நிலா வண்ணத்தால்
அடர்ப் பச்சைக் காட்டும்
வேப்ப மரத்தின் அடியில்
உன்னோடு
ஒரு சாமம் அளக்கும் போது
எட்டி பார்த்த என் பார்வையில்
செம்மறிக்கும் கருத்த மாட்டுக்கும்
இடைவெளி வழிய வழிய
காற்றசைத்த
கழுத்தோசை மணி
மீட்டியது அவ்விரவின் மேகத்தையும்
இசைத்தது
உன் நகத்தின் வரிகளையும்...
***
சிவப்பு
பொட்டு விட்டு
நிறைஞ்சி பிரியும் போது
ஓட்டை உடைசல் இலை வழியாக
உன் கன்னத்தில் விழும் ஒளிக்கு மாம்பழத்து நிறமென்றால்
என் நெஞ்சு மேல விழும் ஒளிக்கு
தாழம்பூ கூர்மை என்கிறாய்...
***
மெல்ல குத்தும் சூரிய ஒளியில்
என் காதோரம்
இருமுறை படர்கிறது உன் குரல்
ஆட்டுக்கு இறையாக்கிட்டு
உளுந்தகஞ்சி சோறாக்குறேன்னு...
என் கண்ணிலிருக்கும்
உன் பார்வையுள் நீ இருக்க,
நான் சொன்னதற்கு
மறுத்தசைத்த உன் விழியுருண்டை
என்ன பார்த்து சுத்த சுத்த
நானே செஞ்சேன் உளுந்தங்கஞ்சி...
- முருகன்.சுந்தரபாண்டியன்