கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி)
இன்றைக்கு ‘பாரதமாதா கி ஜே’ எனும் கோசம் போடும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக் கும்பலை பார்த்துக் கேட்கின்றேன், இந்த பாரதமாதா அடிமை சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தபோது அதை உடைப்பதற்கு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட போரிட்டவர்களில் எத்தனை பேர் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக்கும்பல்கள்? ஒருவர் கூட இல்லையே!
விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், பார்ப்பனக் கும்பல் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணமான பார்ப்பனீயம் ஒடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது நசுக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேட்கிறோம். இந்த கும்பலுக்குதான் இன்றைக்கு தேசபக்தி பீறிட்டு கொண்டு வருகிறது.
விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்தது இந்தப் பார்ப்பனக் கூட்டம் தான். வாஜ்பாய் உள்ளிட்டவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்கள். ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போது உலக வரலாற்றை எழுதினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கிய சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். “என்னை விடுவித்தால் வெள்ளைகார அரசிற்கு முழு ஒத்துழைப்போடு இருப்பேன். உங்களுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களை மனம் திருத்தி உங்களுக்கு ஆதரவாளராக மாற்றி தருவேன்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்த துரோகிகள் தான், இந்த பார்ப்பனக் கும்பல்.
நாட்டைக் காட்டி கொடுத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இன்றைக்கு ஆட்சியில் வந்து அமர்ந்து கொண்டு ‘பாரத்மாதாக் கி ஜெ’ என கூச்சலிடுகின்றனர். கோழைத்தனமாக மன்னிப்பு கடிதம் எழுதிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் அவர்களை வீரசாவாக்கார் என தூக்கி பிடிக்கிறது பார்ப்பனீயம். இந்த நாட்டில் கொடூரமான வன்முறை சித்தாந்தம் எது என்று சொன்னால். அது பார்ப்பனீய சித்தாந்தம்தான். அதைத்தான் இந்த மண்ணில் மீண்டும் நிலை நிறுத்த பா.ஜ.க. முயல்கிறது. மதத்தின் பெயரால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவைக் கூட கொடூரமாக கொலை செய்து ஆட்டம் போட்ட, மனித நேயமற்ற வன்முறைக் கூட்டம் தான் பார்ப்பனீயம். இதை நாம் வேரோடு சாய்த்தாக வேண்டும்.
முகலாயர்கள் நீண்ட வருடங்கள் இந்த நாட்டை ஆண்டனர். அந்த ஆட்சி சரியான ஆட்சியா? என்பதில் எங்களுக்குப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அந்த ஆட்சியில்கூட இந்து முஸ்லீம்கள் இடையில் மதக் கலவரம் ஏற்படவில்லை. இந்து முஸ்லீம் மன்னர்களுக்கு இடையே பல போர்கள் நடைபெற்றிருக்கும். அது வெறும் மண்ணிற்கான போரே தவிர மதத்திற்கான போர் அல்ல.
சமூக நீதி சிந்தனையாளரான ஜோதிபாபுலே மராட்டிய மண்ணில் பார்ப்பனியத்திற்கு எதிராக மிகப்பெரிய பிரச் சாரங்களை மேற்கொண்டார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனீயம்தான் திட்டமிட்டு இந்து முஸ்லீம் இடையே கலவரத்தை தூண்டினர். 1893ல் புனேவில் நடந்தது தான் முதல் கலவரமாகும். அதற்கு முன்பு இந்து முஸ்லீம் இடையே எந்த கலவரமும் நடைபெறவில்லை. இது வரலாறு.
‘சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை’ என முழங்கிய பால கங்காதார திலகர் எனும் பார்ப்பனர்தான் ‘விநாயகர் ஊர்வலம்’ என்கிற பெயரில் ஒரு கலவர ஊர்வலத்தை சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடங்கி வைத்தக் கொடூரன். இன்றைக்கு வரைக்கும் ‘விநாயகர் ஊர்வலம்’ என்கிற பெயரில் இந்த நாட்டில் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக விஷ விதைகளை விதைத்து வரு கின்றன. இதற்கு பின்புலமாக இருந்து இயக்குவது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் மதவெறிக் கும்பல். இதை தான் நாம் அம்பலப்படுத்துகிறோம்.
சட்டம் இயற்றும் சபையில், ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்’ என்கிற குரல் எழுந்தபோது இந்த பார்ப்பன திலகர் தான் சொன்னார் - ‘சூத்திரர்கள் பஞ்சமர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர அதை இயற்றும் சபைக்கு வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சொன்ன யோக்கியர் தான் திலகர் . இவர்தான் ‘இந்துக்களின் ஒற்றுமையைப் பேசினார்’ என்று இன்று பார்ப்பனர் கூட்டம் சொல்கிறது. இதை மிகுந்த வருத்தத்துடன் புரட்சியாளர் அம்பேத்கர் பதிவு செய்தார்.
‘வர்ணாசிரம சனாதான தர்மத்தை தூக்கிப் பிடித்தவர் தான் பாலகங்காதர திலகர்’ என்ற உண்மையை நாம் உரக்க சொல்ல வேண்டும். அதுபோல் ‘இந்துத்வா என்பதை உருவாக்கியவர் வீரசாவர்க்கர்’ என்று பெருமை பேசு கிறார்கள். அவர் வீரசாவர்க்கர் இல்லை மாறாக கோழை சாவார்க்கர் வெறும் மன்னிப்புக் கடிதமாக எழுதி வெள்ளையர்க்கு அடிமையாகப் போனவர்.
1925இல் ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு’ டாக்டர் மூஞ்சே உள்ளிட்ட 5 டாக்டர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. 1931இல் இலண்டனில் வட்ட மேஜை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க புரட்சியாளர் அம்பேத்கர் செல்கிறார். முகமது அலி ஜின்னா, காந்தி உள்ளிட்டோரும் செல்கின்றனர். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். டாக்டர் மூஞ்சே தலைமையில் ஒரு பார்ப்பனக் கூட்டமும் சென்றது.
மாநாடு முடிந்தவுடன் அனைவரும் நாடு திரும்பி விட்டனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூஞ்சேவும், அவருடன் சென்ற பார்ப்பனக் கூட்டமும், லண்டனிலிருந்து இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தனர். மனிதகுல விரோதியான முசோலினியிடம் பாசிச பாலபாடத்தை இவர்கள் கற்றுக்கொண்டு நாடு திரும்பினர் இது வரலாறு; யாராலும் மறுக்கமுடியாது. நாடு திரும்பிய டாக்டர் மூஞ்சே மராட்டிய மாநிலத்தில் உள்ள போல்தாரா என்ற பகுதியில் இந்து பாசிச வெறியை பயிற்சியளிப்பதற்கு ஒரு இராணுவக் கல்லூரியைத் தொடங்கினார்.
பின்னர் 1948இல் காந்தி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் நாதுராம் கோட்சே உட்பட 8 பேர்கள் அனைவரும் சித்பவன் பார்ப்பனர்கள். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முக்கியமாக மூஞ்சேவின் இராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள். எனவே அன்றுமுதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இரண்டுமுறை தவிர்த்து இப்போதுள்ள மோகன் பகவத் உள்ளிட்ட அனைவரும் பார்ப்பனர்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.
இந்த நாட்டின் 2004 முதல் 2008 வரை பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. பல அப்பாவிகள் உயிர் இழந்தனர். உடனே பார்ப்பனக் கும்பல் குண்டுவெடிப்பை நிகழத்தியது இஸ்லாமியர்கள் தான் என்று பழியைத் தூக்கி போட்டனர். மாலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா ரயில் உள்ளிட்ட 16 இடங்களில் வெடித்த குண்டுகளின் பின்னனியில் இருந்தது யார் என்று பார்த்தால். அபினவ் பாரத் என்கிற அமைப்பு வி.டி.சாவர்க்கரின் உறவினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு இருந்தது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் தான் இந்தகைய குண்டு வெடிப்புகளை நடத்தியது. இதை நாம் சொல்லவில்லை. மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படையின் தலைவரான ஒரு நேர்மையான அதிகாரியான ஹேமந்த் கார்கரேதான் நாட்டிற்கு உண்மையைச் சொன்னார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக சுவாமி அசிமானந்தா மற்றும் ஒரு பெண் சாமியார் உள்ளிட்ட மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களது சாயத்தை வெளுத்து உண்மையை கண்டுபிடித்து சொன்னார் என்கிற ஒரே காரணத்திற்காக நேர்மையான அதிகாரியான ஹேமந்த் கார்கரேவை சுட்டுக் கொண்றது பார்ப்பன மதவெறிக் கூட்டம். குண்டு வெடிப்பில் இந்திய இராணுவத்தில் பணியாற்றி புரோகித் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டைக் காக்கும் இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை அம்பலபடுத்தியது இச்சம்பவம். அவரது லேப்டாப்பை கைப்பற்றி விசாரித்தபோது அதில் உள்ள செய்திகள் பயங்கரமான அதிர்ச்சிகரமானவை. எதிர் காலத்தை குறித்து ஒரு அச்சத்தை உருவாக்கக் கூடியவை.
அதில் இந்திய தேசியக் கொடியை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காவிக் கொடிதான் எங்களுக்கு தேசியக் கொடி என்றும், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிவிட்டு இந்துக்களுக்கான ஒரு புதிய அரசியல் அமைப்பும் சட்டமும் இயற்றவேண்டும் போன்ற பல்வேறு தகவல்கள் பதிவாகி இருந்தது. அந்த இராணுவ அதிகாரி புரோகித் உத்தரவுபடிதான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லீம்கள் மீது போட்டு, அப்பாவிகள் கைது செய்யபட்டனர்.
மேலும் ஆர்.எஸ்.எஸ். இராணுவ அதிகாரி புரோகித் கூறும்போது உலக நாடுகளின் ஆதரவை நான் வாங்கித் தருவேன் என்றும் இங்கு இராணுவ ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார். மேலும் இஸ்ரேல் மொசாத் அமைப்புடன் கூட்டுசேர்ந்து இந்த பார்ப்பன கூட்டம் நிகழ்த்தியக் கொடூரம்தான் இந்த குண்டு வெடிப்புகள். உண்மையை அம்பலபடுத்திய ஹேமந்த் கர்கரேயை கொலை செய்துவிட்டு அதை பாகிஸ்தான். தீவிரவாதிகள் செய்தனர் என திசை திருப்பிய கூட்டம் தான் பார்ப்பனர் கூட்டம்.
இந்து ராஜ்ஜியத்தை பார்ப்பன ராஜ்ஜியத்தை கொண்டு வர மிகப்பெரிய சதிதிட்டம் இன்றைக்கு நடந்துவருகிறது. அதற்கு மோடி ஆட்சி முயற்சிக்கிறது. எனவே ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் ஒரே எதிரி - பார்ப்பனர்கள் மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இடஒதுக்கீடு கூடாது என பீகார் தேர்தல் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சொன்னார்.
அந்த தேர்தலில் பீகார் மக்கள் மிக பெரிய சம்மட்டி அடியை பாஜகவுக்கு கொடுத்து பாடம் புகட்டியது. அந்த நம்பிக்கை எங்களுக்குத் தந்துள்ளது. ஆனால், பீகார் தோல்விக்குப் பிறகு இதே மோகன்பகவத் கூறுகிறார், ‘சமூதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு நீடிக்கும்’ என்கிறார். இது தான் பார்ப்பன சூழ்ச்சி, நடிப்பு நரித்தனம். மதுரையில் அமித்சாவை கொண்டு வரச் செய்து தேவேந்திர குலமக்கள் வாயாலேயே எங்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை. இடஒதுக்கீட்டால்தான் எங்கள் மீது சாதி தீண்டாமை திணிக்கப்பட்டுள்ளது என்று பெரியார் பிறந்த மண்ணிலேயே இட ஒதுக்கீடைக் குழிதோண்டி புதைக்க முயற்சி செய்கிறது பார்ப்பனக் கூட்டம்; அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
பெரியாரின் போர் முறைகளைப் பற்றி அண்ணா ஒருமுறை சொல்லும்போது பெரியாரின் போராட்டங்கள் சல்லிவேரை வெட்டுவது அல்ல அதன் ஆணிவேரை வெட்டுவது, மூல பலத்தையே அழித்து ஒழிப்பது எனக் கூறினார். பெரியாரின் போர்முறைகளை இன்றைக்கு வட மாநிலங்களில் உள்ள மக்களும் பயிற்சி செய்து பின்பற்ற தொடங்கிவிட்டார்கள்.
நம்து தலைவர் மணிஅண்ணன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் ‘மெயின்சுவிட்சை ஆப்’ செய்வது ஆகும். அதை நாம் செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் மூல பலத்தை அழித்தொழிக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
திப்பு சுல்தானை இப்போது மதவெறியன் என்று சொல்கிறார்கள். திப்பு சுல்தான் மதவெறியனா? இல்லை. திப்பு சுல்தான் பிறந்த நாளை நவம்பர் 20 அன்று கொண்டாடுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்தபோது இப்பார்ப்பனர் கூட்டம் திப்புசுல்தான் மதவெறியன் என்ற பொய்யான பிரச்சாரத்தைத் திட்டமிட்டு பரப்பி கலவரத்தை தூண்டி அக்கலவரத்தில் இருவர் படுகொலையும் செய்யப் பட்டனர். சமீபத்தில் திப்புசுல்தான் படத்தில் ரஜினி நடிக்க போகிறார் என்றவுடன் இங்குள்ள ராமகோபாலனும், இல.கணேசனும் துள்ளி குதிக்கிறார்கள். இப்போது ரஜினி நடிக்கவில்லை. அதற்கு பரிசாகத்தான் மோடி அரசு ரஜினிக்கு பத்மபூஷன் விருது கொடுத்துள்ளது.
திப்பு சுல்தான் மதவெறியர் இல்லை என்பதற்கு ஒரே உதாரணம், ஶ்ரீரங்கப்பட்டிணத்தில் பள்ளிவாசலும், கோவிலும் அருகருகிலேயே உள்ளது. திப்பு ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தன. திப்பு ஒரு மதசார்பற்ற மன்னன். மசூதிகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் 10 சதவீதம் தான் நிதி ஒதுக்கி மீதம் 90 சதவீத நிதியைக் கோவிலுக்கு வழங்கினார். அந்த நிதியைச் சுரண்டித் தின்று கொழுத்த பார்ப்பனக் கூட்டம் பின்னாளில் அவரைக் காட்டியும் கொடுத்தது.
உழைக்காமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்டம் போட்டார். உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என சட்டம் போட்ட முதல் மன்னர் திப்பு சுல்தான்தான். தலித் மக்கள் நிலத்தைப் பார்ப்பனக் கூட்டம் அபகரித்தபோது அதைத் தடுத்து அந்த தலித் மக்களுக்கு நிலங்களைப் பெற்று தந்த மாமன்னர் திப்பு சுல்தான். ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்கள் மேலாடை அணிய தடை என்று சொன்ன பார்ப்பன நம்பூதிரிகளுக்கு எதிராக கொடுமைகளை எதிர்த்து உத்தரவு போட்டார் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான் நினைத்திருந்தால் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து நிறைய சுகங்களைப் பெற்றிருப்பார். மாறாக இந்த நாட்டின் மீது பற்று கொண்டு வெள்ளை ஏகாதி பத்தியத்தை எதிர்த்து வீரமுடன் போராடியவரை இந்த பார்ப்பனக் கூட்டம் தேச துரோகி என்றும் மதவெறியர் என வும் பொய்யான அவதூறு பிரச்சாரத்தை செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைக் கூட, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேர் வைக்கும் போது பாவாடை, வள்ளிக்கிழங்கு, மண்ணாங்கட்டி என பெயர் வைத்து அம்மக்களை கேவலப்படுத்தியது பார்ப்பனீயம். ஆனால் பெரியார் ரஷ்யா போன்ற புரட்சிகர பெயர்களைக் குழந்தை களுக்கு வைத்து அழகு பார்தார். அவர்தான் பெரியார்.
காஞ்சி மக்கள் மன்ற நிகழச்சியை இணையத்தில் பார்த்தபோது என் கண்களில் நீர் வரச் செய்த சம்பவம் ஒன்று நடந்தது. அங்கு ஒரு குழந்தைக்குக் கொளத்தூர் மணி அண்ணன் அவர்கள் பெயர் வைத்தபோது என்ன பெயர் வைத்தார் தெரியுமா? தோழர்களே, காலமெல்லாம் பார்ப்பனர்களின் கொடுமைக்கு எதிராக போர்வாள் சுழற்றிய மாவீரன் திப்புசுல்தான் பெயரை வைத்தார்.
எனவே, பார்ப்பனர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் வாழ்நாளில் இனியும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். பார்ப்பனரின் கொடுமைகளுக்கு அடிபணியமாட்டோம். அனைத்து மக்களையும் திரட்டி பார்ப்பனியத்திற்கு எதிராக மிகப்பெரிய பேராட்டங்களை முன்எடுப்போம், வெற்றி பெறுவோம் எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.
(நிறைவு)
தொகுப்பு : மன்னை இரா.காளிதாசு