man loneliness

இந்த இரவு முடியப் போகிறது
நான் என் தனிமையை
உனக்கு அனுப்பட்டுமாவென கேட்டேன்
வேண்டாம்
என் தனிமை கெட்டுவிடுமென்றாய்
ஒரு எழுதப்படாத கவிதையின் பின்னால்
போய்க்கொண்டிருந்த தனிமை மீது
ஒரு சொல் உன் உதட்டிலிருந்து நழுவி
ஒரு மழைத்துளியைப் போல் விழுந்தது
சூடான என் தனிமை மீது
சட்டென்று உள்ளிழுத்துக்கொண்ட
மழைத்துளியை தேடி நீ வந்தாய்
தொடங்கிற்று
எனக்கும் உனக்குமான
முடிவில்லாத உரையாடலின் முதல் வார்த்தை.