கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

modi with mukesh ambaniமனிதமுள்ள அனைவரையும் உலுக்கிய நிகழ்வுகள் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்மிகு சாவுப் பயணம்.

நடந்து சென்ற தொழிலாளி இறந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தண்டவாளத்தில் தூங்கிய தொழிலாளர்கள் நசுக்கப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் தொடர்வண்டியில் அரசின் பொறுப்பில் தனது பிஞ்சுக் குழந்தையோடு பயணம் செய்த புலம்பெயர் தாய் உணவின்றி உயிர் துறந்துள்ளார். தாய் பிணமாகக் கிடப்பதை அறியாத அந்த பிஞ்சுக் குழந்தை பிணத்தோடு உறவாடும் கோரக் காட்சியை என்னவென்பது?

ஹிட்லர் வதை முகாமில் அடைத்துக் கொன்றதற்கும், தொழிலாளர்களை தொடர்வண்டியில் ஏற்றி உணவின்றி, தண்ணீரின்றி சாகடிப்பதற்கும் என்ன வேறுபாடு?

பல்லாயிரக்கணக்கான தொடர்வண்டிகளை அன்றாடம் துல்லியமாக இயக்கிய தொடர்வண்டித் துறை புலம்பெயர் தொழிலாளர்களை மட்டும் திசை தெரியாமல் அலைய விட்டது ஏன்?

இந்திய ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறது என்பது இந்தத் துயர நிகழ்வுகளால் உலகின் கவனத்திற்கு வந்துள்ளது.

உருவான இந்தியா யாருக்கான இந்தியா?

***

இந்தியா உருவாகிறபோதே அது எந்த வர்க்கத்தின், எந்த சாதிகளின் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்பதில் தெளிவாகவே இருந்தது.

காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்தது. காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வழி நடத்தியவர்கள் உயர்சாதியினராக இருந்த பார்ப்பனர்கள், சத்திரிய வைசியப் பிரிவினர்களான மார்வாடி, சேட் சமூகத்தைச் சார்ந்த வட்டிக் கடைக்காரர்களும், பெரும் நிலக்கிழார்களுமேயாகும்.

சீனச் சந்தையில் அபினும், உலகச் சந்தையில் ஆயுத வணிகமும் செய்த ஜாம்ஷெட்ஜி டாடா குடும்பம், பிர்லா, கோத்ரேஜ், ஜுஜுபாய், தாதாபாய் நௌரோஜி போன்றவர்களே காங்கிரசைப் பின்னிருந்து இயக்கினர்.

காந்தியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் வெகுமக்கள் கட்சியாக மாற்றம் கண்டது. இருந்தபோதும் காங்கிரசின் வர்க்க நலன் அன்று உருவாகி வளர்ந்து வந்த தரகு முதலாளிகள், ஆதிக்க சாதி நிலக்கிழார்களின் நலனைப் பாதுகாப்பது அன்றி வேறாக இல்லை. 

காந்தி, அகிம்சை என்ற பெயரில் வெள்ளை ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆண்டு வந்த அரசுக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்து இந்த முதலாளிகளிடமும், ஆதிக்க சாதி நிலக்கிழார்களிடமும் ஒப்படைப்பதையே தனது இலக்காகக் கொண்டிருந்தார்.

மேலும் காந்தியார் தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறிக் கொண்டு கையில் கீதையுடனும், வாயில் இராமநாம உச்சரிப்புடனுமே இருந்து வந்தார்.

காங்கிரஸ் முன்வைத்த இந்திய தேசியம் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரமாற்றுகிற தேசிய முதலாளிகளின் மொழிவழித் தேசியம் அல்ல!.

தேசிய அரசுகள் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் ஆற்றுகிறது என தோழர் இலெனின் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்திய தேசியம் என்பது இந்து மதத்தையும், சமக்கிருத மயமாக்கப்பட்ட இந்தி மொழியையும் அடிப்படையாக உருவாக்கப்பட்டது என மார்க்சிய ஆய்வாளர்களான எஸ்.வி.இராஜதுரை, கார்முகில் போன்றோர் தமது ஆய்வு நூல்களில் முன்வைத்துள்ளனர்.

இந்திய தேசியம் என்பது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மை உரிமையை மறுக்கிற இந்துத்துவ அடிப்படை கொண்ட 'பார்ப்பனிய (இந்துத்துவ) தேசியமே' ஆகும்.

இந்து மதத்தைத் தாங்கி நிற்கும் அனைத்து ஆதார நூல்களும் சாதிய சமூக அமைப்பை நியாயப்படுத்துகிறது. சமக்கிருதத்தின் புனிதத்தைப் போதிக்கிறது.

கங்கைச் சமவெளியில் ஆரியவர்த்தம் என்னும் பகுதியில் ஆட்சி செய்த ஆரிய இனக்குழுவின் தலைவனின் பெயரை அடியொற்றியே பாரதம் எனப் பெயர் சூட்ட இந்துத்துவ சக்திகள் போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். பாரதம் என்கிற இந்தியா என்றே அரசியல் சாசனத்தில் முன்வைக்கப் பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கம் ஒன்றேதான்.

காங்கிரஸ், பாஜகவின் பின்னாலுள்ள சக்திகள் சாதிய நில உடைமைச் சக்திகளும், ஏகாதிபத்திய நலன் பேணும் தேசிய இனங்களின் உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதி முதலாளிகளும் தான்.

ஒரு ஜனநாயக இந்தியாவையும் தொடர்ச்சியாக ஒரு சோசலிச இந்தியாவையும் கடந்து கம்யூனிச சமுதாய இலக்கோடு தனது வேலைத் திட்டத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் எல்லாப் பிரிவுகளுமே கொண்டிருக்கின்றன.

பெரியார், அம்பேத்கர் வழிவந்த இயக்கங்கள் சாதி ஆதிக்கமற்ற சமூக நீதியோடு இணைந்த புதிய சமூகத்திற்காகப் பாடாற்றினர்.

ஒப்பீட்டளவில் பெரியார், அம்பேத்கர் இயக்கங்களின் நீண்ட நெடிய போராட்டத்தில் சாதிய சமூக அமைப்பில் இட ஒதுக்கீடு மூலம் ஒரு நெகிழ்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பொதுவுடைமை இயக்கம் தொடக்க முதலே அளப்பரிய தியாகங்களைச் செய்தே முன்னேறியுள்ளது. வரலாறு, பண்பாட்டுத் துறைகளில் புதிய பார்வையைக் கொண்டு வந்த மதிப்புமிக்க அறிவத் துறையை உருவாக்கியது.

எல்லா சாதி, வர்க்கப் பிரிவுகளிலிருந்தும் பல்துறை அறிஞர்களையும் செயலூக்கம் கொண்ட களப் போராளிகளையும் வார்த்தெடுத்தது. தெலங்கானாவும், நக்சல்பாரியும் பெரும் திருப்புமுனைகளையே உருவாக்கின.

சாதிய நில உடைமை ஆதிக்கத்தின் மீது பலத்த சம்மட்டி அடியை பொதுவுடைமை இயக்கம் கொடுத்துள்ளது. இருந்த போதும் இந்தியாவின் தனிச் சிறப்பான பார்ப்பனியத் தத்துவத்தை, அரசியலை, பண்பாட்டை வீழ்த்தும் ஓர் அரசியல் மாற்றத்தை உருவாக்க இயலவில்லை. 

முப்பெரும் இயக்கங்களும் (பொதுவுடைமை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம், பெரியாரிய இயக்கம்) பல அரிய களப்பணிகளை முன்னெடுத்ததால் ஒப்பீட்டளவில் தமிழகம், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை பெற்றன.

மாநிலங்களுக்கு இருந்த தனி அதிகாரத்தின் காரணமாக தமிழகம் வகுத்துச் செயல்படுத்திய கல்வி, தொழில் கொள்கைகள் தமிழகத்தை இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாற்ற உதவியது.

திராவிட இயக்கமும், அம்பேத்கர் இயக்கமும் சமூக நீதிக் கோட்பாட்டை பயன்படுத்தி சாதியப் படிநிலை அடுக்குகளில் சூத்திர, பஞ்சமப் பிரிவில் இருந்தவர்களை முன் கொண்டு வந்ததால் ஒரு புதிய சமூக சேர்மானம் உருவாகியுள்ளது.

பார்ப்பனிய சித்தாந்தத்தில் கட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் பாஜகவை வழிநடத்துகிறது. இரண்டாவது முறை (2019) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள பாஜக ஒரு பார்ப்பனிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் முயற்சியில் முனைந்து ஈடுபட்டுள்ளது.

காசுமீரைக் காலடியில் போட்டு மிதித்தது எடுப்பான சான்று.

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மைய அதிகாரத்தை நிறுவி வருகிறது.

அனைத்து நிதி ஆதாரங்களையும் பறித்துக் கொண்டு மாநிலங்களை சாராயம் விற்கும் முகவர்களாக மாற்றி வருகிறது.

சிறுபான்மை மக்களையும், இந்தி பேசாத தேசிய இன மக்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றி வருகிறது.

உலக நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தைக் கட்டமைப்பதிலும் பார்ப்பனிய சமூக அமைப்பைப் பாதுகாப்பதிலும் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்ததை பாஜக முடித்து வைக்கிறது.

இயல்பிலேயே திராவிட இயக்கமும், அம்பேத்கரிய இயக்கமும் ஒரு முதலாளிய ஜனநாயக இயக்கங்களாக இருப்பதனால் அது தேவையை ஒட்டி காங்கிரஸ் கட்சியுடனும் பாஜகவுடனும் உடன்பாடு கொள்வது வியப்பிற்குரியது அன்று.

திமுக, அதிமுக கட்சிகளில் பெரிய கார்பரேட் நிறுவனங்களின் அதிபர்களாக பலர் வளர்ந்துள்ளனர். இயல்பிலேயே இந்தப் புதிய முதலாளிகள் பார்ப்பனிய சார்பாளர்களாகவும், ஏகாதிபத்திய தாசர்களாகவும் செயல்படுகின்றனர்.

இந்த கார்பரேட் முதலாளிகளின் செல்வாக்கு அதிகரிக்க, அதிகரிக்க இந்த (திமுக, அதிமுக) கட்சிகளின் சமரச சரணடைவுப் போக்கும் அதிகரித்து வருகிறது.

நமது கேள்வி

கம்யூனிஸ்டுகளின் வரலாற்றுக் கடமை குறிப்பிட்ட நாட்டின் சமூக அமைப்பை ஜனநாயகப்படுத்தி சோசலிசத்திற்கும் தொடர்ச்சியாக கம்யூனிசத்திற்கும் முன்கொண்டு செல்வதேயாகும்.

இந்திய சமூகம் என்பது ஓர் அரசு சமூகமே தவிர இது ஒரு தேசிய சமூகம் அல்ல.

தேசிய சமூகம் என்றால் அது ஒரு பொது மொழியையும், வரலாற்று வழியில் அமைந்த நில எல்லைகளையும், ஒத்த பண்பாட்டுக் கூறுகளையும், பொதுவான பொருளாதார வாழ்க்கையையும் கொண்டிருக்கும்.

இந்திய ஆளும் வர்க்கமாக உள்ள பார்ப்பனிய முதலாளிகளும், ஆதிக்க சாதி நிலக்கிழார்களும் தமது நலனுக்கு உகந்த வகையில் காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்தியும், பின்னர் பாஜகவைப் பயன்படுத்தியும் வருகின்றனர். தனக்கான பார்ப்பனிய முதலாளிய அரசியல், பொருளாதார பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டனர்.

கம்யூனிஸ்டுகள் பார்வையாளர்களாக உள்ள கெடுவாய்ப்பில் இருக்கின்றோமா என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்தியாவிற்கான பாதை பாராளுமன்றப் பாதை என ஒரு பிரிவினரும், இந்தியாவிற்கான பாதை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மாற்றாக சோவியத் ஆட்சி வடிவத்தை இலக்காகக் கொண்ட ஆயுதப் போராட்டப் பாதை என ஒரு பிரிவினரும், தேசிய இன விடுதலைப் புரட்சியின் மூலமே ஜனநாயகத்தையும் தொடர்ச்சியாக சோசலிசத்தையும் அடைய முடியும் என ஒரு பிரிவினரும் இயங்கி வருகின்றனர்.

இதில் எந்தப் பிரிவுமே அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் சக்தியாக மாறாமல் ஏன் தேங்கிப் போய் உள்ளோம்?

ஆய்விற்குரிய அம்சங்கள் எனக் கருதுவது

1) இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் தேக்கம் நிலவுவதைக் கற்றுணர வேண்டும்.

2) நக்சல்பாரி இயக்கம் முன்வைத்த சரியான, தவறான கோட்பாடுகளை விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் அணுக முன் வர வேண்டும்.

3) இந்திய சமூகம் பற்றிய மீளாய்வில் அது ஒரு பார்ப்பனிய சமூகம் என்பதையும், இந்தியா என்பது ஒரு தேசம் அல்ல, இந்தியா என்பது முதலாளிய பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்ற மார்க்சிய ஆய்வு பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டும். 

4) பார்ப்பனியம் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமுறை என்ற இரண்டு முகங்கொண்டது என்பது பற்றி வெளிப்படையான கருத்தாடல்கள் நடைபெற வேண்டும். 

5) பெரியார், அம்பேத்கர் என்ற இருபெரும் ஆளுமைகளின் வரலாற்றுப் பாத்திரத்தை கம்யூனிஸ்டுகள் அங்கீகரித்து சாதி ஒழிப்பு, தேசிய இன விடுதலை இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பது பற்றி விவாதிக்க வேண்டும். 

நிறைவாக:

வரலாறு நம் முன் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

மனித குலத்தையே அழித்து நாசமாக்கும் உலக வல்லாதிக்க மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதா? ஒதுங்கிக் கொள்வதா?

மீண்டும் மநுவின் அதிகாரத்தை நிறுவத் துடிக்கும் பார்ப்பனிய பாஜகவின் பாசிசத்தை வீழ்த்த எழுவதா? சுருண்டு மடிவதா?

திய ஆய்வுகளையும் புதிய முடிவுகளையும் நோக்கி முன்னேறுவதா? சதுப்பு நில புதை சேற்றில் அழுந்தியே கிடப்பதா?

என்ற கேள்விகளுக்கு விடை காண கடந்து வந்த பாதையை மீளாய்வு செய்வோம்.

- கி.வே.பொன்னையன்