பெருமாள்குளம்
எங்கள் ஊரின் பெரியகுளம்

கிழக்குக்கரை பிணங்கள் எரித்து
கருமாந்திரம் முதலான காரியங்கள் செய்ய,
மேற்குக்கரை பெண்களுக்கு மட்டும்,
வடக்குக்கரை ஆண்கள் குளிக்க,
தெற்குமூலை சேரிக்கு.

ஒருபோதும்
கரைமாறி குளித்ததில்லை யாரும்.
அகால வேளைகளில்
அருகாமைச் சாலைகளில் வரும்
பாரவண்டி ஓட்டிகள்
கால்அலம்பக் கூட கரைமாறிப் போவதில்லை

அம்மன் தெப்பத்தில் அமர்ந்து வரும்
திருவிழா நாளில் மட்டும்
கரைமாற்றம் கச்சிதமாய் நடக்கும்.

மேற்குக்கரை வந்த வாலிபர்கள்
மைத்துனிகள் மஞ்சள் தேய்த்து குளித்த
மருதாணிச் சிவப்பை
அலைவந்து தொட்டுத்தடவிச் செல்வதை
ஏக்கத்துடன் பார்ப்பார்கள்...
அரசமரத்துப் பிள்ளையாரை முறைத்தபடி.

வடக்குகரை வந்த இளம்பெண்கள்
காளையர் குளித்த தண்ணீர் பட்டவுடன்
உள்ளங்காலில் ஏறும் நினைவுச்;சூட்டில்
உருகிப் போவார்கள்.

கிழக்கு கரையிலோ முழங்கால் தண்ணீரில்
சாமி பார்க்க நிற்பார்கள் பயமேதுமின்றி.

தெற்கு மூலையில்
தெற்கு மூலையில்

தெப்பம் பார்க்க வந்த
வெளியூர் கூட்டம் மட்டும்.