இன்று ஏற்பின் நலனே சிலநாள்
சென்று ஏற்பினும் நலனே ஆயினும்
அச்சில நாளின் கூடுதல் உமிழ்வின்
நச்சுக்கு விலையும் உண்டே; பின்னே
பார்க்கலாம் சமதர்மம் ஏற்பதை என்று
சோர்ந்தே இருந்தால் புவிவெப்ப உயர்வும்
சூழ்நிலைக் கேடும் திருப்ப வியலா
ஆழ்நிலை செல்லும் என்பதால் கால
விரயம் செய்யாது சமதர்மம் ஏற்பீர்

((முதலாளித்துவ உற்பத்தி முறை புகுத்தியும், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டும் உள்ள புவி வெப்ப உயர்வினால் உலகம் அழியாது காப்பதற்காகச்) சோஷலிச அமைப்பை இன்றே ஏற்றுக் கொள்வது நல்லது. சில காலம் சென்று ஏற்றாலும் நல்லது தான்; ஆனால் அந்த சில நாட்களில் உமிழப்பட்ட நச்சுக் கழிவினால் ஏற்பட்ட கெடுதல்களிலிருந்து மீள்வதற்கான விலையைக் கொடுக்க நேரிடும். பின்னே பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பலாக இருந்து விட்டால், புவி வெப்ப உயர்வும், சூழ்நிலைக் கேடும் மீட்க முடியாத ஆழத்தில் இவ்வுலகை அழிவு நிலைக்கு இட்டுச் சென்று விடும்.)

- இராமியா