கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

karunchattai meeting trichy 651அற்ப வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கும், லட்சிய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசம், அற்ப வாழ்க்கை வாழும் மனிதர்கள் ஒரு சபிக்கப்பட்ட பிணமாய் அடக்கம் செய்யப்பட்டு அடையாளமற்று அழிந்து போகின்றார்கள். ஆனால் தன்னுடைய சகமனிதனின் வாழ்க்கையை உயர்த்த, தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து, லட்சிய வாழ்க்கை வாழும் மனிதர்கள் இறந்தும் கொண்டாடப் படுகின்றார்கள். உண்மையில் மரணமற்ற பெருவாழ்வு என்பதற்கு உண்மையான அர்த்தம் இதுதான். அவர்களின் கருத்துக்கள் பெருமழையாய், தீராத வானமாய், காலமாய் இந்தச் சமூகத்தை ஆகர்சித்துக் கொண்டே இருக்கின்றது. வரலாற்றில் தனிமனிதர்களின் பாத்திரம் என்பது உண்மையில் அற்பமானது என்றாலும், அந்தத் தனிமனிதர்களில் சிலர் சில நேரம் வரலாற்றின் கிரீடங்களில் வைரங்களாய் இடம் பெற்று விடுகின்றார்கள். வரலாற்று நிர்பந்தம் தான் நமக்கு மார்க்சையும், ஏங்கெல்சையும், லெனினையும், மாவோவையும், ஸ்டாலினையும் உருவாக்கித் தந்தது. ஆனால் சமூகத்தின் புறச்சூழ்நிலை இந்த உணர்வை எல்லா மனிதர்களிடமும் ஏற்படுத்தி விடுவதில்லை. பலர் அற்பவாதிகளாகவும், பிழைப்புவாதிகளாகவும், புல்லுருவிகளாகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது சிலர் மட்டுமே தங்களுடைய எல்லா மகிழ்ச்சியையும் தியாகம் செய்துவிட்டு, போராட்டத்தையே மகிழ்ச்சியாக, வாழ்க்கையாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களை அப்படி ஏற்றுக் கொள்ள நிர்பந்தித்தது எது? அதுதான் அவர்களிடம் நிறைந்து வழிந்த மனிதம். சாமானிய மனிதர்கள் மேல் அவர்கள் கொண்டிருந்த நேயம்தான் அவர்களை உந்தித் தள்ளியது, உற்சாகப்படுத்தியது, ஓய்வு இல்லாமல் இந்த மனித சமூகத்திற்காக தன்னை உருக்குலைய வைத்தது.

அப்படி இந்த மனித சமூகத்தின் விடுதலைக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்த, உலகின் மிகச் சில மனிதர்களில் மக்களால் இன்றளவும் போற்றப்படும் மனிதராய் விளங்குகின்றார் பெரியார் அவர்கள். பெரியாரை முழுவதும் படிக்காத சோம்பேறிகளும், தன்மானம், சுயமரியாதை என்ற வார்த்தைகளுக்கு தன் வாழ்நாளில் எவ்வளவு முயன்றும் பொருள்கொள்ள முடியாமல், பார்ப்பனியத்தின் பாதந்தாங்கிக‌ளாய் வாழ்ந்து சாக ஆசைப்படும் ஈனப்பிறவிகளும் தான் தொடர்ந்து பெரியார் மீது எந்தவித தர்க்க அறிவுக்கும் பொருந்தாத அபத்தமான அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றார்கள்.

எந்த ஒரு சித்தாந்தமும் கால ஓட்டத்தில் அழிந்து போவது உறுதி என்றாலும், அந்த சித்தாந்தத்துக்கான புறச்சூழ்நிலை நிலவும் வரை அந்தச் சித்தாந்தம் அது தேவைப்படும் மண்ணில் வேர்கொண்டு வாழ்வது உறுதி. அப்படித்தான் சாதியும், சனாதன தர்மமும் கோலோச்சி மக்களின் மனங்களில் நஞ்சைப் பாய்ச்சும் இந்தக் காலத்திலும் பெரியாரியம் பெரும் எரிமலையாய், காட்டாற்று வெள்ளமாய் இன்னும் சாதியவாதிகளையும், மதவாதிகளையும், மக்களின் மூளைகளை மூடநம்பிக்கைகளால் மழுங்கடிக்கும் முட்டாள்களையும் அச்சுறுத்தி வருகின்றது. பெரியாரின் கருத்துக்கள் நம்மை பார்ப்பனியப் படுகுழியில் இருந்து கரம்கொடுத்து தூக்கி விடுபவை, சக மனிதனின் மீது அன்பையும், பரிவையும், நேசத்தையும், சமத்துவத்தையும் கற்றுக் கொடுப்பவை. தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் கேடு நேரும்போது அதற்கு எதிராகப் போராட உணர்வூட்டுபவை. அப்படிப்பட்ட பெரியாரை தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை.

திருச்சியில் 23/12/2018 அன்று நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. பெரும் அரசியல் கட்சிகளால் கூட திரட்ட முடியாத மாபெரும் மக்கள் திரள் கூட்டத்தைத் திரட்டி, தமிழகம் எப்போதுமே பார்ப்பனப் பாசிசத்துக்கு எதிரான மண் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். ‘தலையா, கடல் அலையா’ என்று சொல்லும் அளவிற்கு திரண்ட கருஞ்சட்டைகளைப் பார்த்து தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த காவி பயங்கரவாதிகளும் நிச்சயம் கதிகலங்கித்தான் போய் இருப்பார்கள். தேர்தல் பாதையில் பங்கேற்காத, பெரியாரை ஏற்றுக்கொண்ட ஏறக்குறைய 160 அமைப்புகள் சேர்ந்து இதைச் செய்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பெரியாரை விமர்சித்தவர்கள் கூட காலத்தின் தேவையை உணர்ந்து, நெருக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக ஓர் அணியில் திரண்டிருப்பது முற்போக்குவாதிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதற்கு அடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதில் தான் இந்தக் கூட்டத்தின் பலம் அடங்கி இருக்கின்றது. ஒரு பெரும் திருவிழாவிற்கு ஒன்று கூடி மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடிவிட்டு, திரும்ப வழக்கமான பணிகளை பார்க்கச் செல்லும் இயல்பான நிகழ்வாய் இது மாறிவிடக் கூடாது. பார்ப்பனப் பாசிசத்திற்கு எதிராக இத்தனை ஆயிரம் உணர்வாளர்களை நம்மால் ஒன்று திரட்ட முடியும் என்றால், முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டின் மீது இந்திய அரசு திணிக்கும் அனைத்து நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகவும் நம்மால் ஒன்று திரள முடியும், ஒன்று திரள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சயம் பார்ப்பனப் பயங்கரவாதத்திற்கு எதிரான உணர்வு இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிரான உணர்வு இருக்குமா என்பதில்தான் சந்தேகம். நம்மை சூழ்ந்திருக்கும் மிகப் பெரிய அபாயம் பார்ப்பனப் பயங்கரவாதம் மட்டும் கிடையாது, முதலாளித்துவப் பயங்கரவாதமும்தான். இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து, பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்று கலந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் அரசியல் உணர்வு மட்டத்தை அதை நோக்கி உயர்த்த வேண்டியது மிக முக்கியமானதாகும். இல்லை என்றால் முன்பு சொன்னது போல திருவிழாக் கால மகிழ்ச்சியாக அது முடிந்துவிடும்.

karunchattai meeting trichy 650இந்திய நாட்டின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றைப் பண்பாட்டை உருவாக்கத் துடிக்கும் பார்ப்பனியமும், இந்தியாவின் வளங்களையும், அதன் மக்களையும் ஒட்டச் சுரண்டி சூறையாடும் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவமும் நாம் அழிக்க வேண்டிய முதன்மை எதிரிகள். அதனால் நம்முடைய முழக்கம் இந்த இரண்டையும் உள்ளடக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதை ஏன் சொல்கின்றேன் என்றால், முற்போக்குவாதிகளில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் என்பதுதான். அவர்கள் கடவுள் மறுப்பைப் பேசுவார்கள், சாதி, மதம் போன்றவற்றைக் கூட எதிர்ப்பார்கள்; ஆனால் இன்னொரு பக்கம் முதலாளித்துவத்திற்கு அப்பட்டமாக சொம்பு தூக்குவார்கள். அவர்கள் முற்போக்கிற்கு வரம்பிட்டுக் கொண்டு இருப்பவர்கள். தேர்தல் அரசியலில் பங்கேற்காத அமைப்புகள் மட்டுமே இந்தக் கருஞ்சட்டைப் பேரணியில் கலந்து கொண்டிருந்தாலும், இதில் கலந்து கொண்ட சில அமைப்புகள் தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சில கார்ப்ரேட் கட்சிகளுக்கு ஓட்டு போடச் சொல்லி, மக்களிடம் பிரச்சாரம் செய்பவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அது போன்றவர்கள் இப்படிப்பட்ட ஒரு பெரும் மக்கள் திரள் கூட்டத்தை ஓட்டு வங்கியாக மாற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மேலும் இந்த கருஞ்சட்டைப் பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் பெரியாரை ஏற்றுக் கொள்கின்றார்கள், அவரின் தத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதையும் தாண்டி தனிப்பட்ட முறையில் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன என்று தெரியவில்லை. 160 அமைப்புகள் என்கின்ற போது, நிச்சயம் அவர்களுக்கு அதையும் தாண்டி வேறு பல அரசியல் நிலைபாடுகளும் இருக்கலாம். இருப்பதால்தான் இத்தனை அமைப்புகளாக அவை இருக்கின்றன. நாளை முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக அறைகூவல் விட்டால், இப்போது கலந்துகொண்ட இந்த 160 அமைப்புகளில் எத்தனை அமைப்புகள் கலந்து கொள்ளும் என்பதும் நமக்குத் தெரியாது. எனவே பார்ப்பனப் பயங்கரவாதம், முதலாளித்துவப் பயங்கரவாதம் என்ற இரண்டு பெரும் எதிரிகளுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து இனி வரும் காலங்களில் எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் போலி முற்போக்குவாதிகளை நாம் களையெடுக்க முடியும். அப்படி என்றால் இப்போது கலந்து கொண்டவர்களில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட கார்ப்ரேட் கைக்கூலிகள் இருந்தார்கள் என்று பொருள் கொள்ள வேண்டாம். அப்படி யாராவது இருந்தால், அவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த இது உதவலாம் என்பதுதான் இதன் கருத்து.

தமிழின உரிமைகளை மீட்டெடுக்க ஓரணியில் திரண்ட ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள், தமிழின உரிமைகள் என்பது சாதி, மதமற்று இருந்த தமிழனை இன்று சாதி வெறியனாகவும் மத வெறியனாகவும் மாற்றி வைத்திருக்கும் பார்ப்பனிய சித்தாந்தத்தை வேரறுப்பதும், இந்த மண்ணின் மக்களுக்கு சொந்தமான மண்ணையும், நீரையும், காற்றையும், மலைகளையும் அழித்து நாசமாக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும், அதை இந்த மண்ணில் செழித்து வளர அனுமதிக்கும் முதலாளித்துவ‌ அடிவருடிகளையும் ஒழித்துக் கட்டுவதும்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயம் தோழர்கள் வரும் காலங்களில் அப்படியான எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுப்பார்கள் என்று நாம் நம்புவோம். இப்படிப்பட்ட மாபெரும் மக்கள் திரள் இயக்கங்களை முன்னெடுத்து பார்ப்பனப் பயங்கரவாதத்திற்கும், முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கும் இந்த மண்ணில் சமாதி கட்டுவோம்.

- செ.கார்கி