உறுமல்களும் பிளிறல்களும்
மலைகளில் மோதி எதிரொலித்த
வனமெங்கும்
ஒலித்துக் கொண்டிருக்கின்றன
ஆதியோகியின் முரசுகள்..

தாய்வீடு கொள்ளை போக
வேர் வளர்க்க
மாற்றிடம் தேடுகின்றன
உறக்கமற்ற
மரங்களின்
சிவராத்திரிகள்..

மதன நீர் பெருகும் இரவின்... இயல்பற்ற
ஒளி வெள்ளப் பெருக்கு
இணைகூட
இடையூறாக
பித்தன் வழிபாட்டால்
பித்தாகி அலைகிறது வனப்பேருயிர்

ஆன்மீக அரசியலில்
சத்குருக்களிடம் சரணளிக்கப்பட்ட
பூர்வீக
ஆதிக்காட்டின்
வேர்வாசனை
நினைவுகளோடு
அலைந்து திரிகின்றன
சின்னத்தம்பிகள்..

- மு.ச.சதீஷ்குமார்