ஊர்காக்கும்
காவல் தெய்வமாய்
மையத்தில்
வீற்றிருக்கிறாள்
வேம்பு வடிவில்
காளியம்மன்
மஞ்சள் பட்டுடுத்தி
சந்தனம்
குங்குமம் வைத்து
நித்தம் நடக்கும்
படையலுடன் பூசை
ஆடிக் கொடை கூடி
அம்மனுக்கு
காப்பு கட்டி
கரகமேந்தி
பூக்குழி இறங்கி
நேர்த்திக் கடன் செலுத்தும்
ஊர்க்குடி
அம்மனே அன்னையென
மரமே தெய்வமென
அருளே வளமென
நம்பிக்கையுடன்
வாழ்ந்தனர்
அவள் பெற்ற
பிள்ளைகள்
அரையடி
அதிகமாக
கடமை உணர்வூறி
இரவோடிரவாக
விருட்சத்தை
வேரோடு சாய்த்தது
நில அளவைத்துறை
இனி
வளம் கெட்டுப்போகும்
என்றும்
வாழ்வழிந்து போகுமென்றும்
குறி சொல்லி
கதறியழுதான்
உள்ளூர்க் கோடாங்கி
குறி பலித்து
குளம் வற்றி
வயல் வறண்டு
வயிறு சுருங்கி
உயிர் மடிந்து
பஞ்சம் பிழைக்க
வேற்றூர் பார்த்து
கிளம்பியது
மனிதக் கூட்டம்
மக்கள் சபிக்கப்பட்டு
காலியான
ஊரின் மத்தியில்
புதியதாய்
முளைத்திருந்தது
பன்னாட்டு நிறுவனமொன்றின்
வர்த்தக மையம்
கீற்றில் தேட...
சாமிக்குத்தம்!
- விவரங்கள்
- அதீதன்
- பிரிவு: கவிதைகள்