உடையவர் முன்னே இல்லார் தானும்
கடைநிலை ஏற்ப துலகத் தியற்கை
புண்ணிய நாவலந் தீவு என்றே
விண்ணுயர்ப் புகழ்சால் இந்திய மண்ணில்
சாதி வருண மயக்கம் தன்னில்
நீதியை மாளக் கொடுத்ததி னாலே
பார்ப்பனர் தமக்கு மற்றவர் யாவரும்
கூர்மதி யுடனே பெருஞ்செல்வம் தன்னைப்
பெற்றிட்ட காலையும் அறுபட்ட மரம்போல்
இற்று வீழ்வது மானக் கேடே
 
(செல்வம் உடையவர்களின் முன்னே இல்லாதவர்கள் கடைநிலையை ஏற்று (பணிந்து கிடப்பது) உலகத்தில் பொதுவாகக் காணப்படும் இயற்கையே ஆகும். (ஆனால்) புண்ணிய நாவலந் தீவு என்று வானளாவப் புகழப்படும் இந்திய மண்ணில் சாதி வருண மயக்கத்தில் நீதியை மாளக் கொடுத்ததினால், அறிவுக் கூர்மையும் பெருஞ் செல்வமும் பெற்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாதவர்கள், பார்ப்பனர்களிடம் அறுபட்ட மரம் போல இற்று விழுவது மானக் கேடாகும்)

- இராமியா