ஒவ்வொரு பள்ளிக்கூட முகப்பிலும்
ஒரு பொக்கை வாய் தாத்தாவோ அல்லது
ஒரு பொக்கை வாய் பாட்டியோ
மிட்டாய் விற்ற படி அமர்ந்திருப்பார்கள்
பாக்கு மிட்டாய்
சூட மிட்டாய்
ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல ரக
மிட்டாய்கள் அவர்கள் வசம்.
அதில் எனக்குப் பிடித்தது என்னவோ
இந்த சூட மிட்டாய்கள்தான்
ஐந்து பைசாவில் வாங்கி நாவலிறக்கியதுமே
அது தன் பணியைத் துவங்கி விடும்
நாவெல்லாம் நமநமக்க
தொண்டையெல்லாம் சுருசுருக்க
சொல்லவியலா வித்தியாசச் சுவை அது
அதைத்தான் வடிவம் மாற்றி கலர் காகிதமிட்டு
இந்த இருமல் மருந்துக்காரர்கள் காசு பார்க்கின்றனரென
இன்னமும் சொல்வார் என் தாத்தா.
நாகரீகம் கூடிப் போய் உலகமயமானதில்
உலகத்தரங்கள் தங்கள் உலக்கையைக் கொண்டு
ஓங்கி அடிக்க அதில் காணாது போயினர்
பொக்கை வாய் தாத்தாக்களும் பாட்டிக்களும்
இப்பொழுது மினுமினுப்புக் காகிதங்களில்
நாவில் புகாத ஏதோவொரு ஆங்கிலப் பெயரோடு
வரும் மிட்டாய்கள் சூட மிட்டாயளவிற்கு
உகந்ததில்லை என்பதை சப்தமாகக் கூடச்
சொல்ல முடிவதில்லை.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ