வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது இந்திய மக்களில் பார்ப்பனர் தவிர மற்றெல்லா வகுப்பார்களாலும் வெகு காலமாக அதாவது இந்திய பிரதிநிதித்துவம் என்கிற வார்த்தை என்றைக்கு ஏற்பட்டதோ அது முதல் அரசாங்கத்தாரைக் கேட்டு வரப்படும் ஒரு கோரிக்கை.

periyar mgr 358இக்கோரிக்கை ஏற்பட்ட காலமுதல் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் - குறிப்பாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல வழிகளிலும் தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் அது ஈடேறாமல் இருப்பதற்காக வெகு பாடுபட்டு வந்திருக்கிறார்கள். என்ன பாடுபட்டும் அரசியல் இயக்கங்களான காங்கிரசும் அரசாங்கமும் அதை ஒப்புக்கொண்டு அது ஒரு அளவு அமுலில் வரவும் ஏற்பாடு செய்தாய் விட்டது. உதாரணமாக, இந்தியாவிலுள்ள இந்திய மக்களில் மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், சீக்கியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், மகம்மதியரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், மகம்மதியரல்லாதாரில் பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியவர்களுக்கு பொதுவில் இத்தனை ஸ்தானங்களென்றும் பிரிக்கப்பட்டு 6, 7 வருஷ காலமாய் அதாவது மூன்று தேர்தலாய் அமுலில் வந்தாய் விட்டது.

அது போலவே காங்கிரசிலும் கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் சேர்த்து மொத்தத்தில் இத்தனை ஸ்தானமென்றும் தீண்டாத வகுப்பார் என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் ஒதுக்கப்பட்டு, அதுவும் சுமார் 5, 6 வருஷ காலமாய் அமுலில் இருந்தும் வருகிறது என்பதும் எல்லோரும் அறிந்த விஷயமே. இப்போது அதில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்தில் வகுத்திருக்கும் முறை காரியத்தில் பிரயோசனப்படாததாயும் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறாயும் இருப்பதால் அதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதே இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொல்வதின் பொருளே அல்லாமல் புதிதாக ஒன்றும் ஏற்பாடு செய்யவோ அல்லது கண்டு பிடிக்கவோ யாரும் கோரவில்லை. இக் கொள்கைகளை அரசாங்கத்தாரும் சுமார் 85 வருஷங்களுக்கு முன்னாலேயே ஒப்புக் கொண்டு 1840 -ம் வருஷத்தின் 125 வது ஸ்டேன்டிங் ஆர்டரில் விவரமாக சொல்லியிருக்கிறார்கள். அக்காலத்தில் இந்தியாவில் நிர்வாகம் செய்த வெள்ளைக்காரர்களும் இதை வற்புறுத்தி இருக்கிறார்கள்.

ஆனாலும் சகல உத்தியோகங்களும் பதவிகளும் அரசாங்கத்தார் கைவசமே இருந்து அவர்களே ஏறக்குறைய சரிவர வினியோகித்து வந்ததால் அதற்காக யாரும் கொள்கை ஒன்று ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இருந்து வரவில்லை. ஆனால் காங்கிரஸ் என்பதாக ஒரு ஸ்தாபனத்தை சிருஷ்டித்துக் கொண்டு அதை தேசப் பிரதிநிதித்துவம் பொருந்தியது என்று சொல்லி அரசாங்கத்தை மிரட்டி அவர்கள் மூலம் சில பதவிகளும், பிரதிநிதித்துவங்களும் அதிகமாய் வினியோகிக்க செய்ததில் அவைகள் காங்கிரசில் உழன்று கொண்டிருக்கிற பார்ப்பனர்களான ஒரு கூட்டத்தாருக்கே போய்ச் சேருவதைப் பார்த்த உடனும் மற்றவர்கள் காங்கிரசில் ஆதிக்கம் பெறமுடியாமலும் மற்றவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க முடியாமலும் கட்டுப்பாடாய் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்ததின் பலனாகவும் காங்கிரசில் விசேஷ தீவிரவாதிகளாய் இருந்த பார்ப்பனரல்லாதார்களில் வடநாட்டில் மகம்மதியர்களும் தென்னாட்டில் மகம்மதியரல்லாதார்களுமான பார்ப்பனரல்லாதாரும் காங்கிரசினால் ஏற்படும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிரதிநிதித்துவங்களையும் எங்களுக்கும் சமமாய் விகிதாச்சாரம் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காங்கிரசிற்கு விரோதமாயிருந்து அரசாங்கத்தாரிடமிருந்து நேரில் பெற பிரயத் தனம் செய்வோம் என்றும் வாதாடியதில் காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள் மகம்மதி யர்களுக்கு மாத்திரம் ஒப்புக்கொண்டு மற்றபடி மகம்மதியரல்லாத பார்ப்பனரல்லாதாருக்கு ஒப்புக் கொள்ளாமல் ஆnக்ஷபணை செய்தார்கள்.

இதன் பலனாய் அப்போது அரசியல் வாழ்விலும், காங்கிரசிலும், பிரதான ஸ்தானத் திலும், அநுபோகத்திலும் இருந்த ஸ்ரீமான்கள் டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்கள் தென்னிந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்பதாக ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தென்னிந்தியாவிலுள்ள பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரையும் சேர்த்து காங்கிரஸ் என்பது பார்ப்பன முன்னேற்றத்திற்கு ஏற்படுத்திய ஆயுதமே ஒழிய ஜனப் பிரதிநிதித்துவம் பொருந்தியதோ அல்லது எல்லா மக்களும் சம உரிமை அடையத்தக்கினதோ அல்லவென்றும், சுயராஜ்யம் என்பது பார்ப்பன ராஜ்யமே அல்லாமல் பொது மக்கள் ராஜ்யம் அல்லவென்றும் பிரசாரம் செய்ததின் பலனாய் காங்கிரஸ் ஆதிக்கமும் குலையத் தலைப்பட்டது. இதை அறிந்த பார்ப்பனர்கள் ஒன்று கூடி யோசித்து ஒரு தந்திரம் செய்தார்கள். அதென்னவென்றால் இப்போது ஸ்ரீமான்கள் சக்கரை, ஆரியா, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய காங்கிரசில் ஈடுபட்டிருந்தவர்களின் அபிப்பிராயத்தையும், அவர்களது பத்திரிகைகளையும் எதிர்க்க எப்படி ஸ்ரீமான்கள் மயிலை ரெத்தின சபாபதி முதலியார், பாவலர், குப்புசாமி முதலியார் என்கிற பெயர் உள்ளவர்களை தலைவர்களாக்கியும் “தேசபந்து” என்கிற பெயர் கொண்ட பத்திரிகையை உண்டு பண்ணவும் முயற்சிகளைச் செய்தார்களோ அதுபோலவே அப்போதும் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு என்கிற கனவான்களை தலைவர்களாக்கி “தேசபக்தன்” என்ற பத்திரிகையையும் உண்டாக்கி டாக்டர் நாயர் முயற்சிகளை ஒழிக்க பிரயத்தனப்பட்டார்கள்.

அதனால் அச்சமயம் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் டாக்டர் நாயர் போன்ற தேசபக்தர்கள் எடுத்துச் சொன்னவைகளை தேசம் நம்பியதே அல்லாமல் ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார், ‘தேசபக்தன்’ போன்றவர்கள் சொல்லுவதை ஜனங்கள் காது கொடுக்காததால் அதற்காக வேறு தந்திரம் எடுத்து, எதுபோலவென்றால் மகாத்மாவின் ஒத்துழையாமை ஆரம்பமானவுடன் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் எஸ்.சீநிவாசய்யங்கார் ஒத்துழையாமை சட்டவிரோதமென்று சொல்லியும் ஸ்ரீமான் கஸ்தூரிரங்க அய்யங்கார், எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி முதலியவர்கள் சென்னை ராஜதானி காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா கொடுத்து விட்டு வெளியில் போய் எவ்வளவோ தூரம் மகாத்மாவையும் ஒத்துழையாமையையும் தாக்கிப் பேசியும் எழுதியும் இவர்கள் ஜபம் செல்லாததால் நுழைந்து கொடுத்து உள்ளே போய் கூட இருந்தே ஒத்துழையாமையைக் குலைத்தார்களோ அதுபோல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் கேட்கும் வகுப்புவாரி உரிமையை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்பதாக இப்போது போலவே தேச பக்தி வேஷத்தைப் போட்டு, அதற்கெதிராக ஒரு சங்கத்தையும் ஸ்தாபிக்கச் செய்து அதற்கு வேண்டிய பணங்களையும் பிரசாரங்களுக்கும் பத்திரிகை நடத்துவதற்கும் பணத்தையும் கொடுத்து பார்ப்பனரல்லாதாரை இரண்டாகப் பிரித்து அச் சங்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு குறையச் செய்தார்கள்.

அச்சங்கத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்று தெரிந்தவுடனும் இவர்கள் பணம் கொடுத்து ஏற்படுத்தின சென்னை மாகாணச் சங்கமும் இப்பார்ப்பனர்களின் யோக்கியதையை அறிந்து கொண்டது என்று தெரிந்த உடனும் இச்சங்கத்தையும் ஒழிப்பதற்குச் சூழ்ச்சி செய்து இச்சங்கத்தில் முக்கியமாய் இருந்தவர்களையும் வசப்படுத்தி இதையும் அடியோடு ஒழித்து விட்டார்கள். இதன் பலனாய் என்ன ஏற்பட்டது? டாக்டர் நாயர் கட்சியாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் போய் அதற்கெதிரிடையாய்த் தாங்களும் அதையே கோருவதாகச் சொல்லிய சென்னை மாகாணச் சங்கத்தார் கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்ட தேசபக்தியும் போய், பழைய பார்ப்பன ஆதிக்கமே ஏற்பட்டு இதற்கு உதவி செய்த ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் பார்ப்பனர்கள் மேல் பிணக்கு கொண்டு காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து விலகுவதாய் மிரட்டியும் “நீங்கள் போனால் வேறொரு முதலியாரையும் நாயுடுகாரும் சேர்த்துக் கொள்ளத் தெரியும்” என்று சொல்லி வெளியிலேயே அனுப்பி விட்டு தங்கள் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்து வருவதும் உலகம் அறிந்தது.   

இதுபோலவே பார்ப்பனரல்லாத சங்கத்திற்கு அநுகூலமாய் சாக்ஷி சொல்ல சீமைக்குப்போன டாக்டர் நாயர், ஸ்ரீமான் எல்.கே. துளசிராம் இவர்களுக்கு மாறாக ஸ்ரீமான்களான ஒரு சக்கரைச் செட்டியாரையும் ஒரு செஞ்சையாவையும் சீமைக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்கள். இப்போது இந்தப் பார்ப்பனர்கள் யோக்கியதையை அறிந்து ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் அவர்களை விட்டு விலகியதும் அதற்குப் பதிலாக ஸ்ரீமான்கள் ஒரு ஓ.கந்தசாமி செட்டியார் என்பவரையும் முன் பார்ப்பனரல்லாதாருக்காக சாக்ஷி சொல்ல சீமைக்குப் போயிருந்த எல்.கே. துளசிராம் என்பவரையும் ஆசை வார்த்தைகள் சொல்லி தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு அப்போது ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் செய்த வேலையை இவர்களைக் கொண்டு செய்து வருகிறதோடு அவருக்குப் பதிலாய் இவர்களை உபயோகித்துக் கொள்ளப் போகிறார்கள். இவ்வளவு தீவிரமாகவும், இவ்வளவு பிரயத்தனமாகவும், இவ்வளவு செலவு செய்து கொண்டு இது சமயம் இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு விரோதமாய் கட்சி சேர்த்துகிறதின் முக்கிய நோக்கமென்னவென்றால் 1920த்தில் சில “சீர்திருத் தங்கள்” அரசாங்கத்தார் நமக்கு வழங்கியிருப்பதாகச் சொன்ன யாதாஸ்தில் “இன்னும் பத்து வருஷம் சென்ற உடன் இப்போது கொடுத்த சீர்திருத்தத்தை எப்படி உபயோகித்திருக்கிறீர்கள், மேல்கொண்டு உங்களுக்கு சீர்திருத்தம் கொடுத்தால் அதை சரியாய் உபயோகித்துக் கொள்ளக்கூடிய யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்கிறதை பரீக்ஷித்துப் பார்த்து இன்னும் சில சீர்திருத்தம் கொடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படி சர்க்கார் வழக்கம் போல் 1928லோ 1929லோ ஒரு கமிஷனை நியமிக்கப் போகிறார்கள். அந்த கமிஷனில் நமது பார்ப்பனர்களுக்கு மேல் கொண்டு “சீர்த்திருத்தம்” கொடுத்தாலும் சரி, கொடுத்திருப்பதையும் பிடுங்கிக் கொண்டாலும் சரி அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லை. எப்படியாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை ஒழித்து விட்டால் அதுவே பார்ப்பனர்களுக்கு சுயராஜ்யமளித்த மாதிரியாகையால் அதை ஒழிக்கக் கட்சியும், பலத்தையும் சேர்க்கத்தான் இவ்வளவு தந்திரங்களும் சூழ்ச்சிகளும் பணச்செலவும் செய்வதே தவிர வேறில்லை. அதனால் தான் பார்ப்பனர் என்ற கூட்டமே அடியோடு ஆண் பெண் அடங்கலும் கட்சி பேதம், அபிப்பிராய பேதம் இன்றி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதற்காகவே ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியாரும் அடிக்கடி பட்டணம் போவதும் ஸ்ரீமான் சீநிவாசய்யங்கார் வெற்றிக்காக காத்திருப்பதும் அவர்கள் கூட்டங்களில் பேசுவதும் வகுப்புவாதம் மாத்திரம் கூடாது என்பதும் ஆகிய தந்திரங்களை செய்து வருவதும் ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரிகள் வகுப்புவாதம் கூடாது என்பதும் பார்ப்பனரல்லாதாரிலும் மகம்மதியர்களிலும் கிறிஸ்தவர்களிலும் தீண்டாதார் என்னும் வகுப்புகளிலும் கூலி கொடுத்து ஆள்களைப் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்று சொல்லச் செய்வதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அரசியலில் பேசக் கூடாது என்று சொல்லச் செய்வதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். ஆதலால், தமிழ் மக்கள் இது சமயம் ஏமாந்து போகாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தையும், அதற்கெதிரிடையாய்ப் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரத்தின் நோக்கத்தையும், பார்ப்பனர்களுக்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் பார்ப்பனர் அல்லாதார் கூலிப்பிரசாரம் செய்யும் நோக்கத்தையும், அவர்களுடைய யோக்கியதைகளையும் முன் பின் அபிப்பிராயங்களையும் பாமர மக்கள் சரியாக உணரும்படியான பிரசாரங்களைச் செய்து எப்படியாவது அதை அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்ய வேண்டி வற்புறுத்துகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 21.11.1926)