periyar 849இந்த வாரம் அதாவது நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியான “சுதேசமித்திர”னின் பதினோராவது பக்கத்தில் “திருப்பதி வெங்கிடாசலபதி” என்கின்ற கடவுளின் தேவஸ்தான வருஷாந்திர வரவு செலவு (பாலன்ஸ் ஷீட்) கணக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதில் இந்த ஒரு வருஷத்திற்கு, அதாவது, 1337ம் பசலிக்கு மேற்படி தேவஸ்தானத்திற்கு ஒட்டு மொத்தம் இருபத்திரண்டே முக்காலே அரைக்கால் லட்ச ரூபாய் வசூலாயிருக்கின்றது.

இந்த ரூ.22,82,695 - 8-9 பைசாவுக்கும் செலவும் காட்டப்பட்டிருக்கின்ற விவரமென்ன வென்றால், ஆறு லட்சத்துச் சில்லறை ரூபாய் நிலுவை மொத்தம் என்று காட்டப்பட்டிருப்பது போக மீதி பதினாறு லட்சத்து சில்லறை ரூபாய்க்கும் காட்டப்பட்டிருக்கும் செலவுகளைப் பார்த்தால், இந்து மதமும், இந்துமதக் கடவுள்களும் நமது இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது என்பது முழு மூடர்களுக்கும் எளிதில் விளங்கும்.

அதாவது :-

கோயில்களுக்குக் கொடுத்தது ரூ. 23,515

படித்தர சாமான் வாங்க ரூ. 1,38,932

பழுதுகள் ரூ. 4,55,701

சமஸ்கிருத ஆங்கில வித்யாசாலை ரூ. 1,07,941

சிப்பந்திகள் ரூ. 2,51,045

எஸ்டேட் நிர்வாக செலவு ரூ. 3,57,229

இந்த கோயில்களுக்கு கண்டிரிபியூஷன் ரூ. 60,600

எண்டோமெண்ட் போர்டுக்கு ரூ. 14,613

இதர சில்லரைச் செலவு ரூ. 1,21,360

டிரஸ்ட் பண்டு செலவு ரூ. 3,527

இதர சில்லரைச் செலவு ரூ. 70,838

என்றவாறு, பதினாறு லட்ச ரூபாய்களுக்குச் செலவு காட்டப்பட்டிருக் கின்றது.

தவிர திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்துக்களை காட்டும் ஜாப்தாவில் மேற்படி தேவஸ்தான சொத்து பெறுமானம், ஏழு கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தையாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது ரூபாய், மூன்று அணா, பத்துபைசா என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த 7,19,85,980 ரூபாய் பெறுமான சொத்துக்களில் ஆறரைக் கோடி ரூபாய்க்கு கட்டிடங்களும் நிலங்களும் நகைகள், துணிகள் வாகனங்களுமாக 21 லட்ச ரூபாயும், இரும்பு சாமான் முதலியவை 4 லட்ச ரூபாயும், டிக்கிரி மொத்தம் 9 லட்ச ரூபாயும் கடன் பத்திரங்கள் 33 லட்ச ரூபாயும், கிஸ்தி பாக்கி 7 1/2 லட்சரூபாயும் மற்றும் ஏதேதோ சில்லரை வகையில் மீதியுமாய், கணக்குக் காட்டப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு கோயில் கணக்கை மாத்திரம் பார்த்தால் நமது நாடு தரித்திரமடைந்து கல்வியற்று சுதந்திரமற்று அடிமைத்தனத்தில் ஆழ்ந்திருப்பதற்குக் காரணம் வெள்ளைக்கார அரசாங்கமா அல்லது நமது மதமும் கடவுள்களுமா என்பது விளங்காமல் போகாது.

இந்தக் கோயிலுக்கு வரும் வருஷ வருமானத்தின் மேற்கண்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் எத்தனை மக்கள், எவ்வளவு தொலை தூரங்களிலிருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போகிறார்கள் என்பதையும், அவர்களுடைய போக்குவரவு செலவையும் மற்ற செலவுகளையும் சேர்த்துப் பார்த்து, அது எத்தனை லட்ச ரூபாய் ஆகுமென்பதையும் வாசகர்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால், இதைப் போன்று இன்னமும் பத்துப் பதினைந்து லட்ச ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லுவோம்.

அன்றியும் இந்த தேவஸ்தான மொத்த சொத்தாகிய ஏழு கோடியே இருபது லட்ச ரூபாயை ரொக்கமாக்கி நூற்றுக்கு ஆறு வட்டிக்கு போட்டு கணக்குப் பார்த்தால் வருஷத்திற்கு வட்டி மாத்திரம் 43,20,000 ரூபாய் ஆகின்றது.

இந்த நாற்பத்தி மூன்று லட்சத்து இருபதினாயிரம் ரூபாயும் யாத்திரைக்காரர்கள் காணிக்கை வரும்படியான சுமார் பதினைந்து லட்சரூபாயும் இதற்காக ஏற்பட்ட யாத்திரைக்காரர்களின் ரயில் சார்ஜ், வழிப்பயணச் செலவு குறைந்தது ரூபாய் பத்து லட்சமும் சேர்த்தால் மொத்தம் 65 அல்லது 70 லட்ச ரூபாய் ஆகும்.

இந்த ஒரு கோயில் சொத்தும் வரும்படியும் இவ்வளவானால், இன்னும் இது போன்ற ஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருவாரூர், அழகர்மலை முதலிய கோயில்களுடைய சொத்தும் வரும்படியும் மற்றும் சில்லரை கோயில்கள் ஒரு கோடி முதல் ஐம்பது லட்சம் வரை சொத்துக்கள் உள்ளவைகளும், வருஷம் பதினாயிரம் முதல் ஒரு லட்சம் வரும்படி உள்ளவைகளுமான நூற்றுக்கணக்கான கோயில்களின் வரும்படியும் அதற்காக மக்களுக்கு ஏற்படும் செலவுகளும் கணக்குப் போட்டால் தென் இந்தியாவில் மாத்திரம் நம் சராசரி வருஷம் குறைந்தது மூன்று கோடி ரூபாய் களுக்கு குறையாது என்றே சொல்லலாம்.

இந்த மூன்றுகோடி ரூபாய்களுக்கு எத்தனை சர்வ கலாசாலைகள், எத்தனை ஆராய்ச்சி சாலைகள், எத்தனை தொழிற் சாலைகள் ஏற்படுத்தக்கூடும்.

இந்தமாதிரி ஒரு இருபத்தைந்து வருஷங்களுக்கு நடத்தினால் இந்தியாவில் கையெழுத்துப் போடத் தெரியாத தற்குறிகளாவது, வேலையில்லாத ஒரு தொழிலாளியாவது கூலி கிடையாமல் கப்பலேறும் ஒரு கூலியாவது தென்னாட்டில் இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

ஓ! மதப்பித்தர்களே! இப்பொழுதாவது யோசித்தப் பாருங்கள்! இந்தியரை மூடர்களாக்கியது யார்? தரித்திரர்கள் ஆக்கியது யார்? அடிமைகளாக்கினது யார்? அன்னிய ஆட்சிக்கு உள்படுத்தியது யார்? மக்களை தொழிலில்லாமல் அன்னிய நாட்டிற்கு ஓட்டினது யார்? நமது மதமும் கடவுள்களும் அல்லவா என்று கேட்கின்றோம்.

நமக்கு என்ன சுயராஜ்ஜியம் வந்துதான் என்ன பயன்? நமது செல்வத்தையும் நேரத்தையும் அறிவையும் இந்த மாதிரி மதமும் கடவுள்களும் கரையான்கள் போலவும் க்ஷயரோகங்கள் போலவும் நமது நாட்டின் இரத்தத்தையும் சதையையும் உறிஞ்சிக் கொண்டு இருப்பதிலிருந்து மீள வகையறியாமல் இருக்கும் நிலையில் இன்றையத் தினமே வெள்ளைக்காரர்கள் ஓடிவிட்டாலும் நாம் எந்த வகையில் முன்னுக்கு வரக்கூடும்? சென்ற வாரத்தில் கூடின தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டத்தில் மத விஷயத்தில் சாக்கார் பிரவேசிக்கக் கூடாதென்றும், அது மாத்திரமல்லாமல் காங்கிரசும் பிரவேசிக்கக் கூடாதென்றும் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இது தவிர, பூரண சுயேச்சை விரும்பும் திருவாளர்கள் சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தி சாஸ்திரியும் சேர்ந்தே மதத்தில் சர்க்காரும் காங்கிரசும் பிரவேசிக்கக் கூடாதென்றும், பிரவேசித்தது தப்பென்றும் பேசி முடித்திருக்கின்றார்கள்.

வாசகர்களே! இது திரு.சத்தியமூர்த்தியின் தனி அபிப்பிராயமென்று கருதுகிறீர்களா? ஒருக்காலமும் கருத முடியாததே! அவர் சென்னை மாகாண கல்வியாளர்களின், அதாவது, ஆங்கில பண்டிதர்களின் பிரதிநிதி அல்லவா? திரு.சத்தியமூர்த்தியின் அபிப்பிராயம் தானே அவரது தொகுதியாளர்களின் அபிப்பிராயமாக இருக்கவேண்டும்? எனவே நமது நாட்டு கல்வியாளர்களும் பூரண சுயேச்சை விரும்பும் அரசியல் தலைவர்களுமாயிருக்கின்றவர்களின் அபிப்பிராயமே, இப்போது நமக்கு இருந்துவரும் மதக் கொடுமையிலும் சமூகக் கொடுமையிலும் கடவுள்கள் கொள்ளைகளிலும் கைவைக்கப்படாது என்ற தீர்மானம் ஆயின், பிறகு நமக்கு எங்குதான் விடுதலை இருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இந்தக் கடவுள்களின் கொள்ளைகளையும் மதக்காரர்களின் கொடுமைகளையும் ஒழிக்காமல் எந்த விதத்திலும் நமது நாட்டுக்கு விடுதலையும் விமோசனமும் இல்லை என்றே உறுதி கூறுவோம்.

நிற்க, இந்த விதத்தில் நமது பணம் கொள்ளை போவதோடு மத சம்பிரதாயத்தின் மூலம் நமது அறிவு எவ்வளவு கொள்ளை போகின்றது என்பதை யாராவது கவனிக்கின்றார்களா? ஒரு சிறிதும் இல்லையே? நமது குறைகளுக்கும் கஷ்டங்களுக்கும் நமது ஆத்திரங்கள் எல்லாம் அர்த்தமில்லாமல் கல்லில் முட்டிக்கொள்வது போல், வெள்ளைக்காரன் மேல் செல்லுகின்றதே அல்லாமல் உண்மைக் காரணமாயிருக்கின்ற புரோகிதன் மீதோ, மதச்சாரியர்கள் என்பவர்கள் மீதோ, மத சாஸ்திர புராணங்களின் மீதோ யாருக்காவது புத்தி செல்லுகின்றதா என்று கேட்கின்றோம்.

இந்த நாட்டுக்கு இந்த கடவுள்களும் மதங்களும் தானே பெரிய ஆபத்தாய் இருக்கின்றதென்பதை ஒருவருமே உணருவது இல்லையென்றால், எப்படித்தான் நாம் மற்ற நாட்டாரைப் போல் முன்னுக்கு வரமுடியும் என்று கேட்கின்றோம்?

மதக்கொடுமைகளையும், கடவுள் கொள்கைளையும் பார்க்கும்போது, கள்ளுக்கடையும், சாராயக்கடையும், தாசி வீடுகளும், சூதாடு மிடங்களும், கள்ளர் குகைகளும் நமக்கு ஒரு கெடுதியென்றோ, கஷ்டமான தென்றோ சிறிதுகூட தோன்றுவதில்லை.

ஒரு கோயில் ஒழிவதன் மூலம் இனியும் நூறு கள்ளுக்கடைகள் வைப்பதானாலும், தாராளமாய் சம்மதிக்கலாம் என்றும், ஒரு உற்வசம் ஒழிவதின் மூலம் நூறு தாசி வீடுகள் இருப்பதானாலும், தாராளமாய் அனுமதிக்கலாம் என்றுமே தோன்றுகின்றது.

ஏனெனில், இந்தக் கோயில்களும் உற்சவங்களும் நமது மக்களை அவ்வளவு மூடர்களாகவும், தரித்திரர்களாகவும் ஆக்கிவிடுகின்றன.

நம்மில் அநேகர் நம் நாட்டில்தான் இம்மாதிரி பெருந்தொகை தர்மங்கள் நடைபெறுகின்றன; மற்ற நாடுகளில் இல்லை என்று கருதுகின்றார்கள். நம்மைவிட எத்தனையோ மடங்கு அதிகமான தொகைகளை மேல் நாட்டார்கள் தருமம் செய்கின்றார்கள்.

ஆனால், இந்த மாதிரி, செலவு கேட்காமலும் பணம் என்ன ஆகின்றது என்று யோசிக்காமலும் சமுத்திரத்தில் கொண்டு போய் கொட்டுவது போல் மூடத்தனமாய் செலவு செய்வது கிடையாது.

உதாரணமாக இந்த நாட்டில் இருக்கும் பல காலேஜுகளும், பல மருத்துவ சாலைகளும் மற்றும் பல உபயோகமுள்ள ஆராய்ச்சி சாலைகளும் மேல் நாட்டார் தர்மத்தாலேயே நடைபெறுகின்றதை பார்க்கின்றோம்.

நாமும் அதன் பயனை அனுபவிக்கின்றோம். ஆனால், நமக்கு மாத்திரம் சிறிது கூட இதைப் பார்த்த பின்பும் புத்தி சீர்பெறுவதில்லை. சமீபத்தில் வெளியான ஒரு பத்திரிகையால் அமெரிக்கா தேசத்தில் ஒரு கனவான் சுமார் பத்து கோடி பவுன்களுக்கு மேலாகவே, கல்விக்காகவும், சயன்சு ஆராய்ச்சிக்காகவும், மருத்துவ சாலைக்காகவும் தர்மம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனால் ஒரு காசாவது கோயில் கட்டவோ, சாமிக்கு உற்சவம் செய்யவோ, பூஜை செய்யவோ, அவர் கொடுக்க வில்லை. இதனால் மேல் நாட்டவர்கள் தர்ம எண்ணம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? அல்லது மேல் நாடுகளில் “கடவுள் கடாட்சம்” இல்லை என்றாவது சொல்லிவிட முடியுமா என்று கேட்கின்றோம்.

எனவே நமது நாட்டில் நாடு விடுதலை அடைய வேண்டும் என்றும் உண்மையாய்க் கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு முக்கியமான வேலை எல்லாம், மதக் கொடுமைகளையும் கடவுள்கள் கொள்ளைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே ஒழிய, பூரண சுயேச்சையோ, குடியேற்ற நாட்டு அந்தஸ்தோ, மாகாண சுயாட்சியோ அல்ல என்பதாக உறுதி கூறு கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 17.11.1929)

Pin It