ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கொங்கு வேளாளர் பெண்களை கடத்தி வந்து தனி இடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஈரோட்டில் திண்டப் பகுதியில் கொங்கு வேளாளர்  திருமண தகவல் மய்யத்தில் இப்படி அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட பெண்களில் 5 பேர் தப்பித்து வந்துள்ளனர். அதில் ஒருவர் நவீனா. பொறியியல் கல்லூரியில் படித்த கவுன்டர் ஜாதியைச் சார்ந்த நவீனா, பெரியண்ணன் என்ற நாடார் சமூக இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு,  மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தையும் பதிவு செய்தனர். திருமணத்துக்குப் பிறகு தொட்டில்பாளையத்திலுள்ள கணவரின் சகோதரி இல்லத்தில் தங்கியிருந்தார். கொங்கு வேளாளர் ஜாதிப் பெண்கள், வேறு ஜாதி ஆண்களை திருமணம் செய்ய விடாமல் தடுக்கும் ‘ஜாதி வெறி கண்காணிப்பு’ கும்பல், இந்தப் பெண்ணை அந்த வீட்டிலிருந்து கடத்தியதோடு, 2 மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணின் கருவையும் கட்டாயப்படுத்தி தனியார் மருத்துவமனையில் கலைத் திருக்கிறது. இந்த சித்திரவதை கடத்தலுக்கு காவல் துறையிலுள்ள அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள் துணையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

kolathur mani and lovers

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் மேட்டூர் ஒன்றிய கழகத் தோழர்கள் பிரச்சினையில் தலையிட்டு களமிறங்கி செயல்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அப்போது காவல் துறை மருத்துவ அதிகாரிகள் ஜாதி வெறியோடு பொய் சாட்சி, பொய் சான்றிதழ் வழங்கிய உண்மைகளும் அம்பலத்துக்கு வந்துள்ளன. நவீனா, தனக்கு இழைக்கப் பட்ட சித்திரவதைகளை விளக்கி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் துறை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு விவரத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

“நான் (நவீனா), நானும் பெரியண்ணன் ஒருவருக் கொருவர் விரும்பி வந்தோம். உரிய திருமண வயதுள்ள நாங்கள் இருவரும் 11.7.2016 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். (திருமணச் சான்றிதழை இணைத்துள்ளேன்) நாங்கள் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் எங்கள் திருமணம் எனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை.

திருமணத்திற்குப் பின் ஈரோடு மாவட்டம் சித்தார் அருகே உள்ள கல்பாவி ஊராட்சியைச் சேர்ந்த தொட்டி பாளையத்தில் என் கணவரது சகோதரி சாந்தியின் வீட்டில் அவர்களுடன் வசித்து வந்தோம்.

அங்கு எங்களைத் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தது எனது சித்தப்பா (சித்தி ஜெயசக்தி யின் கணவர்). பூதப்பாடி சந்தை அருகில் வசித்து வரும் அம்மாசை கவுண்டர் மகன் கார்த்தி ஏற்பாட்டில், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து 5.8.2016 அன்று மதியம் 12 மணியளவில் பூனாச்சி சம்பத் மற்றும் இருவர் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து எனது வாயைப் பொத்தி அவர்கள் வந்திருந்த ஆமினி வேனில் என்னை ஏற்றினார்கள். வேனில் ஏற்றியதும் டிரைவர் வண்டியை ஓட்டத் தொடங்கி விட்டார். கடத்திய மூவரும் என் கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிவிட்டனர். ஒரு வீட்டில் கொண்டு போய் என்னை இறக்கினர். அதன் பின்னரே கண்கள் கட்டி யிருந்ததை அவிழ்த்து விட்டனர்.

என்னைக் காணாத என் கணவர் 5.8.2016 அன்றே அம்மாபேட்டை காவல்நிலையத்தில் கடத்தல் புகார் அளித்துள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லாததால் எனது கணவர் சிலர் உதவியுடன் தங்கள் அலுவலகம் வந்த 6.8.2016 அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். உடனே அவசர அவசரமாக அம்மாபேட்டை ஆய்வாளர் என் கணவரை அழைத்து உடனடியாக பவானி மகளிர் காவல் நிலையம் வரச் சொல்லி அழைத்துள்ளார். என் கணவர் வருவதற்கு முன்பாகவே என்னை அங்கு அழைத்து வந்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரூபி என்னை மிரட்டினார். அதற்கு முன்பு என் பெற்றோர்கள் என்னைக் காணவில்லை என புகார் கொடுத்திருந்தபோது நான் வந்து என் கணவருடன் செல்கிறேன் என்று கூறிவிட்டேன். அப்போது இதே உதவி ஆய்வாளர் ரூபி என்னைத் தலையில் கொட்டியும் துன்புறுத்தியும் மிரட்டினார். 6.8.2016 அன்று பவானி துணைக் கண்காணிப் பாளரிடம் என் சித்தப்பா கார்த்தி என்னை அழைத்துச் சென்றார். அவரும் என்னைக் கடுமையாக நடத்தினார். என் கணவரின் ஜாதியைச் சொல்லி  அவன்தான் கிடைத்தானா என்று கிண்டலாகப் பேசினார். வீணாக இருவரும் சாகப் போகிறீர்கள் என்று மிரட்டினார். பின்னர் ஒழுங்காக நான் பெற்றோரிடம் சென்று வருகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிடு என்றார். அன்று இரவு 9.45 மணிக்கு பவானி நீதித் துறை நடுவர் முன்பு கொண்டு போய் வற்புறுத்தி, என் விருப்பத்துக்கு மாறாக பெற்றோருடன் செல்வதாக சொல்ல வைத்தனர். காவல்துறையும் என் பெற்றோர், உறவினர்கள் மட்டும் சுற்றி இருக்க, அனைவரும் ஒரே கருத்தை வலியுறுத்தி நெருக்கடிக் கொடுத்து என்னை சொல்ல வைத்து விட்டனர்.

அங்கிருந்து எண்ணமங்கலத்திலுள்ள என் உறவினர் பரதன் வீட்டுக்கு கொண்டு வைத்தனர். நான் 10.8.2015 அன்று அங்கிருந்த ஒரு கைபேசியை எடுத்து யாருக்கும் தெரியாமல் என் கணவரை அழைத்து என்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தகவல் சொன்னேன். இதை அறிந்த என் சித்தப்பா கார்த்தி வந்து பூதப்பாடியிலுள்ள அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டார். அடுத்த நாள் 11.8.2016 அன்று நான் கருவுற்றிருப்பதை அறிந்த என் சித்தப்பா கார்த்தியும் அவரது சித்தி ஜெய் சக்தி, என் அம்மா செல்வி ஆகிய மூவரும் என்னை அவினாசிக்கும், கோவைக்கும் இடையே உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர். 11.8.2016 இரவு மருத்துவமனையிலேயே தங்கி இருந்துவிட்டு 12.8.2016 அன்று பூதப்பாடிக்கு (என் சித்தப்பா கார்த்தி வீட்டுக்கு) திரும்பி வந்தோம்.

பின்னர் 15.8.2016 அன்று என்னை ஈரோடு சூரம்பட்டி நால்ரோடிலுள்ள டாக்டர் சித்ரா தங்கவேலு வின் அஸ்வின் மருத்துவமனைக்கு எனது அம்மா, மாமா மணிகண்டன், சித்தப்பா, சித்தி நால்வருமாக அழைத்துச் சென்றனர். அவர் எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார். அதன் பின்னர் அவர் திருச்சியிலிருந்து ஒரு சீனியர் மருத்துவர் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். மாலை 6.30 மணிக்கு அவர் வரும் வரை காத்திருந்து அவரை சந்தித்தோம். அவர் என்னிடம் எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட நட்பு குறித்து தொடக்கம் முதல் விரிவாக கேட்டறிந்தார். அதுமட்டு மின்றி என் கணவரது குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் ஊர், முகவரி, தொலைபேசி எண்கள் என அனைத்து விவரங்களையும் கேட்டார். நானும் உளவியல் மருத்துவர் என எண்ணி நானும் மனம் திறந்து எல்லா செய்திகளையும் அவருடன் பகிர்ந்து கொண் டேன். சுமார் ஒன்றரை மணி நேரம் என்னுடன் அவர் பேசினார். (ஆனால் அவர் மருத்துவர் இல்லை; ஜாதித் தலைவர் என்பது பிறகுதான் தெரிய வந்தது)

அன்று இரவு பூதப்பாடி என் சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் திரும்பினோம். வரும்போது என் அம்மா, டாக்டர் சித்ரா தங்கவேலு இரண்டு மாதங் களாக வேறு ஜாதிக்கார னோடு வாழ விட்டிருக் கிறீர்களே, என்னிடம் ஆரம்பத் திலேயே கூறியிருந்தால் அப்போதே நான் பிரித்து அழைத்திருப்பேன் என்று கூறியதாகக் கூறினார்.

16.8.2016 காலை சுமார் 9.30 மணியளவில் என் சித்தப்பாவின்  அம்மாவின் கைபேசியை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து இதுவரை நடந்தவற்றை விளக்கிக் கூறி எப்படியாவது என்னை வந்து அழைத்துச் சென்று விடுங்கள். நீங்கள் உடனே மோட்டார் சைக்கிளில் வந்தால் நான் எப்படியாவது தப்பி வந்து விடுகிறேன் எனக் கூறினேன். அவரும் சுமார் 10.15 மணிக்கு பூதப்பாடி வந்து விட்டார். அவரைப் பார்த்த நான் கேட் வழியாக வெளியே வந்தால் வீட்டாருக்குத் தெரிந்துவிடும் என்பதால் சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து என் கணவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தேன். அதைக் கவனித்துவிட்ட எனது சித்தி ஜெய் சக்தி ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட்ட என் கையைப் பிடித்து இழுத்துவிட, நான் கீழே விழுந்து விட்டேன். எழுந்த நான் அவரது கைகளைத் தட்டிவிட்டு மீண்டும் என் கணவரின் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினேன். அப்போது என் சித்தி போட்ட சத்தத்தைக் கேட்ட மக்கள் (அன்று அங்கு சந்தை நாள்) என்னவோ ஏதோ என்று என்னைப் பிடித்து விட்டார்கள்.

அன்று நண்பகல் 2 மணியளவில் என்னை அறிவானந்தம் பெரியப்பா காரில் கவுந்தப்பாடியில் வி.எஸ்.ஆர். கார்டன்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டிருந்த ‘தங்க மயில் இல்லம்’ என்ற வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கெனவே அந்த வீட்டில் இரண்டு இளம் பெண்கள் இருந்தனர். மாலை 6 மணியளவில் நான் டாக்டர் சித்ரா தங்கவேலு மருத்துவமனையில் சந்தித்த சீனியர் டாக்டரும் வேறு இருவரும் அங்கு வந்தனர். பின்னர்தான் சீனியர் டாக்டர் என்று சொல்லப்பட்டவர் திண்டலில் தானாவதி திருமண தகவல் மையம் நடத்தி வரும் துளசி மணி எனவும், உடன் வந்தவர்கள் பெயர் வெங்கடேஷ், பாலு எனவும் அறிந்தேன். அவர்கள் வந்ததும் எனது அம்மாவும் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்று விட்டனர். அன்று முதல் நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன்.

19.8.2016 இரவு எனது சித்தப்பா கார்த்தியும் சித்தியும் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்திருந்தனர். இரவு 10 மணி வரை அவர்கள் இருந்தனர். அப்போது நாங்கள் மூன்று இளம் பெண்கள் மட்டும் அங்கே இருக்கிறோம். இதே வீட்டில் மூன்று இளைஞர்களும் வீட்டினுள்ளே தங்குகின்றனர். எனக்கு பயமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. இரவு முழுதும் தூங்கக்கூட முடிவதில்லை என்று அழுதேன். என் சித்தப்பாவும் சித்தியும் சென்ற பின்னர் துளசிமணி, பாலு, சரவணன் மூவரும் என் உடலையும், கால்களையும் அழுத்திப் பிடித்துக் கொள்ள, வெங்டேஷ் கருப்பு “ஓஸ் பைப்”பால் உள்ளங்கால்களில் தொடர்ச்சியாக அடித்தார். வலி தாளாமல் நான் கத்த முடியாமல் என் வாயை துளசிமணி பொத்திப் பிடித்துக் கொண்டார். இரவு முழுதும் அழுதபடியே ஒரு மூலையில் கிடந்தேன்.

ஒவ்வொருவராக மேலும் நான்கு இளம் பெண்களை அவ்வீட்டுக்குக் கொண்டு வந்தனர். எல்லோரையும் மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தனர். உங்களுக்கு கவுண்டர் பையன்களே இல்லையா? கண்ட நாய்களை ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள்? என்று ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் திட்டுவதும் உண்டு. வெளியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. 45 நாள் இதே கொடுமையை அனுபவித்தோம். கொடுமைகள் தாளாமல் எப்படியாவது இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் ஒரு ஐந்து பேர் கூடி முடிவு செய்தோம். தங்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

3.10.2016 அன்று வழக்கமாக காவலுக்கு இருக்கும் மூவரில் பாலு ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் கவனக் குறைவாக இருந்ததை சாதகமாக எடுத்துக் கொண்டு நாங்கள் ஐந்து பேரும் வேகமாக வெளியே ஓடி வந்து கதவைப் பூட்டிவிட்டு தப்பி வந்தோம். அப்போது நண்பகல் 12.15 மணி. நடமாட்டம் ஏதுமில்லை. சுமார் 100 மீட்டர் தூரம் ஓடி வந்து கவுந்தப்பாடி-ஈரோடு மெயின்ரோட்டில் சென்ற ஒரு காரை கைகாட்டி நிறுத்தி, அவரிடம் கெஞ்சிக் கேட்டு, சேலம் வந்து இறங்கிக் கொண்டோம்.

3.10.2016 காலை 7.30 மணிக்கு என் கணவர் பெரியண்ணன் சேலத்தில் இருந்த என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்காக தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு (3.10.2016) அன்று வாய்தா என்றும், எனக்கு வைரஸ் காய்சசல் எனக் கூறி, அம்மாப்பேட்டை உதவி ஆய்வாளர் நடேசன் ஒரு மருத்துவ சான்றிதழைக் கொடுத்ததால் 17.10.2016க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நாங்கள் உடனடியாக எங்கள் வழக்கறிஞருக்குத் தகவல் கொடுத்து, 4.10.2016 அன்று நாங்கள் தப்பி வந்த செய்தியைக் கூறினோம். அவர் அந்த செய்திகளை 4.10.2016 அன்றே ஒரு மனுவாகப் போட்டு, 17.10.2016 அன்று ஒத்தி வைக்கப்பட்ட வழக்கை முன் தேதியில் விசாரணைக்கு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வழக்கு 6.10.016 அன்று விசாரணைக்கு வந்தது. நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானேன். நீதிபதிகள் என்னிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் நான் என் கணவருடன் செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதை ஏற்று அவ்வாறே தீர்மானித்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினர்.

எனவே,

1.            எனது பெற்றோரின் புகாரை அடுத்து, நான் 7.6.2016 அன்று சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி, அவர்கள் அறிவுரையின்படி பவானி மகளிர் காவல் நிலையம் வந்து, நான் என் கணவர் பெரியண்ணனோடு செல்கிறேன் என்று கூறியபோது என்னைத் தலையில் கொட்டியும், அடித்தும் ஜாதி வெறியோடு நடந்து கொண்ட உதவி ஆய்வாளர் மீதும், அதற்கு உடந்தையாய் இருந்த ஆய்வாளர் ரூபி அவர்கள் மீதும் உரிய வழங்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறும்,

2.            5.8.2016 அன்று நான் வசித்து வந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கடத்திச் சென்று, சட்ட விரோதமாய் அடைத்து வைத்த எனது சித்தப்பா கார்த்தி, சம்பத் மற்றும் மூவர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும்,

3.            7.6.2016 அன்று என் கணவருடன் செல்வதாகக் கூறி எழுதிக் கொடுத்து புகாரை முடித்து வைத்த அதே பவானி காவல்துறை கண்காணிப்பாளரே, மீண்டும் 6.8.2016 அன்று ஜாதி வெறிக்கும், பண ஆசைக்கும் ஆட்பட்டு என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி பெற்றோரோடு செல்ல விரும்புவதாக சொல்ல வைத்து என் பெற்றோரிடம் வலுக்கட்டாயமாக ஒப்படைத்த பவானி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராமன் அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறும்,

4.            என் விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருக்கலைப்பு செய்த என் சித்தப்பா கார்த்தி, சித்தி ஜெய்சக்தி அம்மா செல்வி ஆகியோர் மீது உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும்,

5.            ஒரு ஜாதி வெறியரான துளசி மணியை, சீனியர் டாக்டர் என பொய்யாகக் கூறி ஏமாற்றியும், ஜாதி வெறி பேசி என்னை அடைத்து வைக்கக் காரணமான டாக்டர் சித்ரா தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,

6.            சட்டவிரோதமாக அடைத்து வைத்துத் துன்புறுத்திய துளசிமணி, பாலு, வெங்டேசன், சரவணன் ஆகியோர் மீது அதற்காகவும், சட்டப்பூர்வமாக நடந்த பதிவு திருமணத்தை சட்ட விரோதமாக பிரிக்க முயற்சித்ததற்காகவும் உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும்,

7.            8.10.2016 அன்று உயர்நீதிமன்றத்தில் எனக்கு வைரஸ் காய்ச்சல் என பொய்யாகக் கூறிய அம்மாபேட்டை, உதவி ஆய்வாளர் நடேசன், அதற்கு ஆதரவாக பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மீது உரிய வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறும்,

எனக்கும் என் கணவருக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் உயிருக்கும் உடமைக்கும், அமைதியாக வாழ்வதற்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் - என்று மனுவில் நவீனா கூறியுள்ளார்.

ஜாதி வெறியர்களுக்கு எதிராக கழகம் களமிறங்கியது

ஈரோட்டில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட கவுண்டர் ஜாதி பெண்களை கடத்தி சித்திரவதை செய்து அவர்கள் கணவரிடமிருந்து பிரிக்கும் ஜாதி வெறியர்களுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர். 2016 மே மாதம் நவீனா-பெரியண்ணன் இணையர் கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலை கழகத் தோழர்களை அணுகி தங்களுக்கு சுயமரியாதை முறையில் திருமணம் செய்து வைக்கக் காரினர். மேட்டூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்து கொண்டு, பிறகு மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11.7.2017 அன்று பதிவும் செய்யப்பட்டது.

•             பெரியண்ணன் தனது மனைவியை ஒரு கும்பல் கடத்திச் சென்றது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பி.யு.சி.எல். தலைவர் கண. குறிஞ்சி, கொளத்தூர் கழக ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈசுவரன், 6.8.2016 அன்று ஈரோடு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறையீடு செய்தனர்.

•             சித்திரவதை முகாமிலிருந்து தப்பி வந்த நவீனா அவரது கணவரோடு மேட்டூரில் கழகத் தலைவர் கொளத்தூர்  மணியை சந்தித்து நடந்த சம்பவங்களை விவரித்தனர்.

•             மேட்டூரில் செய்தியாளர் சந்திப்புக்கு கழகத்தினர் ஏற்பாடு செய்தனர். நவீனா, நடந்த சம்பவங்களை கூறினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணிஜாதி வெறி சித்திரவதை கும்பலுக்கு துணையாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் பொய் அறிக்கை தந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

•             27.8.2016 அன்று கழக வழக்கறிஞர் துரை. அருண், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அக்.3ஆம் தேதி நேரில் நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்.3 ஆம் தேதி நவீனாவுக்கு காய்ச்சல், எனவே வர இயலவில்லை என்று அம்மாபேட்டை உதவி ஆய்வாளர் நடேசன் நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்தார்.

•             உடல்நலமில்லை என்று உதவி ஆய்வாளர் கூறியது பொய். மருத்துவரும் பொய்யாக சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்த நேரத்தில்தான் நவீனாவும் வேறு நான்கு பெண்களும் சித்திரவதை முகாமிலிருந்து தப்பித்தனர்.

Pin It