அறிவியல் பெயர்: Strobilanthes kunthianus
அதிகம் காணப்படக் கூடிய இடம்: எரவிக்குளம் தேசிய பூங்கா-கேரளம், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்
அடையாளம்: குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து தோடர்கள் தங்கள் வயதைக் கணக்கிடுகிறார்கள்.
நீலகிரி மலைத்தொடர் பகுதியில் வாழும் தோடர்கள் போன்ற பழங்குடி மக்களிடம், தங்கள் தேவைக்காக பூமியை சுரண்ட விரும்பாத உணர்வு எஞ்சியிருக்கிறது. இதுபோன்ற பண்புகள் நாகரிக வளர்ச்சி அடைந்த (!) 21 ஆம் நூற்றாண்டில் அருகிவிட்டது. தோடர்களின் இந்த இயற்கை நேசம் போல், எப்பொழுதாவது தோன்றும் நல்ல விஷயத்துக்கு உவமையாக திகழ்கிறது குறிஞ்சி மலர்.
இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மறுபக்கம். ஆச்சரியமூட்டும் இந்த இயற்கை நிகழ்வு இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடரும்? மிகப் பெரிய கேள்வி நம் முன்னால் பிரம்மாண்டமாக நிற்கிறது.
மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதிக்கு நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது.
கடல்மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் வளரும் குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும், மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன. மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன. அவை கொண்டு வரும் பெருமளவு தேனை தோடர் பழங்குடிகள் சேகரிக்கின்றனர்.
இந்த மக்களின் வாழ்க்கை-பண்பாட்டுடன் குறிஞ்சி மலர் பல்வேறு வகைகளில் பிணைந்துள்ளது. பழங்குடிகள் இந்த மலரை அன்பின் அடையாளமாகவும், இவை பூக்கும் காலத்தை நல்ல காலமாகவும் கருதுகிறார்கள். காலங்காலமாக தமிழ்க் கடவுளான முருகனின் மலராக குறிஞ்சி கருதப்படுகிறது. அத்துடன் மலையும் மலை சார்ந்த திணை குறிஞ்சி என்ற பெயராலேயே அடையாளம் பெற்றிருக்கிறது. நமது நிலப்பரப்புகள் அனைத்தும் தாவரங்கள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பெயர்களாலேயே அடையாளப்படுத்தப்பட்டன.
குறிஞ்சி மலர்களின் அழிவுக்கு மிகப் பெரிய காரணம் தேயிலை-காபி தோட்டங்கள், தைல மரத் தோட்டங்கள். காலனியாதிக்கம் செய்த தவறுகளாலும், சுதந்திரம் பெற்ற பின்பும் அந்த தவறுகளை நாம் திருத்திக் கொள்ளாததுமே குறிஞ்சியின் அழிவுக்குக் காரணம்.
குறிஞ்சியை பாதுகாப்பது என்பது அந்த ஒரு அரிய தாவரத்தை மட்டும் காப்பதற்கான ஒரு முயற்சியாக இருக்காது. ஏனென்றால் குறிஞ்சி என்பது தனித்தன்மை கொண்ட உயிரினங்கள் வாழ வகை செய்யும் புல்வெளி-மழைக்காடுகள் என்ற சூழல்அமைப்பின் வளத்தை அடையாளப்படுத்தும் சுட்டி. இந்தத் தாவரம் செழிப்பாக இருக்கிறது என்றால், அது வாழும் பகுதியில் இயற்கைச் சுழற்சி தொந்தரவின்றி நடந்து, பல்லுயிர்கள் பெருகி வாழ்கின்றன என்று அர்த்தம்.
காலங்களைக் கடந்த இந்த உயிர்சுழற்சி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தொடரும்? இல்லை எத்தனையோ தமிழ் அடையாளங்கள் துடைத்தழிக்கப்பட்ட நிலைக்கு குறிஞ்சியும் ஆளாகிவிடுமா?
தமிழில்: ஆதி
நன்றி- டெகல்கா