‘சின்னதம்பி’ யானை தான் இன்று ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்த பெயராக இருக்கின்றது. ‘வழக்கமாக ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்’ என செய்தி வெளியிடும் ஊடகங்கள் இந்த முறை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சின்னதம்பி யானையைக் காப்பாற்ற ஏற்பட்டிருக்கும் செல்வாக்கைப் பார்த்து, வழக்கத்திற்கு மாறாக சின்னதம்பிக்கு ஏற்பட்ட அவலநிலையை எண்ணி கண்ணீர் விடுகின்றன. எப்போது எந்த செய்திக்கு செல்வாக்கு உள்ளதோ, அப்போது அதைப் பயன்படுத்தி TRP ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வதுதான் கார்ப்ரேட் ஊடகங்களின் தந்திரம். காட்டுயானை சின்னதம்பி பிரச்சினையானது கார்ப்ரேட் கொள்ளையால் ஏற்பட்டது என்பதில் இருந்து மடை மாற்றி, சின்னதம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்விற்கு கொண்டுவந்து ஊடகங்கள் நிறுத்தி இருக்கின்றன. சின்னதம்பிக்காக கண்ணீர் வடித்த ஊடகங்களில் ஒன்றுகூட யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த அயோக்கியர்களின் பெயர்களை வெளியிடவில்லை. ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிக் கொண்டு அதற்கு ஆதரவாக பொய்யான செய்தியை வெளியிடும் விபச்சார ஊடகங்களிடம் இருந்து நாம் என்ன கார்ப்ரேட் எதிர்ப்புக் குரலையா கேட்க முடியும்?
நிலம், நீர் , காற்று, காடுகள், மலைகள் என அனைத்தையும் கார்ப்ரேட் லாப வெறி கபாளிகரம் செய்து வருகின்றது. ஆளும் வர்க்கத்தின் துணையில்லாமல் நிச்சயம் ஒரு பிடி மண்ணைக் கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்பதுதான் உண்மை. உள்ளூர் அரசு அதிகாரிகளில் இருந்து மேல் மட்ட அரசியல்வாதிகள் வரை அத்தனை கூட்டுக் களவாணிகளும் ஒன்றாக சேர்ந்துதான் இந்த வன அழிப்பை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். சமவெளிப்பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளை, கார்பைட் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை செய்து, நிலத்தையும், நீரையும் நாசம் செய்து நஞ்சாக்கிய கும்பல்கள் தங்களது லாபவெறி அடங்காமல் பல்லுயிர்களின் புகலிடமாக விளங்கும் வனங்களையும் அழித்து ஒட்டுமொத்த உலகத்தையே அழிக்கத் துணிந்திருக்கின்றார்கள்.
இந்தியாவின் மழைவளக் காடுகளாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 2005 ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டுவரை காடுகளின் பரப்பு பெரிய அளவில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் வனப்பகுதியும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் 58 ஆயிரம் ஹெக்டர் பரப்பும், வயநாட்டில் 9 ஆயிரத்து 700 ஹெக்டர் பரப்பளவும், கர்நாடகாவில் குடகு மலையில் 10 ஆயிரத்து 600 ஹெக்டர் பரப்பளவும் குறைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக தேயிலைத் தோட்டங்கள் அமைக்கவும், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் மரங்களுக்காகவும் கணக்கு வழக்கற்று காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டுகளை 48 மணிநேரத்தில் இடித்துத் தள்ள உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது நம் நினைவில் இருக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மசினகுடி, மாயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அதே போல கோவை பள்ளவாரி நீர்வழித்தடங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான பகுதிகளில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றில் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனமும், ஆர்.எஸ்.எஸ் காவி சாமியார் ஜக்கிவாசுதேவும் தங்களுடைய ராஜ்ஜியத்தை காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துமே பெருமளவு விரிவுபடுத்தியுள்ளனர். இது போன்று ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டே தங்களது அத்துமீறலை நிகழ்த்தி இருக்கின்றார்கள். ஈசா யோகா மையம் நடத்திய ஆதியோகி சிலை திறப்பு விழாவுக்கு நாட்டின் பிரதமரில் இருந்து மாநிலத்தின் முதலமைச்சர் வரை கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது நீங்கள் யாரிடம் சென்று சின்னதம்பியைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட முடியும்? மனித உயிர்களையே மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அவர்களைக் கொல்லும் இரக்கமற்ற பேர்வழிகள் யானைகள் சாவதைப் பற்றியா கவலைப்படுவார்கள்?
இன்றுதான் ஏதோ யானைகள் மீதான தாக்குதல் நடப்பதுபோல ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. ஆனால் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி கடந்த பத்தாண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 97 யானைகள் இறக்கின்றன. யானைகள் மட்டும் அல்ல, இன்னும் காடுகளில் உள்ள பல விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. பெருமளவு காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பசி, பட்டினி, பேரிடர் போன்றவற்றால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றன. இங்கே எல்லா இந்துக்கடவுள்களும் தங்களுடைய வாகனமாக ஏதோ ஒரு விலங்கைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே விலங்குகள் வேட்டையாடப்படும்போது அந்த மதத்திற்காகப் பேசுகின்றோம் என்று சொல்லும் ஒருவனும் குரல் கொடுப்பது கிடையாது. உண்மையிலேயே அப்படி ஓர் எண்ணம் இருந்தால் நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி கலவரம் மட்டுமே செய்ய கற்றுக்கொடுக்கும் கும்பல்கள், ஈசா யோகா நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கமாட்டார்கள். இவர்களுக்கு அப்பாவி மக்களை ஏமாற்றி பொறுக்கித் தின்பதற்கு மட்டுமே மதம் தேவைப்படுகின்றது.
மனிதர்கள் தான் விலங்குகளைச் சார்ந்து வாழ்கின்றார்களே ஒழிய விலங்குகள் ஒரு போதும் மனிதர்களைச் சார்ந்து வாழ்வது கிடையாது. இயற்கை சமநிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை அவை இயல்பாகவே பெற்றிருக்கின்றன. யானை வழித்தடங்களை அழித்து அதன் பாதையைத் துண்டாக்காமல் இருந்திருந்தால் ஒருபோதும் சின்னதம்பி, மக்கள் வாழும் பகுதிக்கு வந்து விளை நிலங்களை அழித்திருக்க மாட்டான். உங்களின் வீடுகளும், ரிசார்ட்டுகளும், ஓட்டல்களும், பொறுக்கி சாமியார்களின் ஆன்மீக வியாபாரக் கூடங்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகள் ஆண்டு அனுபவித்துவந்த இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால்தான் அவை உணவுக்காக வர நிர்பந்திக்கப்படுகின்றன.
மனிதன் எல்லாவற்றையும் தன்னுடைய பேராசையால் கபாளிகரம் செய்துகொள்ளத் துடிக்கின்றான். இந்த உலகத்தில் தானும் தன்னுடைய குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று முடிவு செய்து அதற்காக அனைத்தையும் அழித்து காசாக்க வழி தேடுகின்றான். சின்னதம்பியைக் காக்க வேண்டும் என இரக்க மனது படைத்தோர் போராடுகின்றார்கள். ஆனால் சின்னதம்பி போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகளை அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் துணையுடன் அழித்துக் கொண்டிருக்கும் கார்ப்ரேட் ரவுடிகளுக்கு எதிராக அவர்கள் வாய்திறக்காமல் இருக்கின்றார்கள். கும்கி யானைகளின் துணையுடன் நம்மால் சின்னதம்பியை அடக்கி, அதையும் ஒரு கும்கியாக மாற்ற முடியும். மனிதனால் செய்ய முடியாதது என்ன இருக்கின்றது? கும்கியாக மட்டுமல்ல, கோயிலில் பிச்சை எடுக்கும் யானையாகக் கூட நம்மால் அதை மாற்ற முடியும். நாமே சுயமரியாதையற்றவர்களாய், பேராசை பிடித்தவர்களாய் இருக்கும்போது விலங்குகளின் நலத்தைப் பற்றியோ, சுயமரியாதையைப் பற்றியோ நாம் கவலைப்பட போகின்றோமா என்ன? அப்படி கவலைப்பட்டிருந்தால் இந்நேரம் யானைவழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஈசா யோகா மையக் கட்டிடங்களும், பணக்கார பன்றிகள் கொட்டமடிக்க கட்டப்பட்ட ரிசார்ட்டுகளுக்கும், ஓட்டல்களுக்கும் எதிராக அல்லவா நம்முடைய போராட்டத்தை நாம் கட்டமைத்து இருப்போம்.
- செ.கார்கி