“வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.” அண்மையில் திமுக தலைவர் பேசிய பேச்சு வரவேற்கக் தக்கது.
ஆம் நிச்சயமாக விஜயலட்சுமியும் வேதாச்சலமும் வடமொழிச் சொற்கள் என்பதால் நாங்கள் வெற்றிச் செல்வி என்றும் மறைமலை என்றும் தூய தமிழில் பெயர் மாற்றிக் கொண்டோம். ஆனால் கலைச்செல்வியும் செங்குட்டுவனும் தற்போது ஜாஸ்பர்ஜோதி என்றும் ஜெய்கரன்ஜோசப் என்றும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றிக் கொண்டால் அவைகளையும் தூயத் தமிழ் பெயர்கள் என்று நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!?
கற்பூரம் கொளுத்துவதும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதும் மூடத்தனம் என்று நீங்கள் சொன்னதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் மெழுகுவத்தி கொளுத்துவதும் சிலுவை மாட்டிக் கொள்வதும் பகுத்தறிவின் அடுத்த கட்டம் என்று சொன்னாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!?
எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட மாட்டார்கள். சமைக்கப்படாத அரிசி காய்கறிகளை மட்டும் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் சொன்னதை ஏற்று, தீண்டாமைக்கு எதிராக அணிதிரண்டோம். ஆனால் எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் சாப்பிட்டால் புனிதம் கெட்டுவிடும் என்றும் கவரில் பணமாக மட்டும் கொடுத்து விடுங்கள் என்று தேவாலயத் தலைவர் சொன்னால் அதை நாங்கள் தீண்டாமையின் மறுஉருவம் என்று நினைத்துவிடக் கூடாது.!?
சாமியார் ஒருவர் நாக்கிலிருந்து லிங்கத்தை எடுத்துத் தந்தால் அதற்குப் பெயர் ஏமாற்றுவேலை. ஆமாம் நிச்சயமாக. ஆனால் கண் தெரியாதவர்க்குப் பார்வை கிடைத்துவிடும் என்று ஜெபவுரை நிகழ்த்தினால் அதை நம்பி முக்காடு போட்டுக் கொண்டு நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்!?.
ஆண்டுக்கு ஒரு முறை மாரியம்மாவிற்குக் கூழ்ஊற்றி குடமுழக்கு நடத்தினால் அது பணத்தை வீணாக்கும் பயனற்ற வேலை. ஆனால் மணிக்கு ஒரு முறை மணியடித்து பைபளிள் வசனங்கள் ஓதப்படுவதைக் கேட்டுக் கொண்டிருந்தால் அது நேரத்தைப் பயன்படுத்திடும் முறையான செயல்பாடு.!?
தாழ்த்தப்பட்டோர் வாழும் குடியிருப்புகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கிராமக் கோயில்களைப் புனரமைக்க நன்கொடை அளிப்பது தேவையற்றது. ஆனால் எங்கிருந்துதான் பணம் வருகிறது என்பதைத் தெரியப்படுத்தாமல் பல இலட்ச ரூபாய் மதிப்பில் திடீரென முளைக்கும் கிருஸ்துவ தேவாலயங்கள் புனிதமானது!?
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு எங்கள் வீட்டுக் கடவுள் படங்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டோம். ஆனால் எங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் கிருஸ்துவ மதக் காலண்டர்களை மட்டும் நாங்கள் எங்கள் வீட்டுச் சுவர்களில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.!?
இந்து மதநம்பிக்கைகளிலிருந்து விடுபடச் சொல்லும் நீங்கள் இன்னொரு மத மூடநம்பிக்கைப் படுகுழியில் விழுவதை எதிர்ப்பதில்லையே ஏன்?
அது என்ன ஆவிகளுக்குரிய எழுப்புதல் கூட்டம்? அந்தக் கூட்டத்தில் ஒரு நாளாவது நீங்கள் உட்கார்ந்து பார்த்ததுண்டா? ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் ஆவிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டுமா?
தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் அம்பேத்கர் மதமாற்றத்திற்கு வழிகாட்டியுள்ளதை ஏற்றுக்கொண்டு இந்து மதத்தை விட்டுத் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்ற குரல்கள் எழுப்பப் படுகின்றன.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, 19.12.1973ல் நாகப்பட்டினத்தில் தந்தை பெரியாரின் உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சம் “இந்தத் தீர்ப்பினை முறியடிக்க ஒரே வழி திராவிடர் அனைவரும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதே” (ஆதாரம் : பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் பக்கம் 8, சிந்தனையாளர் கழகம் வெளியீடு).
டாக்டர் அம்பேத்கர் சொன்னது போல் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் இந்துமதத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறவர்கள் திராவிடர்கள் (பார்ப்பனர்கள் அல்லாதவர்கள்) அனைவரும் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியாரின் சொற்பேச்சைக் கேட்காதது ஏன்? அவர் பேச்சைக் கேட்டு எத்தனை திராவிட இயக்கத்தினர் இந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டனர்?
டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றக் கொள்கை எப்போதும் திசை திருப்பப்பட்டே பிரச்சாரம் செய்யப்படுகிறது. அம்பேத்கர் புத்தநெறியை நோக்கித் தான் மதம் மாறச் சொன்னாரே தவிர கிருஸ்துவ முஸ்லீம் சீக்கிய மதங்களை நோக்கி அல்ல. ஆனால் அம்பேத்கர் மதம் மாறச் சொன்னார் என்ற அரைவாக்கியத்தை மட்டும் வைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்டோரை ஏமாற்றுவது என்பது ஏற்புடையதல்ல.
எனினும் அம்பேத்கரின் மதமாற்றக் கொள்கை பற்றிக் கொஞ்சம் கூர்ந்து நோக்கவேண்டியுள்ளது. 13.10.1935ல் நாசிக் லயோலா மாநாட்டில் தனது மதமாற்றம் குறித்த கருத்தை வெளியிட்ட அம்பேத்கர் “இந்துவாகப் பிறந்த நான் இந்துவாக இறக்கமாட்டேன்” என்று உறுதிபட அறிவிக்கிறார்.
அவரின் அந்த அறிவிப்பைக் கேட்டதும் அக்காலத்திலிருந்த தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.
பம்பாய்த் தீண்டப்படாத வகுப்புத் தலைவர் தியோருகர்: “வேறோர் மதத்தைத் தழுவுவது பயன்தராது. இந்து மதத்தில் தீண்டப்படாதவர்கள் இழிந்த நிலையினராக இருக்கக் கூடிய நிலை மாறி, அவர்கள் வேறொரு மதத்தில் தீண்டப்படாதவர்களாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லா மதங்களிலும் சமத்துவமின்மை ஏதோ ஒரு வடிவில் இருந்து கொண்டிருக்கிறது”.
பம்பாய் தீண்டப்படாதவர்களின் மற்றொரு தலைவர் கஜ்ரோல்கர்: “தீண்டப்படாதவர்கள் நம்பிக்கையற்றுக் கிடந்த காலத்தில் அவர்களை வழிநடத்திய அம்பேத்கர் மதம் மாறுங்கள் என்று கூறியிருப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கலாம், மதம் என்பது விற்பது அல்லது வாங்குவது போன்றதன்று.”
இரட்டைமலை சீனிவாசன்: “தீண்டப்படாதவர்கள் மதம் மாறிச் சென்றால் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இது ஆதிக்கவாசிகளுக்கு ஊக்கந்தருவதாக அமைந்துவிடும். நாம் நம்முடைய உரிமைகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும். இதுவே ஆண்மையும் சிறந்த அறிவுரையும் ஆகும்.”
பூனா மதமாற்றக் கருத்தாய்வு மாநாட்டில் தாழ்த்தப்பட்டோரின் இன்னொரு தலைவர் என்.சிவராஜ் : “இந்தியாவில் இப்போதுள்ள ஏதாவதொரு மதத்திற்கு மதமாற்றம் செல்வதன் மூலம் தீண்டப்படாதவர்கள் தீண்டாமையிலிருந்து விடுபட முடியும் என்று எண்ணிட வேண்டியதில்லை. நாமாக ஒரு புதிய மதத்தை அமைப்பதன் மூலமோ அல்லது பல்வேறு சடங்குகளைக் கொண்ட இந்து மதத்தை ஆரியர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு முன்னர் ஆதித்திராவிடர்கள் கடைப்பிடித்த மதத்தை மீண்டும் புதுப்பித்தல் மூலமாகவோ நாம் தீண்டாமையிலிருந்து விடுபடலாம்”
அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பிற்கு அடுத்து சீக்கிய முஸ்லீம் கிருஸ்துவ புத்த மதத் தலைவர்கள் தத்தமது மதங்களுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர்.
தேசியத் தலைவர்கள், தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள், மதத்தலைவர்கள் அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த அம்பேத்கர் 12,13.01.1936 பூனா இளைஞர் மாநாட்டில் மதமாற்றம் குறித்த தனது நிலைபாட்டை அறிவித்தார். அந்த மாநாட்டு உரையில்,
“எந்தவொரு மதத்தில் சேர்ந்தாலும் அங்கும் சுதந்திரத்திற்காகவும் சமத்துவதற்காகவும் போராட வேண்டியிருக்கும். கிருஸ்துவ மதத்திலோ இஸ்லாமிய மதத்திலோ சீக்கிய மதத்திலோ சேர்ந்தாலும் நாம் நம் நல்வாழ்விற்காக அங்கும் போராடி வேண்டியிருக்கும். எந்த மதத்தில் சேர்ந்தாலும் இந்த நிலைதான் இருக்கும் என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். முகம்மதியாராக மதம் மாறிவிட்டால் நம்மில் ஒவ்வொருவரும் நவாபாக ஆகிவிடுவோம் என்றோ, கிருஸ்துவ மதத்தில் சேர்ந்தால் ஒவ்வொருவரும் போப் ஆக உயர்ந்து விடுவோம் என்றோ எண்ணுவது முட்டாள்தனமாகும்.
நாம் நடத்துகிற போராட்டம் பசியை நீக்குவதற்காக அன்று. புனிதமான நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது என்பது ஐயத்திற்கிடமின்றி தற்போது தெளிவாகிவிட்டது. இல்லாவிட்டால் நம்மை அவர்கள் பக்கம் இழுப்பதற்காகப் பணம் தர முன்வருவார்களா? மதமாற்றத்திற்காக 7 கோடி ரூபாய் தருவதற்கு ஐதராபாத் நிசாம் தயாராக இருப்பதாகப் பலவாறாகச் சொல்லப்படுகிறது. கடவுளுக்காக என்பதால் இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வருகிறார்களே தவிர மற்றபடி அவர்களிடமிருந்து பணத்தை வாங்கவே முடியாது.
ஜாதி இந்துக்கள் உதவினாலும் அல்லது தடுத்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் மதம் மாறுவது என்று முடிவு செய்துவிட்டேன். கடவுளையே என் கண் முன் நிறுத்தி இந்துமதத்தை விட்டுப் போகாதே என்று சொன்னாலும் மதம் மாறுவது என்ற என் முடிவிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன். இந்து மதத்தில் இருந்துகொண்டே தீண்டப்படாதவர்கள் சமத்துவத்திற்காகப் போராடுவதற்காக ஜாதி இந்துக்களுடன் உடன்பாடு செய்தால் நாம் விதிக்கிற நிபந்தனைகளை இந்துக்கள் என்றுமே நிறைவேற்ற மாட்டார்கள்.” (ஆதாரம்: பக்கம் 383, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, ஆங்கில மூலம் தனஞ்செய் கீர், வெளியீடு: மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 12,06,1992)
பூனா இளைஞர் மாநாட்டில் இந்து மதத்திலிருந்து வெளியேறப் போவதை உறுதிபடுத்திய அம்பேத்கர் அதன் காரணமாக முஸ்லீம், சீக்கிய, கிருஸ்துவ மதத்திற்கோ மாறப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். ஆனால் 15 ஆண்டுகளாகத் தங்களின் மதமாற்றத்திற்கு ஏற்ற மதம் என்பதை அறிவிக்காமலேயே இருந்தார்.
1950ல் புத்தர் பிறந்த நாள் விழாவில் சிலை வடிவ வழிபாட்டிற்கு எதிராகப் பேசிய அம்பேத்கர்,
“புத்தர் தன்னைக் கடவுளாகக் கருதாமல் ஒரு வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். கிருஷ்ணனோ கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் நானே என்றார். ஏசு கிருஸ்து தன்னைக் கடவுளின் மகன் என்று கூறிக் கொண்டார். முகம்மது பைகாம்பர் (நபி) தன்னை கடவுளின் கடைசித் தூதர் என்று அறிவித்துக் கொண்டார். மேற்படி 3 மத நிறுவனர்களும் தங்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர்களாகவே காட்டிக் கொண்டனர். ஆனால் புத்தர் மட்டும் தான் சொர்க்கம் நரகம் மறுபிறவி போன்றவற்றை நம்பவில்லை. கடவுள், ஆன்மா, ஆவி போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். மற்ற மதங்கள் கடவுளை வழிகாட்டிய நிலையில் புத்தர் மட்டும் நல்லொழுக்கத்தை வழிகாட்டினார். இந்து கிருஸ்துவ முஸ்லீம் மதங்களில் கடவுள் இடம் பிடித்திருந்த இடத்தில் புத்த மதத்தில் மட்டும் நன்னெறி இடம் பிடித்திருந்தது.”
அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறினாலும் கிருஸ்துவ முஸ்லீம் சீக்கிய மதங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. “பாரதப் பண்பாட்டிலிருந்து விலகாத பகுத்தறிவு சார்ந்த மதமே புத்தமதம். பிற மதங்கள் யாவும் அறிவியலுக்கு ஏற்புடையவை அல்ல” என்ற கொள்கையின் அடிப்படையில் தான் அம்பேத்கர் தனது மதமாற்றக் கொள்கையை இறுதி செய்கிறார்.
உலக அளவில் உன் மதம் பெரியதா என் மதம் பெரியதா என்ற கோணத்தில் பல மதப்போர்களை உருவாக்கிய கிருஸ்துவ மதமும் முஸ்லீம் மதமும் தாழ்த்தப்பட்டோரைத் தங்கள் மதங்களுக்குள் இழுக்கப் போட்டியிடுகின்றன. அம்பேத்கரின் மதமாற்றக் கொள்கையைத் திசைதிருப்பிப் பட்டியல் வகுப்பினரிடம் ஏமாற்றுப் பிரச்சாரம் செய்கின்றனர்.
வரலாற்றின் படி தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தைப் பின்பற்றினர் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
இயற்கை வழிபாடு, முன்னோர் வணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே பூர்வகுடி இந்தியரின் வாழ்க்கை முறையாகும். ஆரியர்கள், முகலாயர்கள், கிருஸ்துவர்கள் வருகைக்குப் பின்னரும் தங்களின் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளாதவர்களே பட்டியல் வகுப்பினர் ஆவர்.
1881 முதல் 1911 வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது கிருஸ்துவ முஸ்லீம் சீக்கிய புத்த ஜைன மதங்களைப் பின்பற்றாதவர்கள் அனைவரும் இந்துக்கள் என அடையாளப்படுத்தனர். ஆனால் தீண்டப்படாதவர்கள் யார் என்று வகைப்படுத்தப்படும்போது 10 கூற்றுகளின் அடிப்படையைக் கவனித்தில் கொண்டனர். அந்தப் பத்துக் கூறுகளில் பெரிய இந்துக் கடவுள்களை வணங்காதவர்கள், பார்ப்பனச் சடங்குகளை ஏற்காதவர்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள் முதலானோர் கணக்கிடப்பட்டனர்.
இவ்வாறு கணக்கிடப்பட்ட தீண்டப் படாதவர்களை இந்து மதத்தில் சேர்க்க முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததனர். இந்து மதத்தில் பாதியும் முஸ்லீம் மதத்தில் பாதியும் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் தீண்டப்படாதவர்களாகக் கணக்கிடப்பட்டவர்கள் யாவரும் இந்து முஸ்லீம் கிருஸ்துவம் ஆகிய எந்தக் கடவுள் கொள்கைகளையும் பின்பற்றாதவர்களாக இருந்தனர் என்பதே உண்மையாகும்.
குறிப்பாக முன்னோர் வழிபாடு, இயற்கை வழிபாடு, வழிபாட்டு முறையே இல்லாமை போன்ற காரணகிகளுடன் அவர்கள் திகழ்ந்தனர்.
முஸ்லீம் மதத்தில் தொழுகை என்பது கட்டாயமாகும். ஆனால் இந்து மதத்தில் நாத்திகக் கொள்கைக்கும் இடம் உண்டு. ஆகவே தீண்டத் தகாத மக்கள் தங்கள் விருப்பம்போல் கடவுள் வழிபாட்டுக் கொள்கையைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதற்கு இடந்தரக்கூடிய வகையில் இந்து மதத்தில் கணக்கெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினரே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் என்று பிற்காலத்தில் வரையறை செய்யப்பட்டனர். இவர்கள் இந்துக் கடவுளை வணங்கவும் வணங்காமல் இருக்கவும் உரிமை பெற்றுள்ளனர்.
எனவே பட்டியல் வகுப்பினர் என்பவர் எந்தக் கடவுளரையோ மதத் தலைமையையோ ஏற்கவேண்டியதில்லை என்பதையே வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
தலித் கிருஸ்துவர்களைப் பட்டியல் வகுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கோரியுள்ளார். தமிழ் பற்றை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்வதில் கலைஞர் ஒருவரே முன்னோடி என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தலித் என்ற அந்நிய மொழிச் சொல்லை அவர் தாழ்த்தப்பட்டோரின் தலையில் திணிப்பது ஏன் என்று தெரியவில்லை. தாழ்த்தப்பட்டோரைத் தமிழிலிருந்து அந்நியப்படுத்த நினைப்பது ஏற்புடையதா? அம்பேத்கர் சொன்ன பட்டியல் வகுப்பினர் என்ற சொல்லையும் பட்டியல் வகுப்பினர் அனைவருக்கும் பொதுவாகப் பெரியார் சொன்ன ஆதிதிராவிடர் என்ற சொல்லையும் புறந்தள்ளுவது ஏன்?
பட்டியல் வகுப்பினர் என்ற சொல்லிலும் ஆதிதிராவிடர் என்ற சொல்லிலும் தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லிலும் வரலாறு நிரம்பியிருக்கிறது. எந்த வரலாறும் அவரவர் தாய்மொழியில் சொல்லப்பட வேண்டும் என்கிற கொள்கையுடைய கலைஞர் தலித் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவது வருத்தத்திற்குரியதே.
இந்து மதத்திலிருந்து கிருஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியல் வகுப்பினரைத் தான் கலைஞர் அவர்கள் தலித் கிருஸ்துவர்கள் என்று கூறுகிறார். அவர்கள் இந்து மதத்தை விட்டுக் கிருஸ்துவ மதத்திற்கு மாறினாலும் இழிநிலை மாறவில்லை. பொருளாதார நிலை மாறவில்லை. உரிய சமத்துவம் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் இரண்டு வேறுபட்ட கருத்து இல்லை.
அம்பேத்கர் மதம் மாற்றக் கொள்கையை வெளியிட்டபோது இந்து மதத் தலைர்களில் ஒருவரான சவார்க்கர் “தற்போதைய மதக் கோட்பாடுகள் அறிவுக்கோ அல்லது காரண செயல் ஆய்வுக்கோ பொருந்தாதவையாக இருக்கின்றன. ஆகவே அம்பேத்கர் தத்துவயியலுக்கும் அறிவுக்கும் தாராளமாக இடந்தரக்கூடிய ஒரு மதத்தைத் தழுவிட வேண்டும்” என்று கூறிய அதே நேரத்தில் மதம் மாறிய பிறகு கிருஸ்துவ மதத்திலோ முஸ்லீம் மதத்திலோ தீண்டப்படாதவர்கள் சமமாக நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. திருவிதாங்கூரில் தீண்டப்படக் கூடிய கிருஸ்துவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையேயான மோதலைச் சவார்க்கர் சுட்டிக் காட்டினார்.
அன்று சவார்க்கர் சொன்னது இன்றும் தொடர்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் கிருஸ்துவ மதத்தை நோக்கிச் சென்றாலும் அவர்கள் தீண்டாப் படாதவர்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்வாதார நிலை மாறவேயில்லை. தனிசுடுகாடு, தனிவழிபாட்டுத்தலம் என்று அங்கேயும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். மதம் மாறிய பிறகும் அவர்களின் பொருளாதார சமூக நிலையில் முன்னேற்றம் கிடைக்காததால் அவர்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியதாகவே உள்ளது.
ஆனால் சிறுபான்மையினர் நடத்துகிற கல்வி நிறுவனங்களில் பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர்க்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 62 கல்லூரிகள் சிறுபான்மையினர் வசம் உள்ளன. மேற்படி கல்லூரிகளிலும் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப் படுவதில்லை. அந்தக் கல்வி நிறுவனங்களில் 1சதவிகிதம் கூட பட்டியல் வகுப்பினர்க்கோ 0.1 சதவிகிதம் கூட பழங்குடியினர்க்கோ வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு மட்டுமின்றி படிப்பதற்கான இடங்கள் கூட 19 சதவிகிதம் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குப் பணிவிடை செய்த உயர்ஜாதி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு நிலங்கள் வழங்கப்பட்டன. அந்த நிலங்களில் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொண்டனர். ஆனால் பட்டியல் வகுப்பினர்க்குக் கல்வி நிறுவனங்கள் கட்டுவதற்கு ஒரு சதுர அடி நிலத்தைக் கூட ஆங்கிலேயர் வழங்கவில்லை.
“தீண்டத்தகாத மக்களுக்குக் கல்வி அளிக்கலாம். ஆனால் அதற்கு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமானால் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.” என்பது தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஹண்டர் ஆணையத்தின் (1882) பரிந்துரையாக இருந்தது.
தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினால் மட்டுமே அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் உயர்ஜாதி இந்துக்கள் மதம் மாறாவிட்டாலும் கல்வி நிலையங்கள் அமைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. (சான்றாக பச்சையப்பா கல்வி நிறுவனங்கள்)
ஆங்கிலேய ஆட்சிக்கு அடுத்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட அரசு உதவி பெறும் கல்விநிறுவனங்களில் பட்டியல் வகுப்பினர்க்கு என்று ஒரே ஒரு சதவிகிதம் கூட இது வரை இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக்கீட்டைப் பெற இது வரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் பட்டியல் வகுப்பினரின் உரிமைகளில் மட்டும் கிருஸ்துவர்களுக்குப் பங்கு கேட்பது எப்படி நியாயமாகும்?
கிருஸ்துவ மதத்திற்கு மாறிய பிறகும் அவர்களின் இழிநிலை மாறவில்லை என்று சொன்னால் மதம் மாறி என்ன பயன்? என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குச் சிறப்பு இடஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அதற்கான ஒதுக்கீட்டைப் பட்டியல் வகுப்பினர்க்கு உரிய 18 சதவிகிதத்திலிருந்து பங்கிடுவது ஏற்புடையது ஆகாது. அவர்கள் தற்போது இடம் பெற்றிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் தான் உள்ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அதேபோல் மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலுக்குள் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்படுகிறது. பழங்குடியினரின் புவிநிலை வாழ்வியல் முறைக்கும் பண்பாட்டு முறைக்கும் ஒடுக்கப்பட்ட முறைக்கும் மீனவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் ஆவர். பழங்குடியினரின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் ஒப்பிடும்போது மீனவர்களின் வாழ்வியலும் வரலாறும் முற்றிலும் மாறுபட்டது.
இடஒதுக்கீடு என்பது பொருளாதார அளவுகோலை மையப்படுத்தி இந்தியாவில் வழங்கப்படுவதில்லை. சமூகரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டுத் தீண்டாமை நோயினால் அதிகம் துன்பப்பட்டவர்களுக்கே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே பழங்குடியினர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மீனவர்கள் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் வேற்றுமை நிறையவே உள்ளன.
மீனவர்களின் சமுதாயப் பொருளதார நிலை முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் அவர்கள் தற்போது இடம் பிடித்திருக்கும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
ஏதோ பழங்குடியினர்க்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அளவுக்கு அதிகமாக உள்ளது போலவும் நிரப்பப்படாத மீதியிடங்கள் நிறையவே உள்ளது போலவும் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட பழங்குடியினர்க்கு 1 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள மீனவர்களைப் பழங்குடியினரின் பட்டியலில் சேர்ப்பது எப்படி சரியானதாக இருக்கும்? அப்படியெனில் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டு அளவை 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்த வேண்டாமா?
மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு வழங்கப்படும் 20 சதவிகிதத்தில் 1.5 சதவிகிதத்தைக் குறைத்துப் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 2.5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். மேற்படி எவ்வித திட்டமிடலும் இல்லாமல் மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதா?
மீனவர்களுக்கும் முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ மதங்களுக்கும் எதிரான கருத்துக்களைச் சொல்வதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்விற்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோரின் விடியல் என்றால் அந்த விடியலைத் தந்வர்கள் டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் ஆவர். எனவே டாக்டர் அம்பேத்கர் சொன்னது போல் கிருஸ்துவ முஸ்லீம் மதங்களைத் தவிர்த்துப் புத்தநெறியைத் தேர்ந்தெடுப்பதும், தந்தை பெரியார் சொல்வது போல் கடவுள் மறுப்பைத் தேர்ந்தெடுப்பதும் தாழ்த்தப்பட்டோருக்கு விடியலையும் சுயமரியாதையையும் தரும் என்பதை அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
- சி.சரவணன் 9976252800