கண்களை மேசையின் மேல் வைத்தேன்
காலத்தை அதன் அருகிலேயே வைத்தேன்
ஒன்றை ஒன்று தொட்டுவிடாதபடி

சட்டையை தொங்க விட்டபோது
எழுத்துகள் கொட்டி உருண்டோடின

வாயையும் காதுகளையும்
உணவு மேசையில் வைத்து விட்டு
உண்டு முடித்தேன்

வெளியில் மீண்டும் கிளம்புகையில்
வாகனத்தின் கீழ் சிக்கிக்கிடந்த
என் கால்களை
செல்ல நாய் கடித்துக் கொண்டிருந்தது

செல்லும் வழியில் பெரிய மைதானத்தோடும்
வரிசையான கட்டிடங்களோடும்
மெல்லிய இரைச்சலோடுமிருந்த
என் மூளை என்னை நலம் விசாரித்தது .

அனைத்தையும் கடந்து
பிழைப்பையும் கடமையையும்
பிரித்தறிய முடியா நாற்காலியில்
அமர்ந்தேன்

தலைக்கு மேல் எண்ணம்
வேகமாக சுழன்றதில்
புழுங்கிக் கொட்டியது .

ஒருவழியாய் மாலையில்
வெளியே வந்தபோது
எதிரே இருந்த பெரிய மரத்தில்
சின்னஞ்சிறு மஞ்சள் பூக்களில்
சிரித்துக் கொண்டிருந்தது
போன ஞாயிறு நான் தொலைத்திருந்த
என் மனம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.