது.
அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் பரவத் துவங்கிய காலத்தில், 1853-ம் ஆண்டு லூசியானா மாகாணத்தில் நோய்வாய்ப்பட்டு குணமடைந்து நோய் எதிர்ப்பாற்றலை பெற்றவர்கள், நோய்த் தொற்று ஏற்படாதவர்கள் எனப் பிரிக்கப்பட்டார்கள். நோய் எதிர்ப்பாற்றலை பெற்றவர்கள் மட்டும் வேலைக்குச் செல்வதற்கும், திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள். அதே போன்ற ஒரு பாகுபாடு சீனாவில் தற்போது இச்செயலி மூலம் ஏற்பட்டுள்ளது. பச்சை நிறக் குறியீட்டைப் பெறாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது, அரசின் சேவைகள் பெறுவது உட்பட அனைத்தும் மறுக்கப்பட்டு, மூன்றாம்தர குடிமக்களைப் போல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலி ஒருவரைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பிற்கு உட்படுத்துகிறது. உடல்நிலை தரவுகளோடு புகைப்பழக்கம், மது அருந்துதல் உள்ளிட்ட ஒருவரது அன்றாட பழக்க வழக்கங்களும் பதியப்படுகின்றன. இவை செல்லுமிடமெல்லாம் சோதிக்கப்படும் போது, அவரின் உடல்நிலை தரவுகளோடு, அவர் இதுவரை சென்று வந்த இடங்கள், மேற்கொண்ட பரிசோதனைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுகிறது. அவை காவல் துறையினருக்குத் தானாகத் தெரிவிக்கும்படி இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்படுகிறது.
அதேபோல், சமூகத்தில் ஒருவரது நிலையை இந்த செயலி தீர்மானிக்கிறது. ஒருவருக்கான சேவைகள் வழங்குவதை வணிக நிறுவனங்கள் இந்த செயலி வழங்கும் தரவுகளைக் கொண்டே தீர்மானிக்கின்றன. அவரைத் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதைக் கூட இச்செயலியின் அடிப்படையில் அவர் வேலை செய்யும் நிறுவனம் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்க அடிப்படையான அந்த உடல்நிலை மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதும் வெளிப்படையாக இல்லை. சீரான உடல்நிலையோடு நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒருவர், நோய்த் தொற்று பகுதிக்குச் சென்று வந்தாலே சிவப்பு நிறக் குறியீடு வழங்கப்படுகிறது. இவை மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
பாதுகாப்பு விடயத்தில் உறுதியான சீனாவிலேயே இந்நிலை என்றால், இந்தியாவில் ஆரோக்ய சேது என்னும் செயலி பல்வேறு குறைபாடுகளோடு ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது. சீனாவின் அலிபே செயலியைப் போலவே, ஆரோக்ய சேது செயலியின் மீதும் ஆரம்பம் முதலே தனியுரிமை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பயனாளர் அளிக்கும் தரவுகள் அடிப்படையில் உடல்நிலை குறித்த சுயமதிப்பீடு செய்து இச்செயலியில் சேமித்து வைக்கப்படுகிறது.
அலைபேசியின் ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். கொண்டு இயங்கும் இச்செயலி, பயனரின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து, இந்த செயலியைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அருகில் செல்லும் போது அவர்களுக்கு நோய்த்தொற்று குறித்த எச்சரிக்கையை அனுப்புகிறது. இச்செயலி சேமித்து வைத்திருக்கும் தரவுகளையும் அவர்களுடன் பகிர்கிறது. மேலும், சர்வர் கணினிக்கு அனுப்பப்படும் தகவல்கள் போன்றவற்றின் பாதுகாப்பும், அதனடிப்படையில் எழும் தனியுரிமையும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.
எந்த ஒரு சட்டத்தின் படியும் உருவாக்கப்படாத ஆரோக்ய சேது செயலி, பயனாளர்களுக்கு எந்த ஒரு சட்டப் பாதுகாப்பையும் வழங்கவில்லை. மேலும், இது Public Private Partnership (PPP) முறையில் உருவாக்கப்பட்டதாக இந்திய அரசு சொன்னாலும், அரசுடன் இணைந்து இச்செயலியை உருவாக்கிய அந்த தனியார் நிறுவனம் என்ன என்று சொல்லவே இல்லை. தாமாக முன்வந்து உதவியதாக சில தனிபர்களின் பெயரை மட்டுமே அரசு குறிப்பிடுவது, இச்செயலியின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
ஆதார் பாதுகாப்பை அம்பலப்படுத்திய பிரெஞ்சு ஹேக்கர் (கணினி பாதுகாப்பை ஊடுருவுபவர்) எலியட் ஆல்டர்சன், ஆரோக்ய சேது செயலின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அதிலுள்ள தனியுரிமை மீறலை ஆய்வு செய்து அம்பலப்படுத்தினார். செயலியின் உள் ஊடுருவ முடிந்த அவரால், செயலியின் உள் தரவுத்தளத்தை (Internal Database) அணுக முடிந்தது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. இதன் மூலம், ஒருவரது அலைபேசியில் ஊடுருவ முடிந்தால், செயலியில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்க்க இயலும். மேலும் இருப்பிடத் தகவலை, சுற்றளவைத் திருத்துவதன் மூலம், அந்த இருப்பிடத்தை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட சுற்றளவு பரப்பில் இருப்போரின் நோய்த் தொற்று குறித்த தகவலை அறிய முடியும். அதன்படியே, பிரதமர் அலுவலகத்தில் 5 நபர்களுக்கு உடல்நிலை குறைபாடு இருப்பதாகவும் கூறினார்.
இதன்மூலம் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலுள்ள நோய்த்தொற்று உடையோரையும் அறிய முடியும். இது, சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தும் என்பதற்கு எதிரான தனியுரிமை மீறல். மேலும், ஆல்டர்சன்னால் செயலியின் கோப்புகளைத் திறந்து பார்க்கவும் முடிந்தது. இவை அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, குறைபாடுகளைச் சரிசெய்த பின்பு, ஆரோக்ய சேது சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறைபாடுகளைச் சரி செய்ததைக் குறிப்பிடாமல், குறைபாடுகளை அம்பலப்படுத்திய ஆல்டர்சன்னிற்கு விளக்கத்தை மட்டுமே அளித்தது. மேலும், தனியுரிமை கொள்கை அறிக்கையில் சொல்லப்படாத அல்லது பயனாளர்களுக்கு தனியுரிமை மாற்றங்கள் குறித்த தகவல் தராமல், பல விதிமீறல்களைச் செய்ததும் அம்பலமானது.
இத்தகைய சூழலில், மத்திய மாநில அரசு ஊழியர்களும், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த செயலியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், 100% அது பயன்படுத்தப்படுவதை நிறுவனங்களின் தலைமை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏப்ரல் 29 அன்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நொய்டாவில் ஒருபடி மேலே சென்று, ஆரோக்ய சேது செயலி அலைபேசியில் நிறுவப்படவில்லை என்றால், அது 6 மாத சிறை தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
2017-ல் வழங்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒருவரது விருப்பமில்லாமல் அவரது மருத்துவத் தகவல்களைப் பெறுவதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், மருத்துவத் தகவல்களைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்னும் ஒரு செயலியை, அரசே பணியாளர்களிடம் கட்டாயப்படுத்துவது தனியுரிமைக்கு மட்டுமல்ல, உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிரானது.
மேலும், தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் மருத்துவத் தகவல்களை அறியும்பட்சத்தில், உடல்நிலை குறைபாடு உடையோரை வேலையை விட்டு நீக்கவும் கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனால், கொரோனா காரணமாக வருமானத்தை இழந்தவர்கள், நிரந்தரமாக வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த செயலி பயன்பாட்டில் இருக்கும் என்கிறார். தனியுரிமையின் கண்ணிவெடி வயல் (Privacy Minefield) என்று இச்செயலியைக் குறிப்பிடும் இணைய சுதந்திர டிஜிட்டல் உரிமைகள் அமைப்பு (Digital rights organisation Internet Freedom Foundation), இச்செயலி நோக்கத்தின் வரம்பு, வெளிப்படைத் தன்மை, பொறுப்புகூறல் போன்ற அடிப்படை கொள்கைகளைக் கூட பின்பற்றவில்லை என்று கூறுகிறது.
சீனா, இந்தியா மட்டுமல்ல கொரோனாவினால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நாடுகள் இதே போன்ற ஒரு செயலியைப் புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த கொரோனா கால செயலிகள், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், அவை மக்களைத் தொடர் கண்காணிப்பிற்குள் வைக்க அரசிற்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்குள் குடிமக்களைக் கொண்டு வரும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
திரையரங்கம், வணிக வளாகம் போன்ற பொது இடங்களில், பணியிடங்களில், விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்வுகளில், அரசியல் நிகழ்வுகளில், உரிமைக்கான போராட்டங்களில் என ஏறக்குறைய அனைத்து மட்டங்களிலும், இத்தகைய செயலியின் மூலம் மதிப்பிடப்பட்ட உடல்நிலை குறியீட்டைக் கொண்டு அனுமதிப்பது என்பது இனி இயல்பாக மாறக் கூடும்.
இன்று ஈ.பாஸ் வழங்கும் சேவையைச் செய்யும் இந்த செயலி, நாளை அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்குக் கட்டாயமாக்கப்படலாம். எந்த ஒரு சட்ட வரம்பிற்குள்ளும் இல்லாத இந்த செயலி குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிர்ணயிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுமெனில், மக்களின் அடிப்படை உரிமைகள் மீது எந்த ஒரு சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் செல்லலாம்.
இந்த கண்காணிப்பு வழிமுறைகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பெருநிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப் படக்கூடும். அத்தகைய பெருநிறுவனங்கள், காப்பீடு, கடன் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களோடு சேகரிக்கப்பட்ட இருப்பிட வரலாறு மற்றும் மருத்துவத் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதனால், ஒருவருக்கு நியாயமாகச் சேர வேண்டிய காப்பீட்டுத் தொகையோ இல்லை, கடன் பெறுவதற்கான உரிமையோ மறுக்கப்படலாம்.
இனி வரும் காலங்களில் பிக் டேட்டா (Big Data) எனப்படும் தொழில்நுட்பம் கோலோச்சக்கூடும் என்ற நிலையில், கண்காணிப்பின் மூலம் சேகரிக்கப்படும் குடிமக்களின் மருத்துவத் தகவல்கள் ஒரு வியாபாரப் பண்டமாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, பெருமுதலாளிகளின் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட பொதுமக்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்படும். நாடுகளுக்கிடையே ஏற்படும் வணிக ஒப்பந்தங்களில் இவை ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அதேபோல், குடிமக்களை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டு எண்களை வழங்கும் வழிமுறையில் பல்வேறு சமூக குறியீடுகளைச் சேர்த்து, சமூக மதிப்பீட்டு எண்ணாகவும் மாற்றப்படக் கூடும். இவை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படுகையில் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்.
இங்கு அலைபேசி செயலிகள் மட்டுமல்ல, கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), ட்ரோன் கேமராக்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், காரின் எண் தட்டு (Number Plate), ரோபோட்டுகள், முக அங்கீகார கேமராக்கள், உடல் வெப்பநிலையைக் கண்டறியும் கேமராக்கள் என அரசுகள் கண்காணிப்பு வழிமுறைகளை அதிகரித்துள்ளன. இதுவரை அந்நியமாக அறியப்பட்ட அரசின் கண்காணிப்பு, கொரோனா காலத்திற்குப் பிறகு, பழக்கப்பட்ட ஒரு விசயமாக மாறக் கூடும். இதனால் அரசின் அடக்குமுறைகள் அதிகரிக்கப்படும். சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, சமூகக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் முறையும் கொண்டு வரப்படலாம்.
உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களது வேலைவாய்ப்பு, பயணம் போன்றவை கட்டுப்படுத்தப் படக்கூடும். அரசிற்கு எதிராகப் போராடுபவர்களைப் பழிவாங்க எண்ணினால், சர்வர் மூலமாக அவர்களது செயலியில் மதிப்பீட்டு எண்ணை அல்லது குறியீட்டை மாற்றி, அவரை தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளலாம். தனிநபர்களின் செயல்பாடுகளைப் பொருத்து, அவரின் அடிப்படை உரிமைகள் வகுக்கப்படலாம். இதனால் சமூக அளவில் ஏற்படக்கூடிய வளர்ச்சி, தனிநபர்கள் என்றளவில் சுருக்கப்படும்.
சென்ற 'மே 17 இயக்க குரல்' இதழில், தடுப்பூசி தொழில்நுட்பங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப் போகிறது என்பது குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அதனோடு இந்த கண்காணிப்பு முறைகளும் இணையும் போது, பிறப்பிலிருந்தே ஒருவரின் சமூக மதிப்பெண் கணக்கிடப்படும். மேலும் உடலளவிலான தனிநபர் இடைவெளியும், தீண்டாமையும் நிரந்தரப் பழக்கமாக மாறிவிடும் போது, அனைத்து கண்காணிப்பு முறைகளும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (AI) எனப்படும் செயற்கை அறிவின் பின்னணியில் இயங்கும் எந்திரங்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.
பணத்தாளை கையால் தொடுவதைத் தவிர்க்க, ஏற்கனவே சீனா தனது டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி விட்டது. இப்படியான டிஜிட்டல் கரன்சி முறையும் சமூக மதிப்பீட்டு எண்ணோடு இணைக்கப்படும் போது, ஒருவரது சமூகப் பொருளாதாரம் AI தொழில்நுட்பத்தோடு பிணைக்கப்பட்ட கண்காணிப்பு செயல்முறைக்குள் கட்டுப்படுத்தப்படும். சமூகத்தில் இது ஏற்படுத்தும் விளைவுகள் கற்பனைக்கெட்டா நிலையில் இருக்கும்.
மேலும், இந்த கண்காணிப்புக் கட்டுமானம் உலகிலுள்ள சில பெருநிறுவனங்களின் கட்டுக்குள் செல்லும் போது, அந்த பெருமுதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஏகாதிபத்திய அரசுகள் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, பெருநிறுவனங்களின் சுரண்டலுக்குத் துணைபோகும். இந்தியா, சாதியக் கட்டுமானத்தில் 2000 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்படும். அப்போது, அரசுக்கு எதிரான கலகக் குரல்களை நசுக்கும் வேலையைப் பார்ப்பனியம் செவ்வனே செய்யும். ஒட்டுமொத்தத்தில், சர்வாதிகார முடியாட்சியில் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகள் ஜனநாயக குடியாட்சியில் இயல்பானதாக மாற்றப்படும் சூழலையே இந்த கண்காணிப்பு வழிமுறைகள் ஏற்படுத்தியுள்ளன.
- மே 17 இயக்கக் குரல்