"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று மனிதனுக்கு உள்ள பகுத்தறிவின் பெருமையைப் போற்றும் விதமாக அவ்வையார் பாடினார். ஆனால் சுரண்டல் சமுதாயத்தின் கொடுமைகளைக் கண்ட பெரியார் "கொடிது கொடிது மானிடராய்ப் பிறத்தல் கொடிது" என்றார்.

     பெரியார் கூறியதை நன்மக்கள் ஒவ்வொருவரும் அணு அணுவாக உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பேருந்துப் பயணம் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து, பயங்கரவாதம் போன்ற உலகளாவிய பிரச்சினை வரையிலும் மனித வாழ்வை நிம்மதி அற்றதாகச் செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு எல்லாம் தீர்வை மனிதனே தேடிக் கொள்ள முடியும். அவன் செய்ய வேண்டியாது எல்லாம் பிரச்சினைகளின் தீர்வுக்கு எதிராக இயங்கும் விசைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதும், அவற்றை அழித்து ஒழிப்பதும் தான்.

     முதலாவதாக, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பேருந்துப் பயணப் பிரச்சினையை ஆராய்வோம். பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் படும் அல்லலை மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம். வளரும் நாடுகளின் பெருநகரங்களில், தேவைப்படும் பேருந்துகளின் குறைந்த பட்ச எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு கூட இயக்கப்படுவது இல்லை. இதனால் மக்கள் நெருக்கி அடித்துக் கொண்டு பயணம் செய்ய நேரிடுவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பும், கால இழப்பும், அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பிரதிபலிக்கிறது. இதனால் நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய மனித வளத் திறன் வெகுவாகக் குறைகிறது.

     இதைத் தவிர்க்க இந்நகரங்களில் எல்லாம் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைந்த பட்சம் நான்கு மடங்காக உயர்த்தலாம். பயணத்தின் போது களைப்பு ஏற்படாமல் இருக்கவும் அதன் விளைவாகப் பணியிடங்களில் பணித் திறன் அதிகரிக்கவும் இவ்வெண்ணிக்கையை ஆறு மடங்காக உயர்த்தலாம். மேலும் பேருந்துகள் பழுதாகும் போது மாற்றுத் தேவைக்காகவும், எதிர்பாராத கூட்டம் வரும் போது இயக்குவதற்காகவும் கூடுதலாகப் பத்து விழுக்காடு பேருந்துகளை அவசரத் தேவைக்கு என ஒதுக்கி வைக்கலாம். அப்படிச் செய்தால் மக்கள் பயணச் சிரமம் எதுவும் இன்றி, தங்கள் முழு ஆற்றலை நாட்டின் ஒட்டு மொத்த நன்மைக்காக ஈடுபடுத்த முடியும்.

     ஆனால் இப்படிச் செய்யப்படுவது இல்லை. ஏனெனில் இவ்வாறு செய்தால் தனிப்பட்ட (இரு சக்கர, நான்கு சக்கர) வாகனங்களின் விற்பனை நின்று விடும். அவ்வாறு நின்றால், முதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தும் ஒரு களத்தை இழக்க நேரிடும். இதை ஒரு முதலாளித்துவ அரசு ஒப்புக் கொள்ளாது.

     ஆனால் மக்கள் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சோஷலிக அரசு அமைந்தால், இதைச் செய்வதற்குத் தடை ஏதும் இராது.

     இரண்டாதாக, அண்மையில் தமிழ் நாட்டில் / சென்னைப் பெருநகரில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வோம். தண்ணீர்ப் பற்றாக்குறைக்குப் பெயர் போன சென்னைப் பெருநகருக்கு இம்மழை நிச்சயமாகப் போதுமானது அல்ல. இதை விட மூன்று நான்கு மடங்கு மழை பெய்தால் தான் இப்பெருநகர மக்களின் தண்ணீர்த் தேவையை இந்திய தர நிர்ணய நிறுவனம் (India Standard Institute) நிர்ணயித்த அளவிற்கு மக்களுக்குத் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் இந்த மழைக்கே சாலைகளில் மட்டும் அல்ல, வீடுகளிலும் வெள்ளம் புகுந்து விட்டது.

     இதைத் தவிர்த்து இருக்க முடியாதா? அந்த அளவிற்குத் தொழில் நுட்பம் வளரவில்லையா? நிச்சயமாக, நம்மிடம் உள்ள தொழில் நுட்பத்தைக் கொண்டு இப்பெருமழையை, நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்வாக ஆக்கி இருக்க முடியும். சென்னைப் பெருநகரின் சம உயரக் கோடு வரைபடத்தை (contour map) வைத்துக் கொண்டு மழைநீர் வடிகாலை வடிவமைத்தும், வெயில் காலங்களில் ஏரி குளங்களைத் தூர் வாரியும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமலும் பார்த்துக் எகாண்டு இருந்திருந்தால், இந்த மழையை விடப் பத்து மடங்கு அதிகமான மழை பெய்தாலும் யாரும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்.

     ஏன் அப்படிச் செய்யவில்லை? மழை நீர் வடிகால் அமைக்கும் பணியைத் திட்டமிடுவது நீண்ட, சோர்வூட்டும் பணியாகும். யாரும் இதைச் செய்ய விரும்புவது இல்லை. முதலாளித்துவ அமைப்பு துரத்தும் பணம் சம்பாதிக்கும் வழியில் மக்கள் ஆர்வம் கொள்வதால், இவை போன்ற வேலைகளைச் செய்ய யாரும் விரும்புவது இல்லை. அதையும் மீறி ஈக உள்ளம் கொண்ட சிலர் அப்பணிகளைச் செய்ய முன்வந்தாலும் அவர்களுக்குத் தகுந்த துணையும், ஆதரவும் கிடைப்பது இல்லை.

     நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஆவதைப் பொறுத்த மட்டில், அப்படிச் செய்யக் கூடாது என்று வாய் கிழியப் பேசும் "உத்தமர்கள்" ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை இறுதி வரை எடுக்க ஆயத்தமாக இருப்பது இல்லை. நீர்நிலைகள் உட்பட புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யும் "சமூகப் பொறுப்பு இல்ல்லாதவர்கள்" தான் இந்த “உத்தமர்களின்” வீட்டு வேலைகளுக்குத் தேவைப்படுகிறார்கள். அது மட்டும் அல்ல. நகரப் பொருளாதார இயக்கத்திற்கு அவசியம் தேவைப்படும் பல தொழில்களை இலாபம் குறைவு காரணமாக முதலாளித்துவம் மேற்கொள்ள முடிவது இல்லை. அத்தகைய தொழில்கள் அனைத்தையும் இந்தச் "சமூகப் பொறுப்பு இல்ல்லாதவர்கள்" தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் "சமூகப் பொறுப்பு இல்லாத" தன்மையை ஒடுக்க நடவடிக்கைகளை எடுத்தால், நகர இயக்கம் முடங்கிப் போகும். ஆகவே அந்த "உத்தமர்கள்" வாய் வீச்சோடு நின்று விடுகின்றனர்.

     அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன? முதலாளித்துவத்தால் மக்களைப் பாதிக்காத தீர்வை அளிக்க முடியாது. சோஷலிச அமைப்பை ஏற்றுக் கொண்டால், முதலாளிகள் பறித்துக் கொள்ளும் உபரி மதிப்பை, மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நீண்ட சோர்வூட்டும் பணியைச் செய்பவர்களை ஊக்கப் படுத்த முடியும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்ய அவசியம் இன்றி, முதலாளித்துவப் பொருளாதார முறையால் முடங்கிக் கிடக்கும் நல்வாழிடங்களில் அவர்களுக்குக் குடியிருப்பை அமைத்துத் தர முடியும்.

     மூன்றாவதாக, யானை, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்வதை ஆராய்வோம். உண்மையில் அவை நாம் வாழும் பகுதிகளுக்கு வரவில்லை. நாம் அவை வாழும் பகுதிகளுக்குச் சென்று, அவற்றின் தேவைகளைப் பங்கு போடுவதால் தான் இந்நிகழ்வுகள் நிகழ்கின்றன.

     மனிதன் விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்க இரு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மக்கள் தொகை அதிகமாகி, தன் வாழ்விடப் பரப்பை விரிவாக்கும் போது அவன் விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கிறான். இரண்டாவதாக, மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதுவும் முதலாளித்துவ அமைப்பில் அது ஒரு ஒழுங்கமைவு இல்லாமல் தாறுமாறாக அதிகமாகின்றன.

     மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாதா? முதலாளித்துவ சமூகத்தில் அது முடியாது. ஏனெனில் முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் தேவையற்ற பொருட்களை வாங்குவதற்கு  மக்கள் தொகை உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சோஷலிச அமைப்பில் அவ்வாறு அல்ல, நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதைத் திட்டமிட்டு அடைய முடியும். சீனா சோஷலிசப் பாதையில் சென்று கொண்டு இருந்த வரையில், குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையின் படி சென்று, மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று சோஷலிசப் பாதையை விட்டு விலகிய பின், மக்கள் தொகை கட்டுக்குள் இல்லாமல் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

     மனிதனின் அதிகரிக்கும் தேவைகளைப் பொறுத்த மட்டில் முதலாளித்துவ அமைப்பில் அது தாறுமாறாகவே இருக்கும். சில மனிதர்களின் அடிப்படைத் தேவைகளே நிறைவு செய்யப்படாத நிலையில், சிலருடைய விபரீதமான திடீர் ஆசைகளை நிறைவு செய்யும் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். மிகப் பெரும்பாலும் அவை சூழ்நிலைக் கேட்டை விளைவிப்பவையாகவே இருக்கும். ஆனால் சோஷலிச அமைப்பில் பொருள் உற்பத்திக்கான திட்டமிடலில் (முதலாளித்துவத்தில் முதலாளிகள் மட்டுமே திட்டமிடுவது போல் அல்லாமல்), அனைத்து மக்களும் பங்கு கொள்வதால் தாறுமாறான வளர்ச்சி முற்றிலும் தவிர்க்கப்படும். விலங்கின வாழ்விடங்களில் ஆக்கிரமிக்கும் செயல்கள் முளைவிடாமலேயே தடுக்க முடியும்.

     ஆகவே மானிட, விலங்கின வாழ்வியல் மோதல்களை முதலாளித்துவத்தால் தடுக்க முடியாது மட்டும் அல்ல; மேலும் கூர்மையாக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் சோஷலிசத்தில் இப்பிரச்சினை எழாமலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

     நான்காவதாக, உலக மக்களை இன்று அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பயங்கரவாதத்தை ஆராய்வோம். பயங்கரவாதிகள் ஏன் உருவாகின்றனர்? அமெரிக்க நாட்டின் முற்போக்குச் சிந்தனையாளரான நோம் சோம்ஸ்கியிடம் (Noam Chomsky) "பயங்கரவாதிகள் ஏன் உருவாகின்றனர்?" என்று கேட்டனர். "ஒடுக்குமுறைகள் எங்கெங்கு உள்ளனவோ அங்கெல்லாம் பயங்கரவாதிகள் உருவாகின்றனர்." என்று விடை அளித்தார். "பயங்கரவாதிகளில் இஸ்லாமியர்கள் ஏன் அதிகமாக இருக்கின்றனர்?" என்று கேட்கப்பட்ட போது "இஸ்லாமியர்கள் அதிகமாக ஒடுக்கப்படுகிறார்கள்." என்று விடை அளித்தார். எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்தைப் பார்த்தாலும் அதன் தொடக்கம் ஒடுக்குமுறையின் விளைவாக இருப்பதைக் காணலாம்.

இந்தியாவில் பயங்கரவாத இயக்கம் என அரசு பிரகடனம் செய்துள்ள மாவோயிஸ்டுகள் இயக்கம், பழங்குடி மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து உருவானதே. பழங்குடி மக்களின் வழ்வுரிமைகள் ஏன் பறிக்கப்பட வேண்டும்? முதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்த மிகப் பெரும்பான்மை மக்களுக்குத் தேவைப்படாத பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது. அதற்குப் பழங்குடி மக்கள் வாழும் இடங்களில் உள்ள தாதுப் பொருட்களை எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே அவர்களை அவ்விடங்களில் இருந்து வெளியேற்ற வேண்டி உள்ளது. அவர்களுக்கு மறுவாழ்வு தரலாம் என்றால், இலாப விகிதம் குறைந்து விடும். ஆகவே அதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் தான் மாவோயிஸ்ட் போன்ற இயக்கங்கள் தோன்றுகின்றன.

     இப்பிரச்சினையை முதலாளித்துவத்தால் தீர்க்க முயுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவ்வளவுக்கு எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு இலாப விகிதம் குறையும். முற்றிலும் தீர்க்க வேண்டும் என்றால், இலாபம் முற்றாகக் கிடைக்காது என்பது மட்டும் அல்ல; இழப்பும் ஏற்பட்டே தீரும். ஆகையால் முதலாளித்துவத்தால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியவே முடியாது.

     சோஷலிச அமைப்பு எனிலோ, அது உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கணக்கில் கொண்டு பொருள் உற்பத்தியையும், விநியோகத்தையும் திட்டமிடும் / செயல்படுத்தும் அமைப்பாகும். இவ்வமைப்பில் வேலை இல்லாத் திண்டாட்டமும், உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் இருக்காது. ஆகவே பயங்கரவாதம் எழவே வாய்ப்பு இருக்காது. ஆகவே இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் அதற்கு சோஷலிசமே தீர்வாக உள்ளது.

     இது போல் பேருந்துப் பயணம் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து பயங்கரவாதம் போன்ற உலகளாவிய பிரச்சினை வரைக்கும் எதை எடுத்துக் கொண்டாலும், பிரச்சினைகளுக்கு மூல காரணம் முதலாளித்துவமாகவும், அவற்றிற்குத் தீர்வு சோஷலிசமாகவும் இருக்கிறது. ஆகவே மக்களின் விடுதலை மலர வேண்டுமானால் அதற்கு மார்க்சியமே தீர்வாக உள்ளது.

- இராமியா

(இக்கட்டுரை சிந்தனையாளன் 2016ஆம் ஆண்டு பொங்கல் மலரில் வெளியாகி உள்ளது)

Pin It