பார்ப்பனர் ஆட்சி இல்லா நாட்டினில்
சீர்கெடு சாதிக் கொடுமைகள் இல்லை
உற்ற அறிவால் விளையும் நலனைப்
பெற்றிட விழையின் சூத்திரத் தோழனே
திறமை யில்லாப் பார்ப்பனர் தம்மை
அறமிலா வழியில் உயர்நிலைக் கேற்றிடும்
பொதுப் போட்டி முறையை முழுதாய் ஒழித்து
விகிதா சாரப் பங்கீட்டு முறையில்
பகிர்ந்தே அனைத்து வகுப்புகள் தமக்கு
அளித்திடும் முறையைப் போராடிப் பெறுவாய்
(பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாத நாடுகளில் சீர் கெடுக்கும் சாதிக் கொடுமைகள் இல்லை. (அங்கு திறமையின் அடிப்படையில் மக்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் உயர்நிலை வேலைகளில் பார்ப்பனர்களும் இடைநிலை வேலைகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் கடைநிலை வேலைகளில் தாழ்த்தப்பட்டவர்களும் இருக்க வேண்டும் என்ற கொடுமைகள் இல்லை. அது போலவே நம் நாட்டிலும்) அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப (சாதி வேறுபாடு பாராமல்) வேலைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், சூத்திரத் தோழனே! திறமை இல்லாத பார்ப்பனர்களை உயர்நிலைக்கு ஏற்றி வைக்கும் பொதுப் போட்டி முறையை முழுதாக ஒழித்துவிட்டு, அனைத்து வகுப்பு மக்களுக்கும் அவரவர் மக்கள் தொகையின் விகிதத்தில் அனைத்து நிலை வேலைகளையும் பகிர்ந்து அளிக்கும் விகிதாசாரப் பங்கீட்டு முறையைப் போராடிப் பெறுவாய்.)
- இராமியா