1765இல் கிழக்கிந்திய வணிகக் குழுமம் வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையைத் தனதாக்கிக் கொண்டது முதல் இந்தியாவின் பொருளாதாரம் பன்னாட்டு மூலதனத் துடன் இணைக்கப்பட்டதாகிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், மூன்றாம் உலக நாடுகளின் மீதான அய்ரோப்பிய நாடுகளின் ஆட்சியதிகாரம் முடிவுற்றது. ஆயினும் வணிகம், நிதி மூலதனம் ஆகியவற்றின் மீதான ஆதிக்கம் நீடித்தது. இதுவே மறுகாலனிய ஆதிக்கம் எனப் படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் தலைமையில் முதலாளித்துவ நாடுகள் ஒரு முகாமாகவும், சோவியத் நாட்டின் (U.S.S.R.-சோசலிச சோவியத் குடியரசுகளின் ஒன்றியம்) தலைமையில் சோசலிச நாடுகள் எதிர் முகாமாகவும், வளர்ச்சியில் பின்தங்கிய - காலனிய ஆட்சியி லிருந்து விடுதலை பெற்ற நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எனவும் இருந்தன.

1990இல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறுண்டது. சோசலிச ஆட்சி முறையும் வீழ்ந்தது. கம்யூனிஸ்ட் நாடாக அறியப்பட்ட சீனாவும் முதலாளிய உற்பத்தி முறையை நோக்கி நகர்ந்தது. இந்தப் பின்னணியில், முதலாளித்துவ நாடுகளின் முன்னெடுப்பில், உலக அளவில் தடையற்ற வணிகம் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி ‘காட்’ (GATT) ஒப்பந்தம் -நீண்ட காலம் (1986-94) பேச்சு வார்த்தைக்குப் பின்-1994இல் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த உலக வணிக அமைப்பு (WTO) உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படைக் கோட்பாடு தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பதாகும். இத்திட்டத்தின் உருவாக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் முதன்மையான பங்காற்றின.modi and farmer1991இல் இந்தியாவின் தலைமை அமைச்சராக பி.வி. நரசிம்மராவும் நிதி அமைச்சராக மன்மோகன் சிங்கும் பொறுப்பேற்றது முதல் ஒன்றிய அரசு தாராளமயம், தனியார் மயம், உலகமயம் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. மாநில அரசுகளும் இதையே பின்பற்றுகின்றன. இதனால் இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதுடன் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலவகை யான சலுகைகள் வழங்கப்பட்டன. சேவைத் துறைக்கும் தொழில் துறைக்கும் அரசுகள் முதன்மை அளித்தன. மகிழுந்து, இருசக்கர வாகனங்கள், சரக்கு ஊர்திகள், குளிர் சாதனப் பெட்டிகள், கணினி, கைப்பேசி முதலானவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகின. தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் உருவாயின. இதன் விளைவாக வேளாண் தொழிலும் உழவர் நலனும் அரசுகளால் புறக்கணிக்கப்பட்டன.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், டீசல், கூலி முதலானவை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தன. இதனால் பயிர்ச்சாகுபடியின் உற்பத்திச் செலவு அதிகமாயிற்று. ஆனால் உழவர்களின் விளைச்சலுக்குப் போதிய இலாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை உயரவில்லை. ஒரு குறிப்பிட்ட பயிரின் எடுத்துக்காட்டாக நெல் விளைச்சல் அதிகமாக இருக்கும் போது சந்தையில் கொள்முதல் விலை மிகவும் குறைந்துவிடுகிறது. பயிரிடு வதற்குச் செலவிட்ட தொகையைக் கூட பெற முடியாத நிலை ஏற்படுகிறது. வறட்சி, பெருமழை, வெள்ளம், பூச்சிகள் தாக்குதல் போன்ற காலங்களிலும் இத்தகைய அவல நிலை ஏற்படுகிறது. உழவர்களின் இழப்புகளை ஈடுகட்டவும், போதிய வருவாய் பெறவும் உரிய ஏற்பாட்டை அரசுகள் செய்யவில்லை. அதனால் நாள்தோறும் இந்தியாவில் நூற்றுக்கணக்கில் உழவர்கள் கடன் சுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளில் 1,50,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இருக்கின்ற தொழில்களிலேயே வேளாண்மை மட்டுமே உறுதியான விளைச்சலோ, உறுதியான விலையோ கிடைக்காத ஒன்றாக இருக்கிறது. பிற உற்பத்திப் பொருள்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை (Maximum Retail Price - MRP) என்பதை நுகர்வோர் நலன் கருதி நிர்ணயிக்கும் அரசு, விளைபொருள் களுக்கு உழவர்களுக்குப் போதிய வருவாய் தரக்கூடிய வகையில் விலை நிர்ணயிப்பதில்லை. வேளாண்மையைச் சார்ந்து வாழும் உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் எண்ணிக்கை மக்கள் தொகையில் 60 விழுக்காடாகும். இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் தொடர்ந்து உள்ளாகி வரும் உழவர்கள் தங்கள் விளைபொருள்களுக்கு, தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் விலை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என்று கடந்த முப்பது ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். பல போராட்டங்களையும் நடத்துகின்றனர்.

பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான நாடுகளின் கூட்டமைப்பு (OECD), “2000 முதலே இந்திய உழவர்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்; பெரிய பொருளாதாரம் கொண்ட 54 நாடுகளில் ஆய்வு செய்ததில் உழவர்களின் இழப்பை ஈடுசெய்ய வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்காத ஒரே நாடு இந்தியா தான்” என்று கூறியுள்ளது. பெருமுதலாளிகள் அரசின் கொள்கைகளை வகுப்பதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றனர். அரசியல் கட்சிகளுக்குக் கோடிக் கணக்கில் நன்கொடை தருகின்றனர். அதற்குக் கைம்மாறாக தங்கள் தொழிலையும், இலாபத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர். ஆனால் உழவர்கள் இதுபோல் அரசில் செல்வாக்குச் செலுத்த இயலாது என்பதால் உழவர் களின் கோரிக்கைகளை அரசு செவிமடுப்பதில்லை. ஏழைச் சொல் அம்பலமேறுவதில்லை அல்லவா!

2018-2019இல் ஒன்றிய அரசின் புள்ளிவிவரப்படி, ஒரு வேளாண் குடும்பத்தின் சராசரி மாத வருவாய் ரூ.10,218/­ஆகும். இது தேசிய சராசரியைவிட ரூ.310 குறைவாகும். உழவர்களில் 85 விழுக்காட்டினராக உள்ள சிறு குறு உழவர்களின் மாத வருவாய் இன்னும் தாழ்ந்த நிலையில் இருக்கும். எனவே இந்திய மக்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் வறுமையிலும், கடன் தொல்லையிலும் உழல்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக உழவர்களின் முதன்மை யான கோரிக்கை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price - MSP - எம்.எஸ்.பி.) தங்கள் விளை பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே ஆகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) வேளாண் விளைபொருள்களுக்கு அரசு நிர்ணயிப்பது என்கிற நடைமுறை கடந்த அறுபது ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் இந்த எம்.எஸ்.பி. போததாகவும், உறுதியுடன் செயல்படுத்தப்படாததாகவும் இருக்கின்றது.

1950களின் இறுதியிலும் 1965, 66ஆம் ஆண்டுகளிலும் வறட்சி காரணமாக விளைச்சல் வீழ்ச்சியடைந்தது. கடுமை யான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அமெரிக் காவிலிருந்து பெருமளவில் கோதுமை இறக்குமதி செய்யப் பட்டது. 1960களில் நடுப்பகுதியில் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் கோதுமை, நெல் வகைகள் பயிரிடப்பட்டன. இதை ஊக்குவிக்க 1965இல் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India - FCI) ஏற்படுத்தப்பட்டது. இந்த உணவுக் கழகம் உழவர்களிடமிருந்து கோதுமை, நெல் ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் விலையில் கொள்முதல் செய்து சேமித்தது. உழவர்களிடம் கொள்முதல் செய்வதற்காக நேரடிக் கொள் முதல் நிலையங்களும் வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. இதன் உடன்விளைவாக தனியார் வியாபாரிகளும் முகவர்களும் உழவர்களிடம் கொள்முதல் செய்யும் விலையும் ஓரளவுக்கு உயர்ந்தது.

இந்திய உணவுக் கழகம் ஏற்படுத்தப்பட்ட பின், மாநிலங்களில் பொது வழங்கல் முறை (Public Distribution System) வலுப்பெற்று விரிவடைந்தது. மாநிலங்களில் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வழங்குவதற்குத் தேவையான அரிசி, கோதுமையை இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்பிலிருந்து அனுப்பப்படுகிறது. விளைச்சல் பற்றாக்குறைக் காலங்களில் விலை உயர்வையும் பதுக் கலையும் தடுக்க உணவுக் கழகத்தின் இருப்பிலிருந்து சந்தையில் தானியங்கள் தனியார் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. பொது வழங்கல் முறையில் மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடும் கேரளமும் சிறந்த முன்னோடி மாநிலங்களாகத் திகழ்கின்றன. வடஇந்திய மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன.

பொது வழங்கல் முறையில் மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்குவதால் ஏற்படும் செலவைக் கட்டுப்படுத்த உழவர்களின் விளைபொருள்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கொள்முதல் செய்யாமல் ஒன்றிய அரசு உழவர்களை வஞ்சித்து வருகிறது.

மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படும் நிலையிலும் இந்தியா உலகப் பட்டினிக் குறியீட்டில் 125 நாடுகளில் 2023ஆம் ஆண்டில் 111ஆவது இடத்தில் இருக்கிறது. 2022இல் 107ஆவது இடத்திலிருந்து மேலும் சறுக்கியுள்ளது. இந்தியாவில் ஓராண்டில் தனிநபர் தானிய நுகர்வு 171 கிலோ, ஆப்பிரிக்காவில் 190 கிலோ, சீனாவில் 360 கிலோ. தலைமை அமைச்சர் நரேந்திர மோடியோ கடந்த பத்து ஆண்டுக்கால பா.ச.க. ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு விட்டோம் என்று மேடை தோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார்.

நவீன தாராளமயக் கொள்கை 1991இல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஏழை-பணக்காரன் வருவாய் இடைவெளி விரிவடைந்து கொண்டே இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுக்காலத்தில் மோடி ஆட்சியில் இது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2022இல் இந்தியாவில் மேல்தட்டில் உள்ள 10 விழுக்காட்டினர் நாட்டின் மொத்த வருவாயில் 57.7 விழுக்காடு பெற் றுள்ளனர். அடித்தட்டில் உள்ள 50 விழுக்காட்டினர் 15 விழுக்காடு வருவாய் மட்டுமே பெற்றுள்ளனர். இடையில் உள்ள 40 விழுக்காட்டினர் 27.3 விழுக்காடு வருவாய் பெற்றுள்ளனர். மேலும் உச்சியில் உள்ள 1 விழுக்காட்டு பெரும் கோடீசுவரர்கள் 2022-2023இல் நாட்டின் வருவாயில் பெற்ற பங்கு அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்சு, பிரேசில் ஆகிய நாடுகளின் முதல் நிலை முதலாளிகள் பெற்றதைவிட அதிகம் (The Hindu 21.3.2024). எனவே, மோடி முழங்குகின்ற வளர்ச்சிப் பெருமிதம் மேல்தட்டில் உள்ள பத்து விழுக்காட்டுப் பெருஞ்செல்வர்களுக்கானது என்பதை இப்புள்ளிவிபரம் தெளிவுபடுத்துகிறது. அதேசமயம் அடித்தட்டில் உள்ள 50 விழுக்காட்டினர் வறுமையில் வாடுகின்றனர் என்ப தையும் புலப்படுத்துகிறது.

உறுதியான வருவாய் அளிக்கக்கூடிய வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று தொடர்ந்து உழவர்கள் போராடி வந்ததன் விளை வாக, இந்தியாவில் பசுமைப் புரட்சியின் நாயகன் என்று போற்றப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் எட்டு பேர் கொண்ட உழவர்களுக்கான தேசிய ஆணையம் 2004 நவம்பரில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2006 அக்டோபரில் தன் அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைவுற்றதையொட்டி அவருக்குப் பாரத் ரத்னா பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பரிந்துரைத்த கொள்முதல் விலை நிர்ணய முறையை ஏற்றுச் செயல்படுத்த மோடி ஆட்சி முன்வர வில்லை.

தொடக்கத்தில் ஒன்றிய அரசு கோதுமை, நெல் பயிர் களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) நிர்ணயித்துக் கொள்முதல் செய்தது. தற்போது காரிப், ராபி பருவங்களில் விதைப்புத் தொடங்குவதற்கு முன்பே ஆண்டுதோறும் 23 பயிர்களுக்கு எம்.எஸ்.பி.யை அறிவிக்கிறது. இவற்றுள் 21 பயிர்கள் உணவுப் பயிர் களாகும். இந்திய உணவுக் கழகம் தனக்குத் தேவையான அளவிற்கு மட்டுமே ஆண்டுதோறும் எம்.எஸ்.பி. விலையில் கோதுமையையும் நெல்லையும் கொள்முதல் செய்கிறது. மொத்தத்தில் 7 விழுக்காடு உழவர்கள் மட்டுமே எம்.எஸ்.பி. விலையில் விற்கின்றனர்.

இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்யும் கோதுமையில் 90 விழுக்காடும், நெல்லில் 75 விழுக்காடும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் கொள்முதல் செய்கிறது. மீதியைப் பிற மாநிலங்களில் கொள்முதல் செய்கிறது. 2023ஆம் ஆண்டில் பஞ்சாபில் 22 விழுக்காடு நெல்லும், 31 விழுக்காடு கோதுமையும் கொள்முதல் செய்தது. இந்தியா முழுவதும் உள்ள வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடங்களில் தனியார் வணிகர்கள் நேரடியான அல்லது மறைமுக ஏல முறையில் உழவர்களின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்கின்றனர். இதுதவிர, தனியார் மண்டிகளிலும், வியாபாரிகளிடமும் உழவர்கள் தங்கள் விளைபொருள்களை நேரடியாக விற்கின்றனர். இம்முறைகளால் எம்.எஸ்.பி. விலையில் 70 விழுக்காடு அளவுக்குக்கூட உழவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையை மாற்றுவதற்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு அளவுக்கு உழவர்களுக்கு இலாபம் கிடைக்குமாறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியது.

ஒன்றிய அரசின் வேளாண் துறையின்கீழ் உள்ள வேளாண் பொருள்களின் உற்பத்திச் செலவு மற்றும் விலை நிர்ணய ஆணையம் (Commission for Agricultural Costs and Prices - CACP) ஆண்டுதோறும் எம்.எஸ்.பி.யை நிர்ணயிக்கிறது. தற்போது இந்த ஆணையம் A2 + FL என்ற முறையில் விலையை நிர்ணயிக்கிறது. A2 என்பது ஒரு ஏக்கரில் ஒரு குறிப்பிட்ட பயிருக்கான செலவு என்பதாகும். இது விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, ஆட்களுக்கான கூலி, இயந்திரங்களுக்கான வாடகை, நீர்ப்பாசனம், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்காகச் செலவிட்ட பணத்தின் கூட்டுத் தொகையாகும். இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் உழைப்புக்கான (Family Labour) கூலி சேர்க்கப்படுகிறது. A2 + FL என்பதுடன் நிலம் மற்றும் மூலதனச் சொத்துக்களுக்கான வட்டி, இயந்திரங்களுக்கான தேய்மானச் செலவு, கடனுக்கான வட்டி, போக்குவரத்துச் செலவு, சந்தைப்படுத்தல் செலவு ஆகியவற்றைச் சேர்க்கும் போது இதன் மொத்தச் செலவுத் தொகை C2 எனப்படுகிறது. இத்துடன் 50 விழுக்காடு இலாபத் தொகையைச் சேர்த்து C2+ 50% என்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று 2006இல் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதுவரை ஒன்றியத்தில் ஆட்சி செய்த எந்தக் கட்சியும் இதை நடைமுறைப்படுத்த வில்லை.

A2 + FL முறைக்கும் C2 + 50% முறைக்கும் இடையிலான வேறுபாடு எம்.எஸ்.பி. அறிவித்துள்ள 15 பயிர்களுக்கான விவரம் கிழே தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உழவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையின் இழப்பையும் அறியலாம்.

farming product msp

அட்டவணையில் மேலே குறிக்கப்பட்டுள்ள 15 பயிர்கள் மொத்த சாகுபடி பரப்பில் 90 விழுக்காடு பரப்பில் பயிரிடப் படுகின்றன. பட்டியலில் கலம் 2க்கும் கலம் 4க்கும் இடையில் ஒரு குவிண்டாலுக்கு A2 + FLக்கும் C2 + 50க்கும் விலையில் உள்ள உயர்வை அறியலாம். கலம் 3 தற்போதுள்ள எம்.எஸ்.பி. விலையில் உழவர்களுக்குக் கிடைக்காமல் போன தொகையைக் காட்டுகிறது. கலம் 5, C2 + 50% விலையில் கொள்முதல் செய்யப்பட்டால் உழவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையைக் காட்டுகிறது. மேலே குறிப்பிட்ட 15 பயிர்களை C2 + 50% முறையில் கொள்முதல் செய்தால் அரசுக்கு இரண்டு இலட்சம் கோடி கூடுதலாகச் செலவாகும்.

பாரதிய சனதா கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், மொத்த உற்பத்திச் செலவில் உழவர்களுக்கு 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் எம்.எஸ்.பி. நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. நரேந்திர மோடி தலைமை அமைச்சரான பின், இந்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது. 2015 பிப்ரவரி 25 அன்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு “மொத்த உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் எம்.எஸ்.பி.யை

நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் அது வேளாண் சந்தையைச் சீர்குலைக்கும்” என்று கூறித் தேர்தல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டது. வாக்குறுதிகளைக் கைவிடுவதும், மாற்றி மாற்றி பொய்யுரைப்பதும் பா.ச.க.வுக்குக் கைவந்த கலையாகும். ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்குப் புதிய வேலை வாய்ப்பு; ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.40 ஆகக் குறைக்கப்படும்; (1947இல் 1 டாலர் மதிப்பு ரூ.3. இப்போது ரூ.83) வெளிநாட்டில் உள்ள கள்ளப்பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 இலட்சம் செலுத்தப்படும் போன்ற தேர்தல் வாக்கு றுதிகள் நீர் மேல் எழுத்தாகிவிட்டன.

ஆயினும் வெட்கங்கெட்ட மோடி அரசு 2018ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “2022ஆம் ஆண்டு இந்தியா சுதந்தரம் பெற்ற 75ஆவது ஆண்டைக் கொண்டாட வுள்ளது. அதற்குள் உழவர்களின் வருவாய் இரண்டு மடங்காக உயர்த்தப்படும்” என்று அறிவித்தது. இதைச் செயல்படுத்த வலியுறுத்தி மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த உழவர்கள் பல இலட்சம் பேர் திரண்டு வந்து இந்தியாவே வியக்கும் வகையில் மாபெரும் பேரணியை மும்பையில் நடத்தினர். ஆனால் மோடி அரசின் இந்த அறிவிப்பும் 2019 நாடாளு மன்றத் தேர்தலுக்கான ஏமாற்று உத்தியாகவே அமைந்தது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மோடி அரசு 2020 சூன் 5 அன்று உழவர்களின் வாழ்வையும், இந்திய வேளாண் தொழிலையும் முற்றிலுமாகச் சீரழிக்கும் வகையில் மூன்று வேளாண் அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்தது. இவை 2020 செப்டம்பர் 14 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

அம்மூன்று சட்டங்கள் :

1.           1955ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 :

இச்சட்டப்படி எந்தக் கட்டுப்பாடும் அத்தியாவசியப் பொருள்கள் மீது இல்லாமையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளாண் விளை பொருள்களை வரம்பின்றிக் கொள்முதல் செய்யலாம்; சேமிக்கலாம்; நாட்டின் எந்தப் பகுதிக்கும் கொண்டு செல்லலாம். இதுவரை உழவர்களுக்கும் நுகர் வோருக்கும் இருந்துவந்த குறைந்தபட்ச பாதுகாப்பும் நீக்கப் படுகிறது. இச்சட்டம் பொருள்களைப் பதுக்கவும், கள்ளச் சந்தையில் விற்கவும், செயற்கையான உணவுப் பற்றாக் குறையை உருவாக்கி, வரம்பில்லாமல் விலையை உயர்த்தி கொள்ளை இலாபம் ஈட்டவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு உரிமை அளிக்கிறது.

2.           வேளாண் விளைபொருள் வணிகம் (வணிக மேம்பாடுமற்றும் எளிமைப்படுத்தல்) சட்டம் 2020 :

உழவர்கள் இந்தியாவில் எங்கு விலை அதிகமாக இருக்கிறதோ அங்கு தம் விளைபொருள்களை விற்றுக் கொள்ளலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். உண்மையில் இணையவழி வணிகம் மூலம் கார்ப்பரேட்டுகள் விலை குறைவாக உள்ள இடங்களில் விளைபொருள்களை வாங்கி, சேமித்து அதிக விலை கிடைக்கும் இடங்களில் ஆன்லைன் மூலம் விற்பதற்கே இச்சட்டம் துணைபுரியும்.

3.           வேளாண் விலை உறுதியளிப்பு மற்றும் வேளாண் சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2020:

இச்சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் உழவர்களுடன் ஒப்பந்தம் செய்து பயிரிடுவது பற்றியதாகும். இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட ஒப்பந்த வேளாண்மை உழவர்களுக்கு இழப்பாகவே முடிந்திருக்கிறது. ஒப்பந்தப்படி விலை தரப்பட வில்லை. தரநிர்ணயம் என்ற பெயரில் விளைபொருள் முற்றிலுமாகவோ, ஒரு பகுதியோ வாங்க மறுக்கப்பட்டது. ஒப்பந்த வேளாண்மை என்பது தானியங்களைப் பயிரிடுவதற்கு மாற்றாக அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பயிரிடுவதேயாகும். குளிர் மிகுந்த அந்நாடுகளில் ஒரு பருவப் பயிர்தான் உண்டு. மேலும் சில வகைப் பயிர்களை மட்டுமே பயிரிட முடியும். அந்நாடுகளின் சந்தைத் தேவைகளை நிறைவு செய்வதற்கானதாக இந்திய வேளாண்மையைக் கார்ப்ப ரேட்டுகள் மூலம் மாற்றுவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

இம்மூன்று சட்டங்களும் வேளாண்மை, உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள், நுகர்வோர், மாநில உரிமைகள், கூட்டாட்சி முறைமை ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பாதிப்பதாகும்.

கேடான இம்மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க தில்லியில் இந்தியாவிலிருந்து 500 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) என்கிற கூட்டமைப்பு உருவாக்கினர். இச்சட்டங்களைத் திரும்பப் பெறுதல், எம்.எஸ்.பி. (M.S.P.)க்கு சட்ட ஏற்பு அளித்தல், கொள் முதலை உறுதிசெய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் தில்லியில் மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 2020 செப்டம்பரில் மூன்று வேளாண் சட்டங்களின் நகல்கள் இந்தியா முழுவதும் எரிக்கப்பட்டன.

2020 அக்டோபரில் பல்லாயிரக்கணக்கில் உழவர்கள் டிராக்டர்களுடன் தில்லியில் போராட்டத்தைத் தொடங்கினர். அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும் பஞ்சாப், அரியானா, மேற்கு உ.பி., உழவர்கள் இப்போராட்டத்தில் முன்னணிப் படையினராக இருந்தனர். ஒன்றிய அரசு உழவர்களின் போராட்டத்தை ஒடுக்கப் பலவழிகளில் முயன்றது. தில்லி நகருக்குள் நுழைய அனுமதிக்காததால் தில்லியைச் சுற்றி அய்ந்து இடங்களில் பல்லாயிரக்கணக்கில் உழவர்கள் முகாமிட்டு, கடும் குளிரையும், வெய்யிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் 384 நாட்கள் போராடினர். இதில் பெண்களும் பெருமளவில் பங்கேற்றனர். 700க்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர். உலக அளவில் இப்போராட் டத்திற்கு ஆதரவும், மோடி அரசுக்கு எதிர்ப்பும் எழுந்தது. இறுதியில் மோடி அரசு 2021 நவம்பரில் இம்மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையைச் செயல் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2024 பிப்பிரவரி 13 அன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா விலிருந்து பிரிந்த உழவர் அமைப்பும், மற்றொரு அமைப்பும் இணைந்து தில்லியில் மீண்டும் போராட்டத்தை நடத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுடன் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் தில்லியை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால் பஞ்சாப்-அரியானா எல்லையில் எதிரி நாட்டுப் படையினர் மீது கொடுந்தாக்குதல் நடத்துவது போல் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கேயே முகாமிட்டு உழவர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஊடகங்கள் இப்போராட்டம் குறித்த செய்தியை அரசுக்கு அஞ்சி முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து வருகின்றன. பொதுவாகவே செய்தி ஏடுகளும், பிற ஊடகங்களும் உழவர்களின் சிக்கல்கள், துன்பங்கள் பற்றி செய்தி வெளியிடுவதில்லை.

மக்கள் தொகையில் அமெரிக்காவில் 2 விழுக்காட்டினரும் அய்ரோப்பிய நாடுகளில் 5 முதல் 10 விழுக்காட்டினரும் வேளாண்மையைச் சார்ந்து உள்ளனர். காட் ஒப்பந்தத்தின் ஒரு கூறாக வேளாண்மை சார்ந்த ஒப்பந்தம் (AoA) உருவாக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உழவர்களுக்கு விளைபொருளில் 50 விழுக்காட்டுக்குமேல் நேரடியாக வழங்கும் மானியம் வணிகக் குலைவு அல்லாதவை (Non-trade distorting) என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் மானியம் வணிகக் குலைவு (trade distorting) ஏற்படுத்துபவை என்றும் வரையறுக்கப்பட்டது. அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் 160 பில்லியன் டாலர் (ரூ.12.28 இலட்சம் கோடி) ஆண்டுதோறும் மானியம் அளிக்கின்றன. இந்தியாவில் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மானியம் தரப்படுகிறது. அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் அளிக்கும் மானியத்தை நிறுத்தினால், அந்நாடுகளில் வேளாண்மைத் தொழிலே நடக்காது.

ஆனால் இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2 இலட்சம் கோடிக்குப் பெருமுதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இக்கட்டுரையில் அட்டவணையில் குறிப் பிட்டுள்ளபடி C2 + 50% முறையில் 15 பயிர்களுக்குக் கொள்முதல் செய்தால் இரண்டு இலட்சம் கோடிதான் கூடுதலாகச் செலவாகும். ஆனால் முதலாளிய ஊடகங்கள் இருபது இலட்சம் கோடி செலவாகும் என்று பொய்யான பரப்புரை செய்கின்றன. கொள்முதல் செலவில் 75-80 விழுக்காட்டுத் தொகை விற்பனை மூலம் திரும்பப் பெறப்படுகிறது. மொத்த விளைபொருளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று உழவர்கள் கோரவில்லை. 10-15 விழுக்காடு கொள்முதல் செய்தாலே சந்தையிலும் கிட்டத்தட்ட அதே விலை நிலவும். எனவே C2 + 50% முறையிலான எம்.எஸ்.பி.க்கு ஒன்றிய அரசு சட்ட ஏற்பு அளிக்க வேண்டும். இதனால் உழவர்களின் வருவாயும் வாழ்வும் மேம்படுவதுடன், ஊரகப் பகுதியில் நுகர்வும் அதிகரித்து, உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகும். இளை ஞர்கள் வேளாண் தொழிலை விரும்பி ஏற்கும் நிலை ஏற்படும்.

“உழுவார் உலகத் தார்க்குஆணி அஃதுஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.” (குறள் 1032)

- க.முகிலன்

Pin It