guna thiruppur meeting

திருப்பூர் கருத்தரங்கு உரையின் சாரம்

தோழர்களே! இந்தியா கார்ப்பரெட்டுகளின் முழுபிடிக்குள் போயிருப்பதின் அறிகுறிதான் இந்தியா வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலிலிருந்து தரம் இறக்கப்பட்டு ஏழை நாடு, பின்தங்கிய நாடு என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பது.

மோடி சொல்கிறார், அவரது ஆட்சியில் அந்நிய முதலீடு 37.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று. அதாவது ரூ.11,198 கோடியாக இருந்த அந்நிய முதலீடு தற்போது ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி அந்நிய முதலீட்டில்தான் அடங்கியிருக்கிறது என்று வாதிட்டவர்கள், இப்போது அது பன்மடங்கு பெருகியப் பின்னும் ஏழை நாடுகளின் பட்டியலில் நாடு வீழ்ந்தது எப்படி? ஏன் அப்படி தரம் இறக்கப்பட்டது?

ஏனென்றால், ஒருநாடு ஏழை நாடுகளின் பட்டியலில் தள்ளப்பட்டால்தான் அந்த நாடு உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு வளர்ந்த நாடுகளான ஏகாதிபத்தியங்களின் தயவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப் படும். அதன் பொருட்டு வளர்ந்த நாடுகள் இந்தியாவில் உணவு தானியங்களை விற்பனை செய்கிற நிலைமையை உருவாக்க முடியும்.

ஆகவே, மிகப்பெரிய விவசாய நாடான இந்தியாவின் விவசாயத் தொழிலை அடியோடு அழிப்பதற்கான அஸ்திவாரம் இடப்பட்டாயிற்று. 

கார்ப்பரேட்டுகளின் விருப்பத்திற்கு இந்தியாவை ஆட்டிப்படைப்பதற்குதான் மோடி மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கி சீரழிக்கிறார். அதற்கு ஊழல் ஒரு சாக்கு. ஊழலை செய்ய வைத்துதான் மாநிலங்களை ஆட்டிப்படைப்பது என்பதில் இந்தியாவுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு.

தோழர்களே! அது 1953 காலகட்டம். அப்போது கஷ்மீருக்கு என தனி பிரதமர் இருந்தார். ஷேக் அப்துல்லா அதன் பிரதமராக இருந்தார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி இரவில் அவரது வீட்டின் கதவு இடைவிடாது தட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். துணைப்பிரதமராக இருந்த பக்க்ஷி குலாம் முகமது பிரதமராக்கப்பட்டார்.

பக்க்ஷி குலாம் காலத்தில் கஷ்மீரெங்கும் சாலைகள் போடப்பட்டன. ஜவஹர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் பெருகின. நாட்டில் போக்குவரத்து அதிகரித்து சுற்றுலா மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வளர்ந்தது. வளர்ச்சியின் பேரிலேயே கொள்ளையடிக்கும் வாய்ப்புகளை மத்திய அரசு பக்க்ஷி குலாம் முகமதுவுக்கு வாரி வழங்கியது.

ஊழல்களில் திளைத்த பக்க்ஷி குலாம் முகமது பழைய மன்னர் போலவே மாறிப்போனார்.

கஷ்மீர் இந்தியாவின் முழு அடிமையாக்கப்பட்டது.

அன்று நேரு கஷ்மீரில் செய்ததைத்தான் இன்று மோடி தமிழ்நாட்டில் செய்துகொண்டிருக்கிறார்.

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

மத்திய அரசு அ.தி.மு.க-வை ஆட்டுவிக்கிறது. அதன்மூலம் தமிழக அரசை ஆட்டுவிக்கிறது மத்திய அரசு.

அ.தி.மு.க-வின் முன் மத்திய அரசு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. உங்களுக்கு இனியும் இந்த மண்ணை நான்கு ஆண்டுகாலம் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்கிறீர்களா? இல்லை தவறவிட போகுறீர்களா? என்பதுதான் மத்திய ஆட்சியாளர்கள் நீட்டியுள்ள அஸ்திரம்.

ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்து மாநிலங்களை அடிமைப்படுத்துவது பி.ஜே.பி-யின் கண்டுபிடிப்பல்ல. நேரு காலம் தொட்டு காலாகாலமாக பின்பற்றப்படும் வழிமுறைதான் என்பதை மோடி நிரூபிக்கிறார்.

அடிமையாக இருக்கிறோம் என ஒப்பந்தம் எழுதி கொடுத்துவிட்டனர் தமிழக ஆட்சியாளர்களான அ.தி.மு.க-வினர்.

வருகிற 14-ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபை கூட்டம் நமக்கு சாவுமணி அடிக்கவிருக்கிற கூட்டம். நமது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் டெல்லி சுல்தானுக்கு அடிமைகளாக்கி விட்டதை பறைசாற்றுகிற கூட்டம்.

இந்த கூட்டத்தில் டெல்லியரசு அறிவித்திருக்கிற ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்படவிருக்கிறது. உப்பு முதல் தங்கம் வரை ஒவ்வொன்றிற்கும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. விலையேற்றம் இனி விண்ணைத் தொடும்.

அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமணத்திற்காண ஒப்புதல். இது கல்வியில் காவி சிந்தனையை வேரூன்ற செய்வதற்கான சதி. இதுவரை ஐ.ஐ.டி மாதிரியான உயர்கல்வி கூடங்களில் நடக்கும் மதவெறி, சாதிவெறி அனைத்தும் இனிமேல் எல்லா கல்லூரிகளிலும் தடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடு இது.

மோடி மாநில அரசுகளைப் பனியவைத்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்கிறார். இதுகுறித்து மக்களுக்கு தெளிவு ஏற்பட்டு விடக்கூடாது என்று மதவெறி போதையை ஏற்றுகிறார்.

இதையெல்லாம் மோடி யாருக்காக செய்கிறார்?

மோடி யாருக்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதை பார்ப்பதற்கு அவரது மூன்றாடு ஆட்சி காலத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அவரே ஒப்புக்கொண்ட கருத்துபடி அவரது ஆட்சியில் அந்நிய முதலீடு 37.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அந்நிய முதலீடு ரூ.11,198 ஆக இருந்த நிலையிலிருந்து  தற்போது ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது இந்த நாட்டை கொள்ளையடிப்பதற்கான அன்னியரின் ஆதிக்கம் உயர்ந்திருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்.

இந்த கொள்ளையடிப்பின் மூலம் இந்திய பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 21 சதவீதம் அதிகரித்த ரூ.15 இலட்சம் கோடி இந்திய ரூபாயாக உயர்ந்துள்ளது.

மருந்துத் துறையின் மன்னனான திலிப் சங்வி 11 இலட்சம் கோடி சொத்துடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் புதிய பணக்காரரான பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் மூலம் 29-வது இடத்தை பிடித்துள்ளார்.  பத்ஞ்சலி 1995-இல் துவங்கியது. அப்போது அவர்களின் மூலதனம் வெறும் 3,500 ரூபாய். கடனாகப் பெற்ற தொகை 10,000 ரூபாய். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு ராம்தேவின் வியாபாரம் எகிறியது. பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களில் ராம்தேவின் நிறுவனம் நிலங்களைக் கட்டணமின்றி கையகப்படுத்தியுள்ளது. அதன்மூலம் மட்டுமே 4 கோடியே 60 இலட்சம் டாலர்கள் சலுகையாக கிடைத்துள்ளது.

பதஞ்சலியின் பற்பசையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நெய், வெண்ணெய், வரையான வீட்டு உபயோகப்பொருள்கள், அரிசி, பிஸ்கட், சட்னி என அனைத்தும் பாராளுமன்ற பயன்பாடு முதல் இராணுவத்தினருக்காகவும் அரசே கொள்முதல் செய்கிறது.

மாட்டிறைச்சி விவகாரம் கூட பாபா ராம்தேவை இன்னும் சொத்துக்குவிக்க வழிசெய்யப் போகிறது. சோயா பீன்ஸ் மாதிரியான சைவ கறி வகைகள் சந்தைக்கு வரவிருக்கின்றன.

ராம்தேவ் இந்தியா கலாச்சாரம் என்றபேரில் சந்தையை கைப்பற்ற பி.ஜே.பி-யுடன் ஒப்பந்தமே போட்டிருக்கிறார். ராம்தேவின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளையோடு பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் உறுதிமொழி கொடுத்து கையொப்பமிடப்பட்ட ‘சம்பத் பத்ரா’ என்னும் ஒப்பந்தம் யூ டியூப்பில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தற்போதைய அயலுறவுத்துறை, நிதித்துறை, உள்நாட்டுப்பாதுகாப்புத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 5 அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி கையொப்பம் இட்டிருக்கிறார்.

“பல இலட்சக்கணக்கானவர்களிடம் நான் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை காரணமாக அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்படுமென்று பா.ஜ.க தலைவர்களுக்கு நான் உறுதியளித்தேன். நாங்கள் சேர்ந்தே இந்த 9 இலட்சியங்களை உருவாக்கினோம். நான் விரும்பிய இந்த ஒப்பந்த உறுதிமொழியில் புகழ்பெற்ற பா.ஜ.க தலைவர்கள் கையொப்பமிட்டார்கள்.” என்று ராம்தேவ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அந்த ஆவணத்தில் 9 உறுதிமொழிகள் உள்ளன.

அந்த உறுதிமொழியில் முக்கியமாக, “இந்துயிசம் என்பது பசுவை புனிதமானதாக ஆக்குவதில் இருக்கிறது. பசு பாதுகாக்கப்பட வேண்டும். பசுவை பாதுகாப்பவனே உண்மையான இந்துதேசியவாதி. அவன்தான் இந்தியன். இது இந்திய மக்களின் வாழ்க்கைமுறையை சுதேசி மயமாக்குவது ஆகும்” என உள்ளது.

இந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களிலும், அரசு துறைகளிலும், கலாச்சார நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் இதுகுறித்த நம்பிக்கைகளை ஏற்படுத்தும் பணி விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இனி மாட்டிறைச்சி சம்பந்தமான மத்திய அரசின் அறிவிப்பின் பின்னணியை நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம் அல்லவா!

அதேபோல மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் PAYTM நிறுவனர்  விஜய் ஷேகர் ஷர்மாவும் இந்த பட்டியலில் 79-ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளார். எப்படி இவர் புதிதாக பட்டியலில் இணைந்தார்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வணிகம் முழுவதும் பெருநிறுவனங்களுக்கு கைமாறுகிறது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கிறது. சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். விஜய் ஷேகர் ஷர்மா மாதிரி புது கோடீஸ்வரர்கள் உருவாகுகிறார்கள்.

மோடியால் சராசரி மக்களுக்கு என்ன நேர்ந்துள்ளது?

இந்துக்கள் என அறியப்படுகிற விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கிறாக்கள்.

இந்துக்கள் என அறியப்படுகிற சிறு உற்பத்தியாளர்களும், சில்லறை வணிகர்களும் கூட விவசாயிகளைப்போல் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

இந்துக்கள் என அறியப்படுகிற கூலி விவசாயிகளும் சேர்ந்துதான் பெருநகரங்களுக்கு விரட்டப்பட்டு கூலியடிமைகளாக மாறுகிறார்கள்.

இந்துக்கள் என அறியப்படுகிற விவசாயிகளின் பெண் மக்கள்தான் ‘சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகளாக’ மாறி சீரழிகிறார்கள்.

இந்துக்கள் என அறியப்படுகிற மக்களின் நிலங்கள்தான் பெரும்பாலும் கார்ப்பரேட்டுகளுக்கு பறித்து கொடுக்கப்படுகிறது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மாட்டிறைச்சி குறித்தான அறிவிப்பின் படி மாடு வளர்ப்பு பெருநிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான கூலி ஏழை விவசாயிகளும், சிறுவிவசாயிகளும் பாதிப்படைவார்கள். கூடவே தோல் தொழிற்சாலைகளும், அதன் இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். இவர்களில் பெரும்பான்மையோரும் இந்துக்கள் என அறியப்படுகிறவர்கள்தான்.

இந்தியாவில் நடைபெறும் தோல் பதனிடும் தொழிலில் 40 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.. கடந்த 2014 ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 10,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

இந்தத் தொழிலை நம்பி தமிழகத்தில் மட்டும் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 50 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இந்தியாமுழுவதும் குறைந்தபட்சம் 8 லட்சம் பேர் இந்த தொழிலில் பணியாளர்களாக உள்ளனர்.

மத்திய அரசின் சட்டத்தால் இந்தியா முழுவதிலும் தோல் பதனிடும் தொழிலில் பணியில் ஈடுபடுகிற பின்தங்கிய, படிப்பறிவில்லாத சுமார் 8 லட்சம் பேர் முழுமையாக வேலையிழக்கும் அபாயமுள்ளது.

இந்த தொழில் என்னவாகும்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றி கொடுக்கப்படும். அதேபோல இறைச்சித் தொழிலும் கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கப்படும். மாடு வளர்ப்பில் முன்னணியிலுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படும். அல்லது அந்நாடுகள் இங்கு இறைச்சி ஆலைகள் அமைக்க வழி வகுக்கப்படும்.

ஆக மோடி கார்ப்பரேட்டுகளுக்காவே அனைத்தையும் செய்கிறார். மாநில கட்சிகளை நசுக்குவதும், கொஞ்சநஞ்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறிப்பதும், மாநில அரசுகளை பொம்மைகளாக்குவதும் கூட கார்ப்பரேட்டுகளின் ஆணையின்படியே செய்கிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு என்ன தேவை?

கார்ப்பரேட்டுகளின் இன்றைய நலன் என்பது இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதில் இருக்கிறது. குறிப்பாக ஏகாதிபத்தியங்களின் தொழிநுட்ப வளர்ச்சியானது மூன்றாம் உலக நாடுகளின், தேசிய இனங்களின், பழங்குடியினங்களின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டுவதையே இலக்காகக் கொண்டிருக்கிறது.

அரபு நாடுகளின் எண்ணெய் வளம் கார்ப்பரேட்டுகளுக்கு தேவை. அதனால் அங்கு உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்தி கைக்கூலி அரசுகளை உருவாக்கி மக்களின் வளங்களை கொள்ளையடிக்கிறது. உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. நிலக்கரி, எண்ணெய், இரும்பு என அனைத்து கனிம வளங்களையும் கொள்ளையடிக்க அவை இருக்கிற நாடுகளில் தங்களுக்கான கைக்கூலி அரசுகளை கொண்டுவருவது கார்ப்பரேட்டுகளுக்கு தேவையாயிருக்கிறது.

ஏகாதிபத்தியங்கள் மக்களை சர்வாதிகாரத்தின் பிடியில் கொண்டுவந்து கொள்ளையடிப்பதேயே விரும்புகின்றன. இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும், இலங்கையிலும்கூட இதுவே நடந்தது.

இப்போது துருக்கியிலும்கூட இதுவேதான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  அந்நாட்டின் ஜனாதிபதி ஆர்துகான் ஒரேகட்சியின் சர்வாதிகாரம் நீண்டநாள் நீடிக்கும் வகையில் அரசியல் சாசனத்தை மாற்றுவதில் வெற்றியடைந்துள்ளார். துருக்கி அப்பட்டமான அமெரிக்க ஆதரவு நாடு என்பதை நினைவில் கொள்க.

இந்தியாவிலும் அவர்களது தேவை என்பது மத்தியில் தங்களது கைக்கூலியை கொண்டுவருவது மட்டுமல்ல. மாநிலங்களை சமாளிக்கிற, கட்டுபடுத்துகிற, அடக்கியாளுகிற ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்குவதே கார்ப்பரேட்டுகளின் தேவையாகும்.

ஏனென்றால் இந்தியாவிலுள்ள இயற்கை வளங்கள் என்பது பல்வேறு தேசிய மற்றும் பழங்குடி இனங்களின் வாழ்வாதாரங்களாகும். அந்த வழங்களின் மீது கையை வைக்கும்போது அந்தந்த மாநில மக்கள் வெகுண்டெழுகிறார்கள். ஜார்கண்ட், சட்டீஸ்கர் என பழங்குடியினங்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகவே தீவிரமடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அந்த அளவு நிலைமை தீவிரமடைய வில்லையென்றாலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு, அணு உலைகள், நியூட்ரினோ என மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கிரப் பிரச்சினைகளுக்கு எதிராக மக்களின் தீவிரமானப் போராட்டங்கள் நடைபெறவேச் செய்கிறது.

இந்தமாதிரியான திட்டங்களை மத்திய அரசு திணிக்கும்போது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத நிலையில் மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துவிடும். அப்படித்தான் மீத்தேன் திட்டம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நேரத்தில் அப்போது தி.மு.க தலைமையிலிருந்த மாநில அரசு அதை நிறைவேற்ற துணைபோனது. அந்நேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க-வும் எதிர்ப்பை காட்டாமல் ஆதரிக்கவே செய்தது. மக்கள் விழிப்படைந்து போராடியவுடன் இப்போதிருக்கும் அ.இ.அ.தி.மு.க அரசு பின்வாங்குகிறது. கூடவே முன்பு ஆட்சியிலிருந்து ஒப்புதலளித்த தி.மு.க-வும் எதிர்க்கிறது.

இதனால் கார்ப்பரேட்டுகளின் கனவுகள் நொறுங்குகின்றன. ஆவார்களின் லாப வேட்டைக்கு தடையேற்படுகிறது. ஆதலால் கார்ப்பரேட்டுகள் தங்களுக்கான ஒரு சர்வாதிகாரியை எதிர்பார்த்தது. அவர்களுக்கு கிடைத்தவர்தான் மோடி.

கார்ப்பரேட்டுகள் கண்டெடுத்த மோடி!

கொஞ்சகாலம் முன்பு வரைக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவில் காங்கிரசைத்தவிர வேறு நம்பிக்கையான கட்சி எதுவும் இல்லை. அதேநேரத்தில் காங்கிரசுக்கு மாற்று வேண்டுமென்ற கட்டாயமும் ஏகாதிபத்தியங்களுக்கு இருந்தது.

ஏனென்றால், மிக நீண்ட அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியானது மக்களின் நாடித்துடிப்பை நன்கறிந்திருந்த கட்சி. ஆகவே அது மக்களை கொள்ளையடிப்பதில் ஒரு நிதானத்தைக் கொண்டிருந்தது.

ஆனால் 1990-க்குப் பிறகு ஏகாதிபத்தியங்களுக்கு நிதானமான கொள்ளை போதுமானதாக இல்லை. அதற்குத் தேவை தீவிரமான வேட்டை. மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களை வாரி விழுங்குகிற வெறி. அந்த தேவையை காங்கிரஸின் நிதானம் நிறைவேற்றாதபோது அது தனக்கான மாற்றை தேடிக்கொண்டிருந்தது.

இந்த தேவையை உணர்ந்துகொண்ட பா.ஜ.க காங்கிரஸின் இடத்தைப் பிடிக்க முயற்சித்தது. பா.ஜ.க ஏகாதிபத்தியங்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு தடையிருந்தது. அதாவது அது பேசிக்கொண்டிருந்த இந்துத்துவ இந்தியா என்னும் அரசியல் என்பது அந்நிய எதிர்ப்பைக் கொண்ட சுதேசி பொருளாதாரக் கொள்கையைப்போல் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

ஆதலால் நாங்கள் அந்நிய எதிர்ப்பாளர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க இருந்தது. அந்த வாய்ப்பு பா.ஜ.க-வுக்கு 1990-களில் வாய்த்தது.

உலகமயமாக்கல் அமலுக்கு வந்த அக்காலத்தில் அதற்கு எதிரானப் போராட்டங்கள் நாடு முழுவதும் குறைந்த வேகத்தில் பரவி வந்தது.

அந்த நேரத்தில்தான் பா.ஜ.க பாபர் மசூதி பிரச்சினையை கையிலெடுத்தது. உலகமயமாக்கலுக்கு உருவான எதிர்ப்பை திசை மாற்றியது. உலக முதலாளிகள் பா.ஜ.க பக்கம் திரும்பினார்கள். பா.ஜ.க-வும் தமது ‘இந்து – இந்தியா – சுதேசி’ என்பதெல்லாம் பம்மாத்து என்று ஜாடையாக நிரூபித்தது.

ஆர்வமுற்ற உலக முதலாளிகளும் காங்கிரசால் இரண்டாம் மூன்றாம் நிலையில் வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு முதலாளிகளும் பா.ஜ.க-விற்கு நிதி மற்றும் பிற உதவிகளை செய்யத் தொடங்கினர். படிப்படியான அதன் வளர்ச்சித் தொடங்கியது.   

1993-ஆம் ஆண்டு டில்லி சட்டமன்றத் தேர்தலிலும், 1995-ஆம் ஆண்டு குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா  சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க வென்றது. 1994 டிசம்பரில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது.

இதன் பிறகு பா.ஜ.க தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.

1996-இல் கூட்டணி மூலம் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1998-இல் அ.இ.அ.தி.மு.க, சமதா கட்சி, சிரோமணி அகாலி தளம், சிவ சேனா, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பேரில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆனால், ஜெயலலிதா ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

1999-ஆம் நடந்த தேர்தலில் பா.ஜ.க-விற்கு கிடைத்த 183 இடங்களையும் சேர்த்து அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 303 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமரானார். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

பா.ஜ.க அரசு ஏற்கனவே காங்கிரஸ் அரசு பின்பற்றிய ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது. பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது என ஏகாதிபத்திய சேவைகள் சிறப்பாக தொடர்ந்தன.

ஆனால் கார்ப்பரேட்டுகள் எதிர்பார்த்த வேகம் எட்டப்படவில்லை.

அந்த நேரத்தில் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். 2002-இல் கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்வையொட்டி அங்கு இசுலாமியர்களுக்கு எதிரான வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த கலவரத்தின் காரணமாக நாடெங்கும் பா.ஜ.க-விற்கு எதிரான அலையடித்தது. அதை அப்போது பா.ஜ.க-விற்கு தலைமையேற்றிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானியால் சமாளிக்க முடியவில்லை. 2004-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு வெற்றியடைந்தது.

ஏகாதிபத்தியங்களுக்கு தங்கள் விசுவாசியான மன்மோகன் சிங் பிரதமராகி இருந்ததில் ஆறுதல்தான். ஆனாலும் அவர்களுக்கு தேவை ஒரு தீவிர வேட்டை.

குஜராத்தில் நடந்த கலவரத்தையொட்டி பா.ஜ.க மத்தியில் ஆட்சியை இழந்தபோதும் கலவரம் நடந்த குஜராத்தில் மோடி செல்வாக்கை இழக்கவில்லை. அவர் தமது எல்லைக்குள் நிலைமையை திறமையாக சமாளித்தார். மீண்டும் அங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதோடு இரும்பு மனிதர் என்ற பெயரையும் எடுத்தார்.

இதன் மூலம் மோடி ஏகாதிபத்தியங்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இராக்கில், ஆஃப்கானில், இலங்கையில் இரத்த வெள்ளத்தை ஓடவிட்டு தங்கள் நலன்களை நிறைவேற்றிக்கொண்ட ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவிலும் தங்களுக்கேற்ற ஒரு அரக்கத்தனமான கூட்டாளி கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.

குஜராத்தில் இசுலாமிய மக்களை ஈவு இரக்கமின்றி இரத்தத்தில் மூழ்கடித்து தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்ட மோடியிடம் இந்தியா ஒப்படைக்கப்படுமானால் இங்குள்ள பல்வேறு தேசிய – பழங்குடி இனங்களையும் அடக்கி ஒடுக்கி ஆள்வார் என்ற நம்பிக்கை ஏகாதிபத்தியங்களுக்குப் பிறந்தது.

அதன்பிறகு மோடியின் மீதான களங்கத்தைத் துடைத்து ஒரு ஹீரோவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியில் இன்று நிதி ஆயோக்கின் துணைத்தலைவராக இருக்கும் அர்விந்த் பனகாரியாவும் செயல்பட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவர் 28/10/2013 அன்று business standard இதழில் எழுதிய மோடி ஆதரவு கட்டுரை மிகபிரபலமானது. அப்போது பனகாரியா அமெரிக்கவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்தார். மோடி பிரதம வேட்பாளராக முன்னிருத்தப்படுவதற்கும் இவரது எழுத்துகள் முக்கியமானது எனக்கூறப்படுகிறது. பனகாரியா மாதிரியான இந்தியப் பின்புலமுள்ள அறிவாளிகளின் செயல்களையும் அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகள் மேற்கொண்ட பின்வரும் செயல்களையும் இணைத்துப் பார்த்தால் மோடி கார்ப்பரேட்டுகளுக்கு எந்த அளவு விருப்பமுள்ள நபராக இருந்தார் என்பது தெரியவரும்.

  • அமெரிக்காவின் GRAY WORLD WIDE என்ற பிரபலங்களை விளம்பரப்படுத்தும் நிறுவனம் மோடியை கதாநாயகனாக்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது.
  • 2009-க்குப் பிறகு APCO-ஆப்கோ என்ற நிறுவனம் இந்தப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் மோடிக்கு பேச, உடுத்த, போஸ் கொடுக்கவென மொத்தத்தில் நடிக்க கற்றுக் கொடுத்துள்ளது. கூடவே அவரை பிரபலப்படுத்த ஊடகங்களையும்,பல நாடுகளின் தலைவர்களையும் விலைப் பேசித் தயாரித்துள்ளது.
  • ஆப்கோ உலகப் பயங்கரவாத நாடான இசுரேலின் அழிவு நடவடிக்கைகளை எல்லாம் சரியானதென நம்ப வைக்கும் பணியினை செய்து வருகிறது. இரசியாவின் தொழிலதிபர் மிகைல் கொர்த்தோவ்ஸ்கி, நைஜீரியா சர்வாதிகாரி சானி ஆபாச்சா, கஜகஸ்தானின் ஊலல் சர்வாதிகாரி நூர்ஸுல்தான் நசாக் பாவே ஆகியோரையும் மக்கள் நாயகர்களாக காட்டுகிறப் பணியில் ஈடுப்பட்ட நிறுவனம்.
  • ஆப்கோ மோடியை கதாநாயகனாக்க பலப் பணிகளை செய்துள்ளது. NAMO GUJARAT என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை வழி நடத்தியது; DESH GUJARAT என்ற இணையத்தளத்தைப் பராமரித்தது; ட்விட்டர், முகநூல் மற்றும் வலைத்தளங்களை உருவாக்கி அதில் மூன்று ஷிப்டுகளில் 4000 பேரை முழுநேரப் பணியாளர்களாக வேலை வாங்கியது; இதற்காக மோடியின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்ட SANSKARDHAM என்றப் பள்ளியின் மாணவர்கள் ஏராளமானோர் ஈடுப்படுத்தப்பட்டனர்;
  • அமெரிக்காவில் FRIENDS OF GUJARAT என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு லாபி செய்யப்பட்டது; ஆப்கோ மக்கள் தொடர்பு பணியாற்றும் PROJECT MANEGEMENT INSTITUTE மூலம் மோடியின் சோலார் திட்டத்திற்கு மிகச்சிறந்தத் திட்டமென்று விருது வழங்க வைத்தது; EUROPE INDIA CHAMBER OF COMMERCE என்ற அமைப்பின் மூலம் பிரிட்டீஷ் பிரதமர் கேமரூனைகுஜராத்துக்கு அனுப்பி வைத்தது; INDIAN AMERICANS FOR FREEDOM என்ற அமைப்பின் மூலம் ஹிலாரி கிளிண்டனை மோடிக்கு ஆதரவாகப் பேச வைத்தது; NATIONALINDIAN AMERICAN PUBLIC POLICY INSTITUTE-ஐ அணுகி அமெரிக்க செனட் உறுப்பினர்கள் மூவரை குஜராத்துக்கு அனுப்பி வைத்தது; மோடிக்கு 'வார்டன் பிஸினஸ் பள்ளி'யில் பேச வாய்ப்பு வாங்கித் தந்த விஜய் ஜாலியின் OVER FRIENDS OF BJP நிறுவனத்திற்கும், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் மோடிக்கு ஆதரவுத் திரட்டிய HINDU AMERICAN FOUNDATION-க்கும் நிதியளித்து பராமரித்தது.
  • இவையனைத்தையும் செய்தி மற்றும் காட்சி ஊடகங்களில் இடைவிடாமல் பரப்பி ஆப்கோ மோடியை கதாநாயகனாக்கியது. 2012 மற்றும் 13-இல் மட்டும் மோடியை பற்றிய முழுப்பக்க வண்ண விளம்பரங்கள் இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் 1500 முறை வெளியிடப்பட்டுள்ளது.
  • இதுபோன்ற செலவுகள் மட்டுமல்லாது தேர்தல் காலத்தின் செலவுகள் அனைத்திற்கும் கார்பரேட் நிறுவனங்கள்தான் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தன.

இந்த அசுர பலத்தில்தான் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

மோடியின் முதல் நடவடிக்கையே மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிப்பதாகத்தான் இருந்தது!

பிரதமர் மோடியின் 2014-ஆம் ஆண்டின்  மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தார். மூன்று மாதம் கழித்து நடந்த சுதந்திர தின உரையில் உணர்ச்சி மயமாகப் பேசி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும்  நாட்டின் திட்ட குழு  நீக்கபட்டது. அதற்கு பதிலாக புதிய அமைப்பாக நிதி ஆயோக் நிறுவப்பட்டது. அறிவிப்பின் அடுத்த நாளே அது நடைமுறைக்கு வந்தது.

ஆனால் திட்ட குழுவிற்கு மாற்றாக உருவாக்கபட்ட நிதி ஆயோக்கை நாடு ஆறு மாதம் கழித்துதான் அறிய முடிந்தது.

இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களை பிரதமரே நியமிப்பார்.

அதாவது எந்த மாநிலத்தில் என்ன வளங்கள் உள்ளன, அவை எந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு தேவைப்படும் என்று நன்கு அறிந்த ஏகாதிபத்தியங்களின் பொருளாதார அடியாட்கள் அதன் நிரந்தர உறுப்பினர்கள் ஆக்கப்படுவார்கள்.

அவர்கள் திட்டங்களை தீட்டுவார்கள். அவர்கள் தீட்டிய திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுவோம் என்று உத்தரவாதம் அளிப்பதற்கு ஒவ்வொரு மாநில முதல்வர்களும் அதில் பொம்மை உறுப்பினராக இருக்க வேண்டும்.

இதன்மூலம் மாநில அரசுகளின் கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்படும். மத்திய அரசு கொண்டுவருகிற ஆணைத்து திட்டங்களையும் நிறைவேற்றியே தீரவேண்டிய கட்டாயம் உருவாக்கப்படும்.

அதாவது இப்போதுபோல் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிக்கிற திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடினால் அவர்களை நசுக்குகிற போலீஸ் அடியாளாக மட்டுமே மாநில அரசுகள் இருக்கும் என்கிற நிலை வரும்.

இதற்குதான் பலம் வாய்ந்த மாநில கட்சிகளை அழிக்கிற பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கூடுதலாக மோடி மாநில அரசுகளை ஒடுக்க வேறுசில துறைகளையும் பயன்படுத்தினார்.

அதாவது 1.வருவாய்த்துறை, 2.அமலாக்கத்துறை, 3.வருவாய் புலனாய்வுத்துறை, 4.சி.பி.ஐ, 5.மத்திய உளவுத்துறை, 6.டெல்லி காவல்துறை ஆகியத் துறைகளைப் பயன்படுத்தி மாநிலங்களில் இருக்கும் பலமான கட்சிகளை அச்சுறுத்துகிறார். மேற்கு வங்க ஆட்சியாளர்களை மிரட்ட இராணுவத்தைக்கூட கொண்டுவந்து நிறுத்தினார்.

கார்ப்பரேட்டுகள் ஒற்றை சர்வாதிகாரத்தை கொண்டுவர முயற்சித்தபோது மாநில கட்சிகளை இணைத்து பிரதமராகும் கனவில் அழிந்த ஜெயலலிதாவும் அ.தி.மு.-வும்!

ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி அழிந்தார் என நம்மை நம்பவைக்க கடும் முயற்சிகள் நடக்கின்றன. மக்களின் வளங்களை கொள்ளையடிக்கிற பொருளாதார கொள்கையை நடைமுறைப் படுத்துகிற நமது நாட்டில் ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. மாறாக ஊழல்வாத அரசியல்வாதிகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். ஆகையால்தான் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தயாநிதி மாறன், அன்பு மணி, அருண் ஜெட்லி போன்றவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி வைத்திருக்கிறது ஆளும்வர்க்கம்.

அதுபோல்தான் ஜெயலலிதாவும். அவர் ஊழலுக்காக தண்டிக்கப்படவில்லை.

1991 – 96-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற வழக்கு 1996 சூன் 14-இல் சுப்பிரமணி சாமியால் போடபட்டது.

இதன்பிறகு இந்த வழக்கு முறையான விசாரணை இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. இதனால் ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று தி.மு.க-வினர் அழைக்கலாயினர்.

இந்த வழக்கு போடப்பட்ட 1996-லிருந்து 2004 வரைக்கும் மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்தது. அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் வழக்கு துரித படுத்தப்படவில்லை. மாறாக, அதை இழுத்தடிக்கும் ஜெயலலிதாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பே நல்கியது.

அதன்பிறகு வந்த காங்கிரசு அரசும் அந்த ஒத்துழைப்பையே நல்கியது.

ஆக ஊழல் ஒரு பிரச்சினையில்லை. மாறாக மத்தியில் வரைக்கும் ஆட்டிபடைக்க நினைத்த ஜெயலலிதாவின் அதிகாரப் பசிதான் பிரச்சினையாக மாறியது.  2014 பாராளுமன்றத் தேர்தலின்போது அவர் வேறு அவதாரம் எடுக்க முனைந்ததுதான் அவரது அழிவிற்கு வித்திட்டது.

கார்ப்பரேட்டுகள் அந்த தேர்தல் மூலம் மாநிலங்களின் உரிமையை பறிக்கிற ஒருகட்சி சர்வாதிகாரத்தை நிறுவ மோடியை முன்னிறுத்தின.

ஆனால் ‘40-ம் நமதே! நாடும் நமதே!’ என்றும் ‘மோடியா? இந்த லேடியா?’ என்றும் முழக்கமிட்டார். ஜெயலலிதா தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தனித்து போட்டியிட்டார். மேற்கு வங்க மம்தா, இடதுசாரிகள், காங்கிரசு ஆகியவற்றின் துணையோடு பிரதமராகும் கனவு அவருக்கு இருந்தது.

ஒருவகையில் அந்த தேர்தல் இந்தியா முழுவதையும் மோடியின் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவர துடித்த கார்ப்பரேட்டுகளுக்கும் ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க மாதிரியான செல்வாக்குமிக்க மாநில கட்சிகளுக்கும் இடையிலானதாகவே இருந்தது.

இதில் மோடி தனி செல்வாக்கில் வெற்றி பெற்றார். ஆனாலும் 39 எம்.பி-க்களை பெற்ற ஜெயலலிதாவின் வெற்றி கார்ப்பரேட்டுகளுக்கு எரிச்சலையே உண்டாக்கியது.

மாநிலங்களுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிக்க வேண்டிய நேரத்தில் ஜெயலலிதாவின் வெற்றி இடையூறாக மாறியது. ஜெயலலிதாவின் வெற்றி பிற மாநில கட்சிகளுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்து விடுமேயானால் இந்தியா முழுமைக்குமான ஒற்றை சர்வாதிகாரம் சாத்தியமில்லாமல் போகும் அபாயம் உருவானது.

விளைவு ஜெயலலிதாவை அடக்குவதற்கு ஊழல் வழக்கு பயன்படுத்தப் பட்டது. அதுவரை வழக்கை இழுத்தடிக்க அவருக்கு துணை நின்றவர்கள் காணாமல் போயினர். பாராளுமன்றத் தேர்தல் முடிந்த சூட்டோடு ஜெயலலிதாவின் மீதான பிடி இறுகியது.

2014 செப்டம்பர் 27-இல் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. பிணை மறுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார்.

2014 அக்டோபர் 17-இல் வழங்கபட்ட பிணையும் நிபந்தனைக்குரியதே.  அதுவும் 2014 டிசம்பர் 18-ம் தேதி வரைக்குமானதே.

இந்த வகையில் ஜெயலலிதா கடுமையான மன உளைச்சலுக்கும், நோய்வாய் படலுக்கும் ஆளாக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் மிகவும் மோசமானது. 75 நாட்களாக அப்பல்லோவில் இருந்த அவர் டிசம்பர் 5 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது மரணத்திற்குப்பின் இப்போது அ.தி.மு.க மத்திய அரசின் கைப்பாவையாக ஆக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு மத்திய அரசிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது.

இப்படிகார்ப்பரேட்டுகளுக்கான ஒற்றை சர்வாதிகாரம்நிறுவப்படுவதை இந்துத்துவ பயங்கரவாதம் என்றழைத்தால் என்னவாகும்?

மோடியின் பா.ஜ.க அரசு இசுலாமியர் மீது வன்மத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது உண்மை. இசுலாமியர் கிருத்துவர் என சிறுபான்மையினரரின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. மட்டுமல்லாது தலித்துகளின் உயிர்வாழும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் மோடியின் பா.ஜ.க அரசின் திட்டங்களால் விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். சில்லறை வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள் அனைவரும் வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தொழிலார்களின் நிலை நரகத்தைவிட கொடுமையாகிவிட்டது. உடல் உழைப்பாளர்கள் மட்டுமல்லாது ஐ.டி துறை மாதிரியான மூளை உழைப்பாளர்களும் கூட உத்தரவாதமில்லாத பணி நிலைமைகளாலும், பணிச்சுமைகளாலும் திணறிக் கிடக்கின்றனர். தொழில்கூடங்கள் பெண்களின் கொத்தடிமைக்கூடங்களாக மாறியுள்ளன.

இவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆக மோடியின் அரசு இசுலாமியர் உட்பட மதசிறுபான்மையினருக்கு எதிரான அரசுதான், தலித்துகளுக்கு எதிரான அரசுதான். அதேநேரத்தில் இது விவசாயிகள், தொழிலார்கள், சில்லறை வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், ஐ.டி துறை மாதிரியான மூளை உழைப்பாளர்கள், பெண்கள் என பெரும்பான்மை மக்களான இந்துக்கள் என அறியப்படுகிறவர்களுக்கும் எதிரான அரசு. பெரும்பான்மை மக்கள் அனைவரையும் கார்ப்பரேட்டுகளுக்கு பலிகொடுக்கிற அரசு.

இந்த உண்மையை மக்கள் உணர முடியாதபடி திசைத்திருப்பவே மதவெறியையும் சாதிவெறியையும் தூண்டிவிடுகிறது. இந்த வெறி இப்போது ஏற்படுத்தப்பட்டதல்ல. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்-ஸாலும் இந்து முன்னணி போன்ற அதன் துணை அமைப்புகளாலும் ஏற்படுத்தப்பட்டுள்ளவைதான். இப்போது ஆட்சி அவர்கள் கையிலிருப்பதால் அவர்களின் மதவெறி கூச்சல் அதிகமாகியிருக்கிறது.

நாம் இந்துத்துவ பயங்கரவாத அரசு என்று கூறினால் அது இசுலாமியர் உட்பட மதசிறுபான்மையினரையும், தலித்துகளையும் ஈர்க்கலாம். ஆனால் அது முற்போக்கு இயக்கங்களின் பின்னடைவாள் மத உணர்வில் விழுந்துகிடக்கும் இந்துக்கள் என அறியப்படுகிற பெரும்பான்மை மக்களை ஈர்க்காது.

அதுமட்டுமல்ல இது இசுலாமியர் உட்பட மதசிறுபான்மையினரையும், தலித்துகளையும், இந்துக்கள் என அறியப்படுகிற பெரும்பான்மை மக்களையும் திசைதிருப்பி கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

சமூக சிக்கல்களுக்கு உற்பத்திமுறைதான் என்பதை நிறுவுவதில் முற்போக்கு இயக்கங்கள் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதை பயன்படுத்தி சமூக சிக்கல்களுக்கு காரணம் இசுலாமியர்கள், கிருத்துவர்கள், அவர்களின் மதமாற்றப் பிரச்சினைகள் என்பதை ஆழ விதைத்துள்ளன.

இந்த நிலையில் கார்ப்பரேட்டுகளின் அரசை இந்து அரசு என்று நாம் கூறினால், மதவெறியில் வீழ்ந்து கிடப்பவர்கள் “ஆம்! இது எங்களின் அரசுதான்!” என்று போதையோடு கூறுவார்கள்.

அதேபோல் மதவாதிகள் “இந்தியாவிற்கு பாகிஸ்தானால் ஆபத்து என்றும், பாக்கிஸ்தானின் பயங்கரவாதத்தால் ஆபத்து என்றும், அதனால் இதை எதிர்கொள்ள பலமான இந்தியா வேண்டும் என்றும்” ஒரு இந்தியா சர்வாதிகாரத்திற்கான அடிதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் பல்வேறு தேசிய – பழங்குடி இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையடிக்க மாநில உரிமைகளை நசுக்கி ஒற்றை சர்வாதிகாரத்தை நிறுவும் கார்பரேட் ஒற்றை சர்வாதிகாரத்தை சொல்லாமல், அதை இந்து பாசிசம் என்று சொல்வோமெயானால் இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையையும், பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையையும் கொண்ட மக்கள் “இந்து பாசிசம் அவசியம்தான்” என்கிற போக்கே உருவாகும்.

சரியான முழக்கம் வைக்கப்படவில்லையென்றால் தவரானவர்கள் பின்தான் மக்கள் அணிதிரள்வார்கள்.

ஆகவே, இந்த அரசு எந்த மக்களையும் காப்பதற்கானதல்ல, மக்களின் மண்ணையும் காப்பதற்கானதல்ல, எவருடைய மதத்தையும் காப்பதற்கானதல்ல என்பதை மக்களுக்கு சொல்லியாக வேண்டும். இது எல்லோரையும் கார்ப்பரேட்டுகளுக்கு பலிகொடுக்கிற ஒற்றை சர்வாதிகார அரசு என்பதை நிறுவியாக வேண்டும்.

நமது தாய்த் தமிழ்நாட்டை காப்பதை நமது உடனடி கடமையாக கொள்ள வேண்டும். அதற்கு இந்த துணைக்கண்டத்திலுள்ள அனைத்து மாநில மக்களோடும் கரம் கோர்க்க வேண்டும்.

- திருப்பூர் குணா