‘மைசூரின் புலி’ என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட திப்பு சுல்தானின் வாழ்வை திரைப்படமாக எடுக்க எண்ணி ரஜினிகாந்த் அவர்களை தயாரிப்பாளர் அணுகிய செய்தி பண்டோரா பெட்டியில் (Pandora Box) அடைக்கப்பட்ட துர்ஆவிகளைத் திறந்துவிட்டது போல், இந்துத்துவ அமைப்புகளும், ஆளும் பா.ஜ.கவும் தன்னுடைய எதிர்ப்புக் குரல்களின் வழியாக ரஜினிகாந்த் அவர்களை, இத்திரைப்படத்தில் நடிக்க மறுக்குமாறு மேலான அன்புக் கட்டளை விதித்துள்ளன.

tippusultanமுன்னொரு சமயம், பங்வான் எஸ்.திட்வானியின் திப்பு சுல்தானின் வாள் (The sword of Tippu sultan) எனும் புத்தகத்தினைத் தழுவி தொலைக்காட்சித் தொடரினைத் தயாரிக்க சஞ்சய் கான் தொடங்கியபோதும், கடந்த நடுவண் அரசு 2014 இல் திப்பு சுல்தானின் பிறந்த நாளினைக் கொண்டாட எத்தனித்த போதும், அவரின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவ முன்வரைவினை வடிவமைத்த போதும், இப்பெருமைக்குத் திப்பு சுல்தான் தகுதியானவரா என்ற சர்ச்சைகளும், கண்டனங்களும் வலுவாக எழுந்ததை நாம் அறிவோம். ஆங்கில ஏகாதிபத்தியத்தினைத் தீரமாக எதிர்த்த வேலு நாச்சியாருக்கு உதவியும், தன்னால் இயன்ற வரை ஆங்கிலப் படைகளை எதிர்த்துப் போராடிய 18 ஆம் நூற்றாண்டின் மன்னன் திப்பு சுல்தான் பற்றி இவ்வித சர்ச்சைகளுக்கு அடிப்படையாக முன் வைக்கப்படுவது இரு காரணங்கள். ஒன்று, தனக்கு எதிராகத் திரண்டெழுந்த சமூகங்களை அணுகிய விதம். இரண்டு, இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்த ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்ற கொடுங்கோலன் என்று வரலாற்று செய்திகளால் கட்டமைக்கப்பட்ட அவரின் பிம்பங்கள்.

காலனிய வரலாற்றியல் அறிஞர்கள், இஸ்லாமுக்கு மாற மறுத்த ஆயிரக்கணக்கான கேரள நாயர்களையும், தக்காண கர்நாடகத்தில் வாழ்ந்த கத்தோலிக்கர்களையும், கூர்கிஸ் மக்களையும் கொல்வதற்குக் காரணமாக அமைந்த மதப் பற்றாளன் என்றும், கன்னட பேரினவாதம் பேசக்கூடியவர்கள், உள்ளூர் பெயர்களை மாற்றிட, பெர்சிய மொழிப் பயன்பாட்டினை நிர்வாகக் காரியங்களுக்குப் பயன்படுத்தி கன்னட எதிர்ப்பாளராகப் பார்க்கக்கூடிய சூழல்தான் நிலவுகிறது. ஆனால் மார்க்சிய ஆய்வாளர்களோ, சுதந்திரப் போராட்டத்தில் முதன்மையான வீரராகவும், பல புதிய செயல்முறைகளுக்கு அடித்தளம் அமைந்த கட்டியங்காரனாகவும் திப்பு சுல்தானைப் பார்க்கின்றனர்.

இவ்விதமான பார்வை வேறுபாடுகளைக் கொண்டு, திப்பு சுல்தானை பாமர மக்களும் ஏனையோரும் எங்ஙனம் அணுகுவது என்பது நம் முன் உள்ள கேள்வி. இதற்கான விடையாக இருப்பது அவரின் செயல்பாடுகளும், கள சாட்சியங்களான திட்டங்களும் ஆகும். தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்/இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என்று போலி விளம்பரம் அல்லாமல், உண்மையாகவே “முதன் முறையாக” எனும் வார்த்தைக்கு நெருக்கமானவரும், சொந்தக்காரரும் திப்பு சுல்தான்தான். ஏனெனில் ஓட்டு அரசியல் கட்சிகள் போலல்லாமல், தன் பார்வையே முற்போக்கான முறையில் பல தளங்களில் அமைத்துக்கொண்டு செயல்பட்டவர். இஸ்லாம் மதக் கொள்கையின் பால் மீதுள்ள நாட்டத்திற்காக அல்லாமல், மக்களின் நலம் சார்ந்தும், அறம் சார்ந்தும் மது அருந்துதலை மாநிலந் தோறும் தடைசெய்ததுடன், பூரண மது ஒழிப்பு என்பது தன் மனதின் நெருக்கத்தில் உள்ள விடயம் என்பதை அவரின் வாக்கின் வழியே அறிய முடிகிறது.

இது தவிர ஆங்கில ஏகாதிபத்தியப் படைகளை எதிர்த்து முதன் முதலாக ஏவுகணைத் தாக்குதலை அறிமுகப்படுத்தியது, பட்டு வளர்ப்பினை மக்களிடம் அறிமுகப் படுத்தியது, ஆதிக்க சாதி மக்களான முட் (Mutts) சமூகம் முதலானவர்களிடம் இருந்து நிலங்களை பறித்து, தாழ்த்தப்பட்ட மக்களிடம் பகிர்ந்தளித்தது, லால் பாங்க் பல்லுயிர் பூங்காவினை நிறுவியது, காவேரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ள இடத்தில் அணை கட்டும் எண்ணத்தினைக் கொண்டிருந்தது எனப் பல்வேறு “முதன் முதலாக” எனும் வார்த்தைக்குத் தகுதியானவர்.

இட ஒதுக்கீட்டினை இல்லாமல் போகச் செய்யும் விதமாகப் பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்காலத்தில், அவ்வித நடைமுறை ஏதுமில்லாமலே பெரும்பான்மையான தாழ்த்தப்பட்டோரை படையில் பணியமர்த்தியவர். மராத்தியப் படைகள், சங்கராச்சாரியரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடத்தினைச் சூழ்ந்த சமயம் அப்படைகளைக் கொண்டு மீட்டு, சிதிலமடைந்த மடத்தினைப் பொருளாதார உதவிகளை வழங்கி, நிர்மாணம் செய்ய அரசாணைப் பத்திரம் மூலமாக உறுதிசெய்து வழிபாடு நடக்க உதவியவர். அது மட்டுமின்றி காஞ்சி கோயிலை நிறுவ 10000 தங்க நாணயங்களும், நஞ்சான் குடியில் உள்ள ஸ்ரீகந்தேஸ்வரா ஆலயத்துக்கு நிதி வழங்கியதும் மெல்கோட் (Melkote) கோவிலில் இருதரப்பு பூசாரிகளுக்கிடையே உண்டான பிரச்சினைக்குச் சமரசம் செய்தது, காலலேயில் உள்ள லஷ்மிகாந்தா கோவிலுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கியது தவிர மைசூரில் முதன் முதலாகத் தேவலாயத்தை நிறுவி அனைத்துச் சமயத்தினையும் சமமாக மதிப்புடன் நடத்தியது தெளிவாகிறது. இச்செயல்லபாடுகளே, “இந்துமத தர்மத்தின் காவலன் திப்பு சுல்தான்” என வரலாற்றிஞர் பி.ஏ. சலேடோர் (B.A. Saletore) அவர்களை கூறச் செய்தது எனில் உண்மையே.

பல வரலாற்றியல் அறிஞர்களும் பெரிதும் பதிவு செய்யாத செய்தியான, திப்பு சுல்தான் சூஃபிசத்தின் சிஷ்டி (Chisti) பாண்டே நவாஷ் (Bande Nawaz) பிரிவினைச் சார்ந்ததனாலேதான், இவ்விதமான முற்போக்கான செயல்களை நடைமுறைபடுத்திட முடிந்தது. மேலும், பிரெஞ்சு/அமெரிக்க புரட்சியின் வழி தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு ஆட்சியாளன் எப்போதும் பலருக்குப் புரியாத புதிராக விளங்குவான் என்பதைத் திப்புவின் வாழ்வும் பிரதிபலிக்கிறது.

அரசியல் நெருக்கடியினால் பல வரலாற்றியல் ஆய்வாளர்கள் திப்புவின் மக்களுக்கான செயல்களையும், உலகத்தோடு இயைந்த பொதுமைவாதி என்பதனைக் குறைத்து “வகுப்புவாத சிந்தனையாளன்” என்று வரலாற்றினைப் பதிவு செய்தாலும், இந்துத்துவ அமைப்புகள் புறம்பான செய்திகளால் அதிகாரப் பலத்தினால் திப்புவின் உண்மைகளை எத்தனைமுறை புதைக்க நேரிடினும், வரலாற்றின் ஏடுகளிலும் மக்களின் வழக்காறுகளிலும் இன்று மட்டுமல்லாமல் வருங்கால ஆட்சியாளருக்கும் பாடமாகத் திப்பு சுல்தானின் வாழ்க்கை திகழும் என்பது திண்ணம்.

ஆங்கில மூலம் - பேராசிரியர் முஷாபர் ஆசாதி, அரசியல் அறிவியல் துறை, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்.

மொழிபெயர்ப்பு – விடுதலை பழனிச்சாமி, உதவிப் பேராசிரியர், காட்சித் தொடர்பியல் துறை, திரு ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டான்குளத்தூர், காஞ்சிபுரம்

Pin It