தமிழர்கள் வாழ்க்கையில் பார்ப்பனர்கள் சமஸ்கிருத சடங்குகளைப் புகுத்துவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சிகளை ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் அம்பலப்படுத்துகிறார். அவரது நூலிலிருந்து:

ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன் விசயநகர மன்னர், தமிழ்நாட்டில் புகுந்து ஆளத் தொடங்கினர். அவர்களுக்கு வடமொழியிற் பற்று மிகுந்திருந்ததால் தமிழ் நாட்டவர் சடங்குகள் அனைத்தையும் அம்மொழியிலேயே நிகழ்த்தினால் நல்லது என்று நம்பினர். அதனால், ஆயிரக்கணக்கான ‘புரோகிதர்’களை ஆந்திர நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழ் நாடெங்கணும் ஊருக்கு ஒருவராய்க் குடியேற விட்டனர். அவர் களுக்கு வேண்டிய வீட்டு வசதி, வாழ்க்கை வசதிகளையெல்லாம் செய்து தந்து, ஒவ்வொருவருக்கும் சடங்கு செய்து வைக்கக்கூடிய எல்லைகளையும் வகுத்துத் தந்தனர்; குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சடங்குகள் அவ்வளவையும் ஒரு புரோகிதரே நடத்தி வைக்கும் தனி உரிமையையும் வழங்கினர். இப் புரோகிதர் குடியேறிய பிறகே, தமிழர் வீட்டுச் சடங்குகள் அனைத்தும் இப் புரோகிதர்களால் வடமொழியில் நடத்தி வைக்கப் பெறலாயின.

சிலப்பதிகாரத்தில் காணப்படும் ‘மாமுது பார்ப்பான்’ என்பது வள்ளுவர் குறிப்பிடும் அந்தணரைக் குறிக்கும்; ‘அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டெழுக லான்’ என்பது வள்ளுவர் வாய்மொழி.

முதன்முதலிற் சடங்குக்குரிய மந்திரங்களை ஆந்திரப் புரோகிதர் வடமொழியில் சொல்வதெனத் தொடங்கிய போது, தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த வடமொழிப் பற்றாளர் அதனை எதிர்த்தனர். “நாட்டில் வேறு பகுதியிலிருந்தவர் இங்கு வந்து பிழைப்பிற்கு வளமான வழியைப் பெற்று விட்டார்களே!” என்னும் மனக்குறை அதற்குக் காரணமாயிருக்கலாம். தமிழிற்கு மாற்றாக வட மொழியில் மந்திரம் சொல்வதனை உள்ளூர விரும்பினராயினும், எதிர்ப்புப் பெருகாமலில்லை. புரோகிதர் நாயக்க மன்னருடன் கலந்து பேசினர். அவர்களுக்கு வாய்ப்பான முடிவு ஒன்று தோன்றியது. “வடமொழி மந்திரங்களைப் பிராமணர் அல்லாதவர் காதில் படுமாறு சொன்னால் சொல்லுபவர்க்கும் பாவம்; கேட்பவர்க்கும் பாவம்” என்னும் தடையைப் போக்குதற்கு ஒரு சூழ்ச்சி செய்தனர். (பார்ப்பனரல்லாதாரிடம் இதைப் புகுத்தினால்தான் வருமானம் கிடைக்கும் என்பதே நோக்கம்)

“சடங்குக்குரியவர்களை முதலிற் பூணூல் போட்டுப் பிராமணர்களாக்கி விட்டுப் பிறகு, வடமொழி மந்திரங்களைச் சொல்வது” என்று முடிவு செய்தனர். இம் முடிவிற்கும் எதிர்ப்புத் தோன்றிற்று. “பூணூல் போடுவதால் மட்டும் ஒருவர் பிராமணர் ஆகிவிட மாட்டார்” என்று தடை எழுப்பினர். அத் தடையினை வெல்லும் முறையில் பிறிதொரு சூழ்ச்சி உருவாக்கப்பட்டது. திருமணக் காலத்திலே மாப்பிள்ளைக்குப் பூணூல் போட்டதும், அவர் காசிக்குச் சென்று வேதம் ஓதிவிட்டு வருவதாய்க் கருதி ‘காசி யாத்திரை’ என்னும் ஒரு சடங்கினை நுழைத்தனர். இவ்வாறாய்ப் புரோகிதர் வேலைக்கு ஏற்பட்ட தடங்கல்கள் மன்னனின் வல்லமையாலும், புரோகிதர்களின் சூழ்ச்சித் திறத்தாலும் வெல்லப் பட்டன.

மக்களுக்கு முதலிற் பிடிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். கண்ணைக் கட்டிவிட்டதுபோல அயல்மொழியில் குருட்டுத்தனமாய்ப் புரோகிதர் சொல்லும் மந்திரங்களை உச்சரிக்க மாட்டாமல் தப்பும் தவறுமாய்ச் சொல்வதிலே அறிவுடையவர்க்கு அருவருப்பு இருந்திருக்கும். என்றாலும் அரசர் ஆட்சி முறையின் பகுதியாதலின் இவ் வடமொழிச் சடங்குகளை மக்கள் வாய்மூடி ஏற்றுக் கொள்ளலாயினர். நானூறாண்டுகளாய் நாட்டில் நிலைத்து விட்ட இவ் வடமொழிச் சடங்குமுறை, சில ஆண்டுகளாய்த்தான் ஆட்டங் காணத் தொடங்கி யிருக்கிறது. என்றாலும், பெங்களூரிலிருந்து திருநெல்வேலி வரை ஊருக்கொருவராய் அமர்ந்திருக்கும் புரோகிதர் இன்னமும் சடங்காட்சி செய்துதான் வருகின்றனர்.

- ‘என் வரலாறு’ நூலிலிருந்து

Pin It