அவனையே நினைந்து நினைந்து என் வயிறு
புண்ணாகியது தான் மிச்சம்
வேலை நிமித்தமாய் சென்றயிடத்தில்தான்
வந்து முட்டினான்
களைத்திருந்தேன் அவன் எண்ணத்தால்
எனைக் கண்டு ஏன் மிரண்டான்
அந்த ஒனிடா டிவி தலையனை
மீண்டும் சந்திக்கிறேன்
பேருந்தில் இடம் போடும் போதும்
வரிசையில் நின்று ஏதாவது பெறும் போதும்
மனைவியுடன் பேசும் போதும்
கீழுள்ளவர்கள் கட்டளையிடும் போதும்
தர்க்கத்தின் போதும்
விவாதத்தின் போதும்
முடிவெடுக்கும் போதும்
முடிவிலும் தொடக்கத்திலும் கூட
அந்த ஒனிடா டிவி தலையனை
மீண்டும் சந்திக்கிறேன்
எனைக் கண்டு ஏன் மிரண்டான்
மூளைக்குள் திரும்பவும் வந்து முட்டுகிறான்
முந்திரிக்காயின் முதுகில் முளைத்தது போல
மண் பிளந்து வரும் முள் விதை போல
காண்டாமிருகத்தின் கொம்பு போல
அந்த ஒனிடா டிவி தலையனைப் போல
என்னிலும் எதிரிலும்
முளைக்கிறது
அந்த ஒற்றைக் கொம்பு.